• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக் கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது - முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்

இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட அதேநேரம் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார் என அசாத் மௌலானா சனல் 4 க்கு தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தடம் புரண்டமைக்கு அரசியல் தலையீடே காரணம் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன அவுஸ்ரேலியாவின் ஏ.பி.சி. ஊடகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்பு நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ராஜபக்ச பதவியேற்றதும் அவரது தரப்பினர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அந்த நேரத்தில், ஒரு பிரதமரோ அல்லது அமைச்சரவை கூட நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் 22 அதிகாரிகள் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் தனது கட்டளையின் கீழ் இருந்த 700க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அரசாங்கம் விதித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியின் சகாக்களை விசாரிக்கும் பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சியாக இதனை தான் பார்த்ததாகவும் இது மிகவும் சட்டவிரோதமானது என்றும் இந்த நடவடிக்கையால், பல அதிகாரிகள் அச்சப்பட்டதாகவும் சிலர் இனி அங்கு பணிபுரிய விரும்பாமால் இடமாற்றம் கோரியதாகவும் கூறியுள்ளார்.
 

Leave a Reply