• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கம்பெனி அளித்த விருந்தில் 700 பேருக்கு கடுமையான வயிற்று வலி

ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம், ஏர்பஸ் (Airbus). பயணிகள் போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கும் ஏர்பஸ், உலகிலேயே முன்னணி ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டிலும் கிளை உண்டு.

பிரான்ஸில் உள்ள தனது நிறுவன ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்க முடிவு செய்தது ஏர்பஸ் அட்லான்டிக். இந்த விருந்தில் சுமார் 2,600 ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்த விருந்து, மேற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டது.

விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் பரிமாறப்பட்டன.

ஆனால், உயர்தரமான உணவு வகைகள் வழங்கப்பட்ட இதில் பங்கேற்ற 24 மணி நேரத்தில் சுமார் 700 பணியாளர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட உபாதைகளும் சேர்ந்து கொண்டன.

பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்நாட்டு சுகாதார துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து ஏர்பஸ் செய்தி தொடர்பாளர், "நாங்கள் விருந்தளித்த ஒவ்வொரு உணவு வகையின் மாதிரியையும் வைத்துள்ளோம். விசாரணைக்கு சுகாதார துறையுடன் ஒத்துழைக்கிறோம். விசாரணை நிறைவடைய சில நாட்கள் ஆகலாம் என நினைக்கிறோம்" என தெரிவித்தார்.
 

Leave a Reply