• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் தவிசாளர் நிரோஷ்க்கு எதிரான நிலாவரை வழக்கு சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்காமையினால் ஒத்திவைப்பு

இலங்கை

யாழ். நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தடுத்ததன் மூலம் அரச கருமங்களுக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தடை ஏற்படுத்தினார் என தொடரப்பட்ட வழக்கில்  சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைப்பதில் தாமதம் நிலவுவதால் எதிர்வரும் ஆண்டின் யூன் மாதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணை  ஒத்திவைக்கப்பட்டது.
 
இன்றைய தினம் (15.12.2023) வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தவணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபரின் கிடைக்கப்பெறவில்லை என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந் நிலையில் எதிர்வரும் ஆண்டின் யூன் மதம் 12 ஆம் திகதிக்கு வழக்குத் தவணையினை நீதிபதி ஒத்திவைத்தார்.
 
கடந்த 2021 ஆண்டின் ஆரம்பத்தில்; தொல்லியல் திணைக்களமும் இராணுவத்தினரும் இணைந்து நிலாவரை கிணறு அமைந்துள்ள வளாகத்தில் பௌத்த விகாரை அமைப்பது போன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் அத்திபாரம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டபோது, அதனை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தொல்லியல் திணைக்களத்தினர் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பெருமளவானவர்களுடன் நிலாவலைப் பகுதிக்கு வருகை தந்து தமது அரச கருமத்திற்கு தொடர்ந்தும் தடை ஏற்படுத்திவருகின்றார் என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
 

இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இருதரப்பினையும் அழைத்து சமரச முயற்சி என்ற போர்வையில் -  தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குள் தவிசாளர் தலையிடக் கூடாது என வலியுறுத்தினர். எனினும் இன நல்லிணக்கத்தினை பாதிக்கும் வகையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள மயமாக்கத்திற்கு தன்னால் இடமளிக்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் வெளியேறியிருந்தார். .

 அதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்துகின்றார் எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அவ் வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வருட ஆரம்பத்திலும் நிலாவரையில் பௌத்த வழிபாட்டிடம் ஒன்றை இராணுவத்தினர் அமைத்த நிலையில் அது வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பின் காரணமாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

Leave a Reply