• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சில அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மறுசீரமைப்பு - பிரசன்ன ரணதுங்க

இலங்கை

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை கலைப்பதற்கு அரசு கொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது.

அத்தகைய நிறுவனங்களை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சினால் பொதுச் செலவின மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களம், பொறியியல் கூட்டுத்தாபனம், தேசிய இயந்திரவியல் நிறுவனம், கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம், கண்ணிவெடி அகற்றல் மையம், ஹோட்டல் டெவலப்பர்ஸ் நிறுவனம் லிமிடெட், ஓஷன் வியூ டெவலப்மென்ட் ஆகியவற்றைக் கலைப்பதற்கு அல்லது மறுசீரமைக்க பொதுச் செலவினக் குழு பரிந்துரை செய்துள்ளது.

எனினும், நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பது குற்றமாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் செலவு மீளாய்வுக் குழுவினால் அறிக்கை தயாரிக்கப்பட்ட போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துக்களைப் பெறவில்லை எனவும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் தனக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் இது தொடர்பாக அறிவிக்கப்படவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் பரிந்துரைகளை அமைச்சு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இந்த முடிவை மீளாய்வு செய்யுமாறு அமைச்சரவையையும் நிதி அமைச்சையும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply