• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உண்மைக் கதையைத் தழுவிய உயிரோட்டமான திரைப்படம்  ஹர்காரா!

சினிமா

வார இறுதியில் OTT இல் படம் பார்ப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை என்ன படம் பார்க்கலாம் என்று தேடியபோது அமேசான் பிரைமில் வெளியாகி டாப் 10-க்குள் இருக்கும் ஹர்காரா படம் கண்ணில் பட்டது. 

அண்மையில் நடிகர் காளி வெங்கட குமுதம் பேட்டியில் அவர் நடித்துள்ள இந்தப் படத்தைப் பற்றி சொன்னதாக ஞாபகம். 

'எப்படி இருக்குமோ?' என்ற சந்தேகத்தோடு தான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்...!படம் பார்த்து முடித்த பிறகு 'அடடா இந்தப் படம் வெளியான போதே தெரிந்திருந்தால் தியேட்டரில் போய்ப் பார்த்திருக்கலாமே என்று தோன்றியது. 

காளி வெங்கட், கதாநாயகன், ராட்சசி படத்தின் ஆட்டோக்காரர் ஆகிய மூவரைத் தவிர படத்தில் நன்கு பரிச்சயமானவர்கள் வேறு யாருமில்லை‌.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மீதுள்ள கிராமத்தில் அஞ்சல் ஊழியராக பணி செய்யும் காளி வெங்கட் இடமிருந்துதான் கதை தொடங்குகிறது. நகைச்சுவையும், வலியும் நிறைந்த அந்தக் கதாபாத்திரத்தை - அவருக்கே உரிய இயல்பான நடிப்பைக் கொடுத்து- உயிரூட்டியிருக்கிறார். 

ஃபிளாஷ் பேக்கில் - இந்தப் படத்த்தை எழுதி இயக்கியிருக்கும் Castro Ram Arun ராம் அருண் கேஸ்ட்ரோ-வே கதாநாயகனாக நடித்திருக்கிறார்! (இவர் 2019இல் வெளியான "V1 கொலை வழக்கு" படத்தின் நாயகனாக நடித்து கவனம் ஈர்த்தவர்)

150 ஆண்டுகளுக்கு முன்பு  ஆங்கிலேய ஆட்சியின்போது மேற்குத்தொடர்ச்சி மலையின் மேலிருந்த வெள்ளையர்களுக்கு தபால் கொண்டு செல்லும் வேலையைப் பார்த்த  ஒரு "ஹர்காரா"-வின் உண்மையான கதையை ரத்தமும் சதையுமாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்! அந்தக் கதாபாத்திரத்தின் கண்களிலும் முகத்திலும் அப்படியொரு வசீகரம்.  உயிரோட்டமான நடிப்பு. முக்கியமாக அவர் கம்பு சுத்தும் (சிலம்பம்) காட்சிகள் ரசிக்க வைத்தன, இறுதிக் காட்சிகள் பதற வைத்தன. 

'அவ்வளவு சரிவான மலைப் பாதைகளில் எப்படித்தான் கேமராவை தூக்கிக் கொண்டு அலைந்தார்களோ?' என்று வியப்பாக இருந்தது. இயற்கையான வெளிச்சத்திலேயே படத்தை எடுத்திருக்கிறார்கள்!

வெள்ளைக்காரன் தன் மாளிகையில் மை தொட்டு எழுதுவது முதல், அவர்களுக்குக் காற்று வீசுவதற்கு, கையால் சுற்றப்படும் (மின்விசிறி போன்ற அமைப்புடைய) விசிறி வரை எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள்! 

சில நிமிடங்கள் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் 'விக்ரம் வேதா' படத்தில் வரும் காட்சிகளைவிட நன்றாகவே இருந்தன.

"மலையாளத்தில்தான் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை எடுக்கிறார்கள்" என ஆதங்கப் படுபவர்கள் "தமிழிலும் அதைவிட தரமான - சிறந்த படங்களை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள்" என இந்தப் படத்தைக் காண்பிக்கலாம்.

ஒருசில காட்சிகள் ஒட்டவில்லை, ஒரு காட்சி, "தீரன் படத்தின் - தோ கிலோ மீட்டர்" காட்சியையும், 'நீங்க ரொம்ப பின்தங்கி இருக்கீங்க' என்ற இன்னொரு காட்சி, "மேற்குத் தொடர்ச்சி மலை" படக் காட்சியையும் நினைவூட்டின‌. 

மற்றபடி வெந்து தணிந்தது காடு படத்தில் வருவது போல, 'கதாநாயகன் சட்டையைப் போட்டுக் கொண்டிருந்தபோது முதுகில் குத்திய "ட" வடிவ முட்கள் எல்லாமே - அவன் சட்டையைக் கழற்றிய பிறகும் முதுகிலேயே குத்தியபடி இருப்பது போன்ற' அபத்தமான காட்சிகள் எங்கேயும் இல்லை! 

ஹர்காரா - அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய - இன்றும் நாட்டார் தெய்வமாக வழிபடப்படும் - ஒரு வீரன் நமக்காக செய்த தியாகத்தின் கதை!

அவசியம் பாருங்கள். பார்த்துவிட்டு நான்கு வரி எழுதுங்கள். அப்போதுதான் வணிக நோக்கில், வன்முறை, ஆபாச ஆட்டம், புகை, மது, போதைப் பொருட்களை ஊக்குவிக்கும் நாயக பிம்பம் - இப்படி எதுவும் இல்லாத நல்ல படங்களை எடுப்பவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்! தொடர்ந்து நல்ல படங்களை எடுக்க முன்வருவார்கள்!!
 

Leave a Reply