• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாண்டோ சின்னப்பா தேவர்: தமிழ் சினிமாவில் விலங்குகளை வெற்றிபெற வைத்த சாதனையாளர்:

சினிமா

நான்கு முழ வேட்டியும், மேல்சட்டை அணியா வெற்று உடம்புமாக, அரைகுறை ஆங்கிலத்தோடும், அடித்து வீசும் வார்த்தைகளோடும் எத்தனையோ நடிகர்களையும் கையாண்டவர். மருதமலை முருகன், எம்.ஜி.ஆர், விலங்குகள் - இவை மூன்றும்தான் திரையுலகில் அவரது முதலீடு. யாரும் எளிதில் நெருங்கிப் பழகிட முடியாத எம்.ஜி.ஆர்., விடாமல் இறுதிவரை பாராட்டிய ஆச்சர்யத்துக்குரிய நட்புக்குச் சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.
முகம் காட்ட முடியாத சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கி, தயாரிப்பாளராக உயர்ந்து, இறுதிவரை வெற்றிக்கொடி நாட்டிய தயாரிப்பாளரின் கதை இது.
முதல் அமாவாசையில் பூஜை போட்டு மூன்றாவது அமாவாசைக்குள் முழுப்படத்தையும் முடித்துவிடும் தேவரின் வேகத்தில் கோடம்பாக்கமே கிடுகிடுத்தது. எம்.ஜி.ஆரை வைத்து மட்டுமல்ல, யானை, பாம்பை வைத்துக்கூட வெற்றிப்படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவரின் சாதனை அதிரடியானது.
#சாண்டோ_சின்னப்பா_தேவர்_யார்?
இப்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு 'சாண்டோ சின்னப்பா தேவர்' என்ற பெயர் அவ்வளவு பரிச்சயம் கிடையாது. 'தேவர் ஃபிலிம்ஸ்' என்று சொன்னால் ஓரளவுக்குத் தெரிந்திருப்பார்கள். அந்தக் காலத்தில் மிருகங்களை வைத்துப்படம் எடுத்தவர் என்று சொன்னால் அனைவரும் அறிவர்.
கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்தார் ’மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர்’. சுருக்கமாக, `எம். எம். ஏ. சின்னப்பா தேவர்` என்றழைக்கப்பட்ட சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுநர். நல்ல உடற்கட்டு உள்ளவர்.
நவீன உடலழகுக் கலையின் தந்தை என்றழைக்கப்பட்ட ஜெர்மானிய பாடிபில்டர் ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட ஈர்ப்பால், அக்கால பயில்வான்கள் பலரையும் போல தனது பெயரோடு சாண்டோ எனும் அடைமொழியைச் சேர்த்து அழைக்கப்பட்டார். அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும், அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார். மதுரைவீரன் படத்தில் சங்கிலிக் கருப்பனாக மிகக் குறைவான நேரமே வருவார். ஆனால் அவருடைய உருவம் அப்படியே மனதில் நிற்கும்.
’’அடேய் முருகா சீக்கிரம் சூர்யன உதிக்கச் சொல்லுடா, வள்ளி தெய்வானை கூட இருக்குற சந்தோஷத்துல என்ன மறந்திடாதேடா’’ என கடவுளையும் உரிமையோடு உறவாடும், தீவிர முருக பக்தராக அறியப்பட்ட சின்னப்பத்தேவர், தனது சிறுவயதில் குஸ்தி பார்ப்பதற்காக கோவிலுக்குச் செல்லாமல் தவிர்த்தவராம்.

யாரோ பயில்வான் அடையாளம் உணர்ந்தவராக அருகில் வந்து ’’அய்யாவு மகனா நீ...? உங்க வீட்ல எல்லாரும் கோயிலுக்குப் போறாங்களே, நீ போகலியா...?’’ என்றதற்கு, ’’மறுபடி என்னைக்கு குஸ்தி நடக்கும்னு தெரியாதுங்களே, சாமிய எப்பப் பார்த்தா என்ன...? மலையும் நகராது, சிலையும் பறக்காது’’ என்றாராம்.
#வாழ்நாள்_நட்பை_முதல்முறை_சந்தித்த_தருணம்:
சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள், தற்செயலாக ஒருவரைச் சந்தித்து பார்வையைத் திரும்பப் பெறவே முடியாமல் பிரம்மித்தார் தேவர். ‘’அந்திச்சூரியன் ஆளாகி வந்து நிற்கிறதா என்ற சந்தேகம். செக்கச்செவேலென்ற கம்பீரத் தோற்றம், களையான முகம், எவரையும் அசத்திவிடும் வசீகரச் சிரிப்பு. தன்னையும் அறியாமல் கையெடுத்துக் கும்பிட்டார் தேவர்’’ என்று அந்தத் தருணத்தை விளக்குகிறார் எழுத்தாளர் தீனதயாளன்.
‘’அண்ணே ஒருத்தர் வந்தாரே யாருண்ணே அவரு? ஜோரா இருக்காரு’’ என்ற தேவரின் கேள்விக்கு கிடைத்த பதில் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’
அப்போது எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பு, பின் நட்பாகி இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
#தயாரிப்பாளர்_அவதாரம்:
சென்ட்ரல் ஸ்டுடியோவில் எடிட்டராகப் பணியாற்றிய தன் உடன்பிறந்த தம்பி, எம்.ஏ.திருமுகத்தை அழைத்து தனது முதல் படத்தை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் சின்னப்பா தேவர். மனோகரா திரைப்படத்தின் எடிட்டர் அவர்தான். ஆனால், கதை பிடிக்கவில்லை என்று சொல்லி தம்பி மறுத்துவிட, தயாரிப்பாளர் எஸ்.ஏ.நடராஜன் இயக்கத்தில் 1955ஆம் ஆண்டு தேவர் தயாரிப்பில் வெளியான `நல்ல தங்கை’ சுமாராகத்தான் ஓடியது. ஆனாலும் அவர் துவண்டுவிடவில்லை.
அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கி, கதாநாயகனாக எம்.ஜி.ஆரையும் ஒப்பந்தம் செய்துவிட்டார். தொடர்ந்து நண்பர்களுடன் சேர்ந்து படம் தயாரிக்க விருப்பமில்லாமல், புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்க நினைத்தவருக்கு, தன் நிறுவனத்துக்கான பெயர் தேர்வில் சிக்கல் நீடித்தது. தமிழ் சினிமா செழிப்பாக இருந்த அந்த காலகட்டத்தில் தினம் ஒரு சினிமா கம்பெனி உதயமாகின. மருதமலை முருகன் ஃபில்ம்ஸ், ஸ்ரீ வள்ளி வேலன் கம்பைன்ஸ், சிவசுப்ரமணியன் மூவீஸ், செந்தில் ஆண்டவர் கிரியேஷன்ஸ், முத்துக்குமரன் பிக்சர்ஸ் என முருகனுக்கு எத்தனை பெயர்கள் உண்டோ, அத்தனையும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன.
கிருபானந்த வாரியாரை திரையில் காட்டியவர்
கலைஞர்களுக்கு ஈடாக விலங்குகளைப் பயன்படுத்தியவர்
 ’தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்தத் திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. வேகத்தில், தேவர் யாரும் கட்டுப்படுத்த முடியாத காட்டாற்று வெள்ளம் என்பதற்கு அதுவே சான்று.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்டு, திரையுலகை ஆச்சர்யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி.ஆரை தேவர், முருகா அல்லது ஆண்டவரே என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, முதலாளி என்றும் அழைத்துக்கொள்வர் என, தீனதயாளன் எழுதியுள்ளார்.
எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர். இதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்
சொல்லி அடித்த தேவர்
நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை திரைத்துறை. ஆரவாரமாக துவங்கப்படும் பல படங்கள் வழக்கமான பல பிரச்னைகளைத் தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயமாகிவிடுகின்றன. அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டியே வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கும் விஷயம்.
தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளையெல்லாம் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும். தேவர் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் மட்டுமல்ல இன்றும் ஆச்சர்யமான விஷயம்தான்.
குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார். மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.
மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கண்ணாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் பிரபலமானார். லட்சுமி காந்த் பியாரிலால் இசையில் பாடல்களும் செம்ம ஹிட்... ஏற்கனவே மேஜர் சுந்தர் ராஜனை வைத்து தேவர் எடுத்திருந்த தெய்வச்செயல் என்னும் படத்தையே சீர் படுத்தி கதை செய்திருந்தார்கள். ஆனால், படம் இந்தியில் ஓடு ஓடு என ஓடியதைத் தொடர்ந்து, ராஜேஷ் கண்ணா கேரக்டரில் எம்ஜியாரை வைத்து நல்ல நேரம் என ரீமேக் செய்தார். தமிழிலும் பாடல்கள் பெரும்புகழ் பெற்றன.
கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்குகளை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறியிருக்கும், என்கிறார் எழுத்தாளர் தீனதயாளன்.
அந்தக் காலகட்டத்தில் வந்த மற்ற படங்கள் போல், தேவரின் படங்களில் கலை அழகு மிளிராது. முக்கியமாக, பிரம்மாண்ட செட்களில் கனவுப் பாடல்கள் இருக்கவே இருக்காது. இலக்கண தர வசனங்கள் இருக்காது. ஆனால் கட்டிப்போடும் தொய்வில்லாத திரைக்கதை இருக்கும். அதற்கு காரணம் அவரது பிரத்யேக கதை இலாகா.
நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் போன்ற பிரச்னைகளில் திரையுலகம் இன்றும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில் நடிக்கும்போது, இந்திய திரையுலகின் பரபரப்பான கதாநாயகர்கள் பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பது, இப்போதும் வியப்புக்குரிய ஒன்றுதான்.
தேவர் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். படிப்பவர்களுக்கு பொறுமை வேண்டுமே...இந்தக்காலத்தில் வாசிப்பவர்கள் மிகக்குறைவு.

 

(விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழுக்காக)
 

Leave a Reply