• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது - நிதி அமைச்சின் செயலாளர்

இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய பட்ஜெட் 2024 டிகோடிங் என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் வருடத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்தால் முடிந்தாலும், சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விட இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதால் வரி நிவாரணம் வழங்க முடியாது.

2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் மூலம், அரச நிறுவனங்களால் திரட்டப்பட்ட உள்ளூர் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக அரச வங்கிகளுக்கு மறுமூலதனமாக்குவதற்கு 450 பில்லியனை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எவ்வாறாயினும், மறுமூலதனமாக்கல் நடவடிக்கை உள்ளூர் ரூபாய் மதிப்புள்ள சந்தைகளை பாதிக்காது 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடன் 1 டிரில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, அதேவேளை இலங்கை மின்சார சபையானது அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய 800 பில்லியன் கடனைக் கொண்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் காரணமாக, வரி செலுத்துவோர் நிதியிலிருந்து மூலதன உட்செலுத்துதல் மூலம் சந்திக்க வேண்டிய பெரிய இழப்புகளை பதிவு செய்யும் அபாயத்தை வங்கிகள் எதிர்கொள்கின்றன.

மறுமூலதனமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட 450 பில்லியன்களுக்கு மேலதிகமாக, இரண்டு பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளின் 20 வீத பங்குகளை மூலோபாய முதலீட்டாளர்கள் அல்லது பொதுமக்களுக்கு மூலதனத்தை மேம்படுத்தவும், வரி செலுத்துவோர் நிதியின் சுமையை குறைக்கவும் வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply