• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் குறித்து அம்பிகா விசனம்

இலங்கை

சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட 8 கைதிகள் ஏற்கனவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு மேலும் 8 கைதிகள் மத்தியில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள அம்பிகா சற்குணநாதன், சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்திலேயே இருப்பதாகவும், எனவே ஏதேனும் நோய்த்தொற்றுப்பரவல் ஏற்படும்போது கைதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி பெரும் எண்ணிக்கையான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்களின் ஊடாக சிறைச்சாலைகளில் சாதாரணமாகத் தடுத்து வைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கைக்கு அப்பால் சென்று இடநெருக்கடி ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அத்தோடு கொரோனா தொற்றுப்பரவல் ஏற்பட்ட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளின் சுகாதார நலன்கள் உரியவாறு பேணப்படாமை மற்றும் அங்கு நிலவும் குறைபாடுகள் என்பன பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply