• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவாஜி ஃபிலிம்ஸின் முதல்படம் புதிய பறவை

சினிமா

மனதைக் கொள்ளை கொள்ளும் , அற்புதமான பாடல்களும், இயற்கை அழகு கொஞ்சும் இடங்களில் கண்கவர் படப்பிடிப்பும், அழகின் உருவகமாக சரோஜாதேவியும், மாறுபட்ட,  அற்புதமான நடிப்புடன் சௌகாரும், அத்துடன் சஸ்பென்ஸும் இணைந்த, சிவாஜி பிலிம்ஸின் முதல் சொந்தப் படம் 'புதிய பறவை'.
படத்தில், நடிகர் திலகத்துக்கு  சரோஜாதேவி மற்றும் சௌகார் என்று இரண்டு ஜோடிகள் என்றுதான் பொதுவான பார்வைக்குத் தெரியும்.. ஆனால் , உற்றுக் கவனித்தால் அவருக்கு மூன்றாவது ஜோடி ஒன்றும் உண்டு என்று புரியும்.
அந்த மூன்றாவது ஜோடிதான்.... சிகரெட்..
நடிகர் திலகம் நிறையப் படங்களில் புகை பிடிப்பதைப் போல நடித்திருந்தாலும், இந்தப் படத்தைப் போல வேறெந்த ஒரு படத்திலாவது படம் முழுவதும் புகை பிடித்தபடி நடித்திருப்பாரா என்று தெரியவில்லை.. அதிலும் காதலை மையமாகக் கொண்ட ஒரு அற்புதமான படம் முழுவதும் சிகரெட் பிடித்தபடி வருவது என்பது சற்று வியப்பானதுதான்...
அவர் நடிப்பில், தன் உடல் அசைவில்,  ஏகப்பட்ட யுக்திகளைப் படத்தில் கையாண்டிருந்தாலும், உயிரற்ற ஒரு பொருளான சிகரெட்டைக் கையில் வைத்துக் கொண்டு எப்படி ஒரு ஒப்பற்ற நடிப்புச் சாம்ராஜ்யத்தை இந்தப் படத்தில்  நடத்தினார், என்பதைப் பார்த்து வியந்த ஒரு பதிவுதான் இது.
படம் முழுவதும் தொடர்ச்சியாக ஒவ்வொரு காட்சியிலும், அந்த சூழ்நிலையில் அவரது மன நிலையும், உணர்ச்சிகளும்  எப்படி இருந்தன என்பதை, அவர் சிகரெட் பிடித்த பாவனையிலேயே மிகத் துல்லியமாக நமக்கு உணர்த்துவதுடன், அவரது குணநலம்  எத்தகையது என்பதையும் நன்கு புரிய வைப்பார்....
கப்பலில், முதல் முதலாக, VKR உம், சரோஜாதேவியும் இவர் அமர்ந்திருந்த மேஜையின் அருகில் வந்து நாட்காலிகளில் அமரும்போது, இவர் கையில்  சிகரெட் இருக்கும்... VKR வயதில் பெரியவர்.. அருகில், அழகான நளினமான இளம் பெண் லதா என்னும் சரோஜாதேவி . இருவருமே புதிதாக அறிமுகமானவர்கள்.. புகைத்த புகையை அவர்கள் முன்பு நேரடியாக ஊதுவது அநாகரீகம்.. 
இவர் என்ன செய்வார் தெரியுமா ? சிகரெட்டைத் தன் வலதுபுறம் தோள் அளவு உயர்த்தி, லேசாக முகம் திருப்பிப் புகையைப்  பின்புறம் ஊதுவார்..
அப்போது அவர் செய்த செயல், நாகரிகத்தின் உச்சம் மட்டும் அல்ல, பெரும் செல்வந்தனாக இருந்தாலும்  உயர்ந்த பண்பு கொண்டவர் என்பதையும்  விளக்கும் வண்ணம் இருந்தது.
பின்னர் கப்பல் கேப்டன் வேண்டுகோள் விட, அதற்கேற்ப லதாவை ஒரு பாட்டுப் பாடச் சொல்லி மாட்டி விட்டு விட்டு, வலது விரலிடுக்கில் சிகரெட் புகைய இரண்டு கைகளும் தட்டுவது  ஜாலி மூடை வெளிப்படுத்தும் அற்புதம்..
"உன்னை ஒன்று கேட்பேன்...." பாடலின் இறுதி வரிகளின் போது, உதடுகளில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க, இரண்டு கைகளும் பியானோவை இசைத்துக் கொண்டிருக்க, பாடல் முடிந்த உடன் அப்போதும் வாயில் சிகரட்டைச் சுமந்து கொண்டே அற்புதமாகக் கைதட்டுவது, எவ்வளவு தூரத்துக்கு அவர் அப்பாடலை ரசித்து மனம் மகிழ்ந்தார் என்பதைக் காட்டும்..
சாதாரணமாக, உயரத்தில் ஏறும்போது யாருக்குமே லேசாக மூச்சு வாங்கும்.. அது இயல்பு. அந்தச் சமயத்தில் சிகரெட் பிடிப்பது மிகவும் சிரமம்.
முதல் முதலாக VKR , மற்றும் லதாவுடன் தேயிலைத் தோட்டத்தில் வாக்கிங் போகும்போது, VKR மிகவும் சிரமப்பட , நடிகர்திலகமோ, உயரமான பகுதியை நோக்கி நடக்கும்போதும் அநாயாசமாகப் புகை பிடித்தபடியே நடப்பார்..அவர் எவ்வளவு திடகாத்திரமான உடல் நலம் கொண்டவர் என்பதைச் சொல்லாமல் சொல்லுவார்...
பின் லேசாக நின்று, "இதுதான் நம்ம டீ எஸ்டேட்..மூவாயிரம் ஏக்கரா..." என்று வலது கையில் சிகரெட் புகையப் புகையக் கையை நீட்டி விவரிப்பது, அவரது செல்வச் செழிப்பை உணர்த்தும் விதமாக இருக்கும்.. 
அதன் பின், மேலும் பேசியபடியே, கையில் புகையும் சிகரெட்டின் சாம்பலை, நடக்கும் வழியிலோ, தேயிலைச் செடிகளின் மேலோ அல்லது இலைகளின் மேலோ தட்டாமல், லேசாகத் திரும்பி, தேயிலைச் செடிகளின் இடையில் உள்ள இடைவெளியில் தட்டுவார்... என்ன ஒரு அற்புதம் பாருங்கள்.!!
பெரும் செல்வந்தனாக இருந்தாலும், இளம் வயதினனாக இருந்தாலும், எவ்வளவு பொறுப்பு  நிறைந்தவர் அவர் என்பதை மட்டும் அல்ல, சிகரெட் சாம்பலால் இலைகள் கருகி விடுமே என்ற அவரது அக்கறையையும் மறைமுகமாகப் புலப்படுத்துவார்... 'இப்படிப்பட்ட மென்மையான, இனிய பண்புடையவரா ஒரு கொலையைச் செய்தவர்' என்று பிற்பாடு உண்மை அறிந்து  நாம் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாவதற்கு, இது போன்ற அவரது  செயல்கள் எல்லாம் ஒரு அடிப்படைதான்.
பின்னர் ஒருநாள் நள்ளிரவில், உறக்கம் வராமல், ஊட்டியில் உள்ள வீட்டில், குளிர் போக்கும் வெப்ப அடுப்பின் முன் தனிமையில்  அமர்ந்தபடியே அவர் சிகரெட் பிடிப்பது மிகவும் இயந்திரத்தனமாக இருக்கும்.. அதில், அவரது அப்போதைய குழம்பிய மன நிலையையும், தான் வாழ்வில் உணரும் வெறுமையையும், எந்த விதமான வார்த்தைகளையும் பேசாமல், வெறும் சிகரெட் பிடிப்பதிலேயே நம்மை உணர வைப்பார். 
பின்னர் லதா படிகளில் கீழே இறங்கி வந்து, இவரிடம் உறக்கம் வராமல் இருப்பதைப் பற்றிக் கேட்டுவிட்டு "இது எனக்குப் புது அனுபவம்" என்று லதா சொல்லும்போது, சிகரெட்டிலிருந்து புகையை மெதுவாக ஒரு இழுப்பு இழுப்பார் பாருங்கள்...மனதில் அவருக்கு அப்போது தோன்றிய ஒரு சிறு நிம்மதியை அப்படியே அது புலப்படுத்தும்...

பிறகு, இவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப "உன்னை ஒன்று கேட்பேன்" பாடலை லதா மீண்டும் பாட, அதைக் கேட்டபடியே அமைதியாக இவர் சிகரெட் புகையை உள்ளிழுத்து, மனதில் தோன்றிய மெல்லிய ஆனந்தத்தை பிரதிபலிப்பார்.
"காதல் பாட்டுப் பாட 
காலம் இன்னும் இல்லை.."  
வரிகளின் போது, சிகரெட்டை உறிஞ்சக் கைகளை மேலே கொண்டு வந்தவர், அதை வாயில் கூட வைக்காமல் அப்படியே நிறுத்திக் கொண்டு பாடலை ஆனந்தமாக ரசிப்பார்...
சிகரெட்டை உறிஞ்சிப் புகைத்து, தன் மனநிலையை வெளிப்படுத்துவது மட்டும் அல்லாமல், சிகரெட்டை உறியாமலேயே, தன் ஆனந்தமான உணர்வைப் புலப்படுத்துவார்.
( இதே போன்று சிகரெட்டை உறியாமல் தன் உணர்வை, படத்தில் இன்னொரு முக்கியமான இடத்திலும், வெளிப்படுத்தியிருப்பார்.. அதைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்..)
பாடல் முடியும்போது, இவர் அமர்ந்தபடியே உறங்கி விடுவார். அப்போதும் விரலிடுக்கில் சிகரெட்டை இறுக்கிப் பிடித்தபடியேதான் இருப்பார்.. அவரது நிம்மதியற்ற வாழ்வில், சிகரெட் ஒன்றுதான் அவருக்கு ஆறுதல் தந்து வரும் ஒரே விசயம் என்பதை உணர்த்துவது போல இருக்கும் அது. 
அடுத்து வருவதுதான், படத்தின் ஹைலைட்டான, சிகரெட் புகையும் அவருடன் போட்டி போட்டு நடித்த,  ஃபிளாஷ் பேக்கில் வரக்கூடிய, "பார்த்த ஞாபகம் இல்லையோ..." நைட் கிளப் பாடல் காட்சி. 
இதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதினாலும் முடியாது. மிகப் பெரிய தனிப்பதிவே தேவைப்படும்.  எனவே முடிந்தவரை சுருக்கமாகச் சொல்கிறேன்..
சிகரெட் லைட்டரில் சுருட்டைப் பற்ற வைப்பதே படு ஸ்டைல்.. பற்ற வைக்கும்போதே வெண்புகை மேகமாக வெளியே செல்வது அமர்க்களம்.. சுருட்டிலும் புகை, உதட்டிலும் புகை.. பணக்கார இளைஞன் என்ற தோரணையை இந்த ஒரு செயலிலேயே படம் பிடித்துக் காட்டி விடுவார்.. 
பாடலின் ஆரம்ப வரிகளி்ல், உணர்ச்சியற்றுப் புகைப்பதிலேயே, அன்பான தாயை இழந்த தன் வெறுமையைக் காட்டுபவர், பின்னர் சௌகார் ஜானகியை முதன் முதலில் பார்க்கும்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் புகையை இழுப்பார்..
"வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..." என்ற வரிகளின் ஆரம்பத்தில் புகை பிடிக்கும் ஸ்டைல் லேசாக மாறி, அந்த வரிகளின்  இறுதியில், மனதில் லேசாக ஒரு மாற்றம் தோன்றுவதன் அடையாளமாக, பெரு விரலையும்  சுட்டு விரலையும் இணைத்து சிகரெட்டை உள்ளிழுத்து, பின்னர் முகத்தை லேசாக மேலே உயர்த்திப் புன்னகையுடன் புகையை வெளியே விடுவார்...
" அந்த நீல நதிக் கரையோரம் ..." வரிகளின் போது சௌகாரை வியந்து பார்த்தபடி, ஒரே உறிஞ்சுக்கு இரண்டு முறையை புகையை வெளி விடுவார்.. அலை பாயும் மனதின் அடையாளம் அது என்பதைச் சொல்லாமல் சொல்லுவார்.. 
"நாம் பழகி வந்தோம் சில காலம்..." வரிகளின் போது, மோதிரம் மின்னும் வலதுகையின் ஆள்காட்டி  விரலைப் பல்லைத் தொட்டபடியே உதட்டில் வைத்து வியந்து, பின் இடது உதட்டோரம் புகைந்தபடி இருந்த சுருட்டை, இடது கையை ஸ்டைலாக உயர்த்தியபடி எடுத்து, பின் முகத்தை உயர்த்திப் புகையை வெளி விடுவார்... அவர் மனம் மெல்ல மெல்ல சௌகார் வசம் செல்லுவது நமக்குப் புரியும்.
"உந்தன் மனதைக் கேள் அது சொல்லும் நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்.." என்ற வரிகளின் போது மெய்மறந்து அதைக் கேட்டு, மெல்லப் புன்னகைத்தபடியே மெதுவாகச் சுருட்டை உதடு வரை கொண்டு வருவார்... ஆனால் அதை வாயில் வைக்காமல், கன்னத்தையும் பிறகு கீழ் உதடையும் விரல்களால் தடவிக் கொள்வார்..  புகைப்பதைக் கூட மறந்து போய், அவரது மனம் முழுவதும் சௌகாரை நெருங்கி விட்டதன் அறிகுறிதான் இது...
( ஏற்கெனவே நான் சொன்ன, புகைக்காமலே தன் மன உணர்வை அவர் நமக்கு  உணர்த்தும் இரண்டாவது காட்சி இதுதான்)
அந்த வரிகள் முடிந்து, BGM ஒலிக்கும்போது, மேலே உயர்த்திய இடது கையில் பிடித்த சுருட்டை இழுத்துப் புகை விட்டபடியே, இடது கை நடு விரலால் மேல் உதட்டைத் தடவிக் கொள்வார்..
நீண்ட நேரம் மெய் மறந்து புகைத்ததால் சுருட்டின் சூடு உதட்டில் பட்டிருக்கும், அதைத் துடைக்கிறார் போலும் என்று நாம் எண்ணினாலும், சௌகார் மேல் ஏற்பட்ட ஈர்ப்புதான் அந்த மெய் மறப்புக்குக் காரணம் என்பதைப் புரிய வைக்க அவர் செய்த செயல் அது.
"பார்த்த ஞாபகம் இல்லையோ..." என்ற பல்லவி வரிகளை சௌகார் மீண்டும் பாடும்போது, வாயில் இருந்த சுருட்டை இடது கையால் எடுத்துப் புகை விட்டபடி கையை லேசாக உயர்த்திப் பிடிப்பார்... பின் அப்படியே கையே மெதுவாகக் கொண்டு வருவார்.. பாடல் முடிந்த உடன் , வாயிலிருந்து சுருட்டுப் புகை வர, கை தட்டுவார்..பின்னர், லேசாக தலையைக் குனிந்தபடி மெய்மறந்து கை தட்டுவார்.. சௌகார் வசம் அவர் மனம் முழுமையாகச் சென்று விட்டது என்பதன் விளக்கம்தான் அது.
பின்னர் சௌகார் இவரிடம் அறிமுகப்படுத்தப்படும்போது, உடனே எழுந்து நிற்பதுடன், வாயில் இருந்த சுருட்டையும் வெளியே எடுத்துக் கொள்வார்.. ஒரு பெண்ணுக்குத் தர வேண்டிய உயர்ந்த பட்ச நாகரிகம் அது என்பது மட்டும் அல்ல, சௌகாரை எந்த அளவு அவர் உயர்வாக மதித்தார் என்பதும் இந்த ஒரு செயலின் மூலமாகவே புரியும்..
பின்னர் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதும் சௌகாரைப் பார்த்தபடியே ஒருமுறை  மெல்லப் புகைப்பார்.. பிறகு காட்சி முழுவதும் அவரது  இடது கையில் சுருட்டுப் புகைந்தபடியே இருக்கும்.. பின் அம்மாவைப் பற்றிய பேச்சு வந்தபோது, கையை லேசாக உயர்த்தி சுருட்டைப் பார்த்தபடியே பேசுவார்.. அப்போதுதான் அறிமுகமான ஒரு இளம் பெண்ணுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் தடுமாறுவதையும், அம்மாவைப் பற்றிய நினைவு மீண்டும் வந்ததால் அதனால் ஏற்பட்ட மன வருத்தத்தையும் அப்படி உணர்த்தியிருப்பார்..
"ஓ...ட்வொல்வ்" என்று சொல்லியபடி இடது கை மணிக் கட்டை விலக்கிக் கடிகாரத்தில்  மணி பார்க்கும் போதும் இடது கையில் சுருட்டுப் புகைந்தபடி இருப்பது அவருடைய மெஜஸ்டிக்கான அந்தஸ்த்தை நாம் உணர வைக்கும்...
பின்னர் சௌகாருடன் கிளப்பை விட்டுக் கிளம்பும்போது, இடது கையால் ஆஸ் டிரேயில் சுருட்டை நசுக்கி அணைத்து விட்டுக் கிளம்புவது, சௌகாருக்கு அவர் காட்டும் பண்பான நாகரீகம்..
முதலிரவில் சௌகாருக்காகக் காத்திக்கும்போது, இருள் பின்னணியில் அவரது உருவமும், அவர் விடும் புகையும் மட்டுமே தெரியும்...அவரது வாழ்வே இருளாக மாறி விட்டதை உணர்த்தும் காட்சி அது..
பிறகு, சௌகார் காரில் வீட்டை விட்டுப் போக, அவரை இன்னொரு காரில் இவர் பின் தொடரும்போது வாயில் சிகரெட் இருக்க,  புகையை இழுத்தபடியேதான் காரை ஓட்டுவார்.. அதில் 'இவள் எங்கே போய் விடப் போகிறாள்' என்பது போன்ற ஒரு அலட்சியம்தான் தெரியும்.. ஆனால், போகப் போக  சௌகார் வண்டியின் வேகத்தைக் கூட்டியபடியே காரை படு வேகமாக  ஓட்டிய போது, இவர் சிகரெட்டை வேகமாக வெளியே வீசி விட்டுக் காரை ஓட்டுவார்.  அவர் சிகரெட்டைக் காருக்கு வெளியே வீசிய விதத்திலேயே, பிரச்சனை எவ்வளவு  தீவிரமானது என்பது நமக்கு நன்கு புரியும்.
பிற்பாடு, ஊட்டி வந்த பின்னர், ரங்கனாகிய MR ராதா, மற்றும் புதிய சௌகார் ஆகியோரது வருகையால், லதாவுடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தம் நின்று போக, இவருக்கும் இவரது  தன் நண்பராகிய போலீஸ் இன்ஸ்பெக்டர் OAK தேவருக்கும் இடையில்  போலிஸ் ஸ்டேசனில் நடக்கும் சில காட்சிகள் அருமையானவை...
ஸ்டேசனில் சிகரெட்டைப் பற்ற வைத்து விட்டு, வேகமாகத் தீக்குச்சியைக் கீழே வீசுவதிலேயே கொப்பளிக்கும் இவரது கோபம் தெரியும்.. சிகரெட்டைப் புகைத்தபடியே முன்னும் பின்னும் நடப்பதில் அவரது குழப்பமான மனநிலை புரியும்..
இன்ஸ்பெக்டர், "என்னை என்ன செய்யச் சொல்றே" என்று கேட்ட உடனே, சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் நசுக்கி மிதித்து அணைப்பதில் இவரது விரக்தியும் கோபமும் கையாலாகாத்தனமும் அப்பட்டமாகத் தெரியும்..
பிறிதொரு முறை எதிர்பார்த்த செய்தி கிடைக்கத் தாமதமாகும் போது, அதே ஸ்டேசனில், புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை அப்படியே வலது புறம் தள்ளித் தோள் வரை உயர்த்திக் கொண்டு பேசுவது அவரது விரக்தியின் இன்னொரு வகையான வெளிப்பாடு.  
சிங்கப்பூர் டிரங்கால் தொடர்பு ரங்கனால் ரகசியமாகத் துண்டிக்கப்படும் காட்சிக்கு  அடுத்த காட்சியில், வலது கையில் புகையும் சிகரெட்டை வைத்துக் கொண்டே யோசித்தபடி முன்னும் பின்னும் நடப்பார்.. அப்போது அவரது வலதுகையை , பிடித்திருக்கும் சிகரெட் அதன் மேலே கொஞ்சமும்  படாதபடி, ஷோபாவின் மேல் வைப்பார். எந்த நிலையிலும் தடுமாறாத தெளிவும் உறுதியுமான மனமும் கொண்டவர் தான் என்பதைப் புலப்படுத்தும் செயல் அது.
அப்போது ரங்கன் அங்கே வர, 'வா இங்கே' என்று அவனை அழைத்து, சிகரெட்டைப் புகைத்தபடியே நடந்து, ஒரு இழுப்பு இழுத்து விட்டு அதை வேகமாகக் கீழே போட்டு விட்டுப் பீரோவைத் திறந்து பணத்தை எடுத்து அவனுக்குத் தருவார்.. அவர் வேகமாக சிகரெட்டைக் கீழே போடுவதில், அந்தப் பிரச்சனையில் இருந்து விரைவில் வெளியே வர வேண்டும் என்ற ஒரு அவசரம் தெளிவாகத் தெரியும்..
அடுத்த காட்சியில் போலிஸ் ஸ்டேசனில் நாட்காலியில் நன்கு பின்புறம் சாய்ந்தபடி சிகரெட் புகைப்பார்.. பின்னர், சிகரெட்டை எடுத்து முகத்திலிருந்து அரை அடி தள்ளிப் பிடித்தபடி பேசுவார்.. அதில் அவர் உணர்த்துவது ஒரு கேமரா கோணம்.. அதாவது, அவர் உட்கார்ந்திருந்த அந்த நிலையில் சிகரெட்டை முகத்தினருகில் வைத்துப் பேசினால்,  இன்ஸ்பெக்டர் முகத்தை சிகரெட் மறைக்குமாம்.... எனவேதான் தள்ளி வைத்துப் பேசுகிறாராம்...அடே அப்பா.. நடிக்கும் காட்சியை, நடிக்கும் போதே, அப்படியே மனதுக்குள்ளேயே படமாக ஓட்டிப் பார்க்கும் என்ன ஒரு அபாரமான திறமை மற்றும் காமிரா கோணம் பற்றிய அறிவு  ??
ரங்கன் அங்கே வந்தபோதும் அதே நிலையில் அசராமல் சாய்ந்து அமர்ந்தபடியே புகை பிடிப்பார்...
 "ரங்கன் நீங்கள் பணம் கொடுத்ததாகச் சொல்வது உண்மையா ?" என்று இன்ஸ்பெக்டர் கேட்ட போதும் அலட்சியமாகப் புகையை ஊதியபடியே "ஆமாம்" என்று சொல்வார்.. இவருடைய  அசாத்திய தன்னம்பிகையை உணர்த்துவதாக இருக்கும் அந்தக் காட்சி...
பின்னர், "பணத்தைக் கொடுத்துச் சித்ராவையும் என்னையும் வீட்டை விட்டுப் போகச் சொல்கிறார்" என்று ரங்கன் சொல்வதை, அவனை முறைத்துப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டு, சிகரெட்டை இழுத்து மூக்கின் வழியே புகையை வெளியே விடுவார்.. ரங்கன் மேல் பொங்கி வரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் மிகுந்த சிரமத்துடன் அவர் கட்டுப் படுத்திக் கொள்வதை அப்படி உணர்த்தி இருப்பார்.
பின்னர் இன்பெக்டரிடம் "இவனை உடனே வெளியே போகச் சொல்லு" என்று சொல்லிக் கையை நீட்டும்போது, இரண்டு விரல்களின் இடையில் சிகரெட் புகைய மற்ற மூன்று விரல்கள் மடங்கி இவரை நோக்கி இருக்கும்..கோபத்தின் உச்சிக்கு அவர் போய் விட்டதை உணர்த்துவதாக இருக்கும் அது...
அடுத்த நாள் இரவில் இவரும் லதாவும் தோட்டத்தில் அமர்ந்து, கண்களில் நீர் வழிய, உருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தபோது, "குட் ஈவினிங் மிஸ்டர் கோபால்" என்றபடி இன்ஸ்பெக்டர் அங்கு வர, இவர் சுதாகரித்துக் கொண்டு எழுந்து, கண்களில் வழிந்த நீரை லாகவமாக விரலால்  துடைத்தபடி "குட் ஈவினிங்" என்று கம்பீரமாகச் சொல்லியபடி, பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு, சதுரமான  ஒரு சிகரெட் கேஃஸை எடுத்து, அதை ஸ்டைலாகத் திறந்து சிகரெட் ஒன்றை எடுத்து, வாயில் வைத்துப் பற்ற வைப்பார்..
சற்றும் பதற்றமில்லாமல், நிதானமாக அவர் சிகரெட் பற்ற வைத்த விதம், இரவு வேளையில் தோட்டத்தில் தானும் லதாவும் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை என்பதை இன்ஸ்பெக்டருக்கு உணர்த்தும் விதமாக இருக்கும். 
பற்ற வைத்த தீக்குச்சியின் நெருப்பை இரு கை விரல்களிலும் மறைத்து அவர் சிகரெட் பற்ற வைப்பது, தோட்டத்தில் காற்று வீசுகிறது என்பதையும், அதனால் நெருப்பு அணையாமல் இருக்க அவர் அப்படிச் செய்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ளும் விதமாக இருக்கும்.
பிறகு புதிய சௌகாரின் கைரேகை கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும் என்று இன்ஸ்பெக்டர் சொன்னபோது, "தேங்க் யூ குமார்" என்று மெதுவாகச் சொல்லியபடியே, இடது கையில் இருந்த சிகரெட்டை வலது தோள்பட்டை வரை உயர்த்தி, மூன்று முறை மெல்ல ஆட்டி விட்டுப் பின் வாயில் வைத்துப் புகைப்பார்..
மிகவும் மனம் தளர்ந்து, அனைத்து வாய்ப்புகளையும் இழந்த நிலையில், கைரேகை பற்றிய இன்ஸ்பெக்டரின் பேச்சு அவருக்கு லேசான நம்பிக்கை ஒளியை ஊட்டியிருக்கிறது என்பதை அப்படி நமக்கு உணர்த்துவார்.
புதிய சௌகாரின் கைரேகைகளை எடுக்க முயலும் காட்சிக்கு முன்பு, சிகரெட் புகைத்தபடி நடந்து சென்றவரை, "கோபால் சாப்பிட வாங்க" என்று லதா அழைக்க, திரும்பி மெல்ல அருகில் வந்தவர், லதாவின் முகத்தைப் பார்க்காமல் சிகரெட்டைப் பார்த்தபடியே, "எனக்குப் பசியில்லை..என்னை யாரும் தொந்தரவு செய்யாதீங்க" என்று சொல்லி விட்டுச் சிகரெட்டைக் கீழே போடுவார்..
'தான் மனதார நேசிக்கும் லதாவையும் தன்னையும், சம்பந்தமில்லாத யாரோ ஒருவனும் ஒருத்தியும்  இடையில் வந்து பிரித்து விட்டார்களே.. இனி லதாவைத் தான் அடைவது நடக்குமோ நடக்காதோ' என்ற அவரது மனமுடைந்த தோல்வி நிலையைக் காட்டுவது போல இருக்கும் அவர் சோகமாகச் சிகரெட்டைக் கீழே போடுவது...
இதுதான் படத்தில் அவர் புகை பிடிப்பது போல வரும் கடைசிக் காட்சி...
அதற்குப் பின்னர் வரக் கூடிய கைரேகையைப் பற்றி விவாதிக்கும் காட்சிகளிலும், அவர் லதாவின் மேல் உள்ள காதலால் உண்மைகளைக் கூறி விடும் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும், அவர் சிகரெட் பிடிப்பதற்கான காட்சி அமைப்பு இல்லை... காரணம், அவரே நேரடியாகத் தன் வாயாலேயே விசயங்கள் அனைத்தையும் கூறி விடுவதால், சிகரெட் பிடித்து அதன் மூலம் தன் மனநிலையையும் , உணர்ச்சிகளையும்  மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான்..
மிகப் பெரும் செல்வந்தன், எதையும் கேட்கவோ கட்டுப்படுத்தவோ யாரும்  இல்லாத ஒரு இளைஞன், எனவே அவன் புகை பிடிப்பது சர்வ சாதாரணம் என்றுதான் யாருக்குமே நினைக்கத் தோன்றும்.
ஆனால், அதே பணக்கார இளைஞன், சாதாரணமாக ஒரு சிகரெட் பிடிப்பதையே காட்சிக் காட்சி வேறுபடுத்தி, அதன் மூலமே அந்தக் காட்சியின் சூழ்நிலையைத் தெளிவாகப் புரிய வைத்த இந்த அற்புதமான திறமையை எங்கே இருந்து எப்படிக் கற்றார் இவர் ?
உலகத் திரைப்பட வரலாற்றிலேயே, இப்படி ஒரு படம் முழுவதும் சிகரெட் புகைத்து அதன் மூலம் ஒருவரின்  உணர்வுகளையும் மனநிலையையும் ஒருவர் படம் பிடித்துக் காட்டியதாக நான் படித்ததும் இல்லை, பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை...
எத்தனை ஜென்மம் எடுத்தாலும், மாபெரும் நடிப்புக்கடலான அவரைப்  போல இன்னொருவர் பிறந்து வர முடியும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
 

 

Leave a Reply