• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் - ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 16 மற்றும் ஒக்டோபர் 16 ஆம் திகதிகளுக்கு இடையில் நடைபெறும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்க மாட்டார்.

இதற்கு முன்னர் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியை சந்தித்த அவர் 2016 இல், மற்றொரு இழப்பை எதிர்பார்த்து, பொது வேட்பாளரை பரிந்துரைத்தார். அந்த வெற்றியில் ஆட்சியைப் பிடித்தார்.

எவ்வாறாயினும் இந்த முறை அவர் அதிஷ்டத்தால் மட்டுமே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக தம்மிக்க பெரேரா தெரிவு செய்யப்பட்ட நிலையில், ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்த கட்சியுடன் கீழ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முயற்சித்தாலும் நிச்சயம் தோல்வியை சந்திக்க நேரிடும். நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் ரணில் விக்கிரமசிங்க போன்ற வயதான அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 65 வயதிற்குட்பட்ட புதிய ஜனாதிபதியை நாடு தெரிவு செய்யும்.

வாழ்க்கைச் செலவினங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தில் மக்கள்; வீதிக்கு இறங்கிப் போராடுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

மக்கள் இதைச் செய்யும்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் சட்டவிரோத உத்தரவுகளை வழங்குவார்கள்.

ஆனால் அவற்றைச் செயல்படுத்த கூடாது. தற்போதைய ஜனாதிபதி ஓய்வு பெறும்போது பாதுகாப்பாக இருப்பார்,

அதே நேரத்தில் உத்தரவை நிறைவேற்றியவர்கள் சட்டரீதியான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply