• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துபாயில் அரசு போக்குவரத்தில் அதிக முறை பயணம் செய்த பயணிகளுக்கு பரிசு

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பொது போக்குவரத்து தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 14-வது ஆண்டாக கடந்த 1-ந்தேதி 'உங்கள் வழியில் விளையாட்டுக்கள்' என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டது.

இதே நாளில் சாலை மற்றும் போக்குவரத்து தொடங்கிய 18-வது ஆண்டு விழா கொண்டாட்டமும் நடந்தது. துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் பஸ், மெட்ரோ ரெயில், டிராம், படகு, டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தாங்கள் விரும்பும் இடங்களுக்கு செல்ல முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது போக்குவரத்து தினத்துக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. அன்றைய தினம் அனைத்து ஊழியர்களும் தங்களது வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கார்பன் உமிழ்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொடர்பான பாதிப்புகள் குறைய உதவியாக இருக்கிறது. மேலும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் பொது போக்குவரத்து சேவையை அதிக முறை பயன்படுத்திய தலா 3 பேர் பரிசுகள் வழங்கி கவுரவிக்க தேர்வு செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 8 ஆயிரம் முறை பயணம் செய்த டெர்ரன் பாடியா முதல் பரிசையும், 7 ஆயிரம் முறை பயணம் செய்த சலேம் அல் சமகி 2-ம் இடத்தையும், 6 ஆயிரத்து 750 முறை பயணம் செய்த முகம்மது அப்தெல் காதர் 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பொது பிரிவில் 15 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த முகம்மது அபுபக்கர் முதல் பரிசையும், 14 ஆயிரத்து 422 முறை பயணம் செய்த முகம்மது அகமது ஜதா 2-ம் பரிசையும், 13 ஆயிரத்து 900 முறை பயணம் செய்த சிராஜ் அல் தின் அப்தெல் காதர் 3-வது பரிசையும் பெற்றனர். முதல் பரிசு பெற்றவர்களுக்கு 10 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு 7 லட்சம் நோல் பாய்ண்டுகளும், 3-வது பரிசு பெற்றவர்களுக்கு 5 லட்சம் நோல் பாய்ண்டுகளும் வழங்கப்பட்டது.

அவர்களுக்கு பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் வகையில் நோல் பாய்ண்டுகள் வழங்கப்பட்டது. அவர்கள் பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் ஹீரோக்கள் என அழைக்கப்பட்டனர்.

பரிசுகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

துபாயில் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பொது போக்குவரத்து சேவையை எளிதில் பயன்படுத்தும் வகையில் சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துபாயின் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் கார்பன் உமிழ்தலை தடுக்கவும் உறுதுணையாக இருக்கிறது.
 

Leave a Reply