• Welcome to TamilsGuide
செய்திகள் 1

றமேஷ் வேதா – லண்டன் தமிழ் ஆளுமையின் மறைவு

நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகம் இன்று அதிகாலை 22 ம் திகதி ஒக்ரோபர் இயற்கையை எய்தினார். அவர் மோட்டோ நீயுரோன்ஸ்- நரம்பு தொடர்பான நோயினால் இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல்
பாதிக்கப்பட்டிருந்தவர்.
மிக அரிதானதும் இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் இந்நோயானது படிப்படியாக உடலின் ஒவ்வொரு அவயங்களாக செயலிழக்கச் செய்து இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும். துரதிர்ஷ்டவசமாக றமேஷ் வேதாவும் இந்நோயினால் பாதிக்கப்பட்டு இயற்கையை எய்தினார்.
புலம்பெயர் தொலைக்காட்சிகளில்,, “பிடிக்கல பிடிக்கல” என்ற நாடக தொடர் மூலமும் பல குறும்படங்கள் ஊடாகவும் மற்றும் முழு நீள திரைப்படங்கள் ஊடாகவும் ஈழத் தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் ஒரு சிறந்த நகைச்சுவை நாடகக் கலைஞரும் ஆவார்.

இலங்கையில் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையை பூர்விகமாக கொண்ட இவர் கடந்த பல தசாப்தங்களாக லண்டனில் வாழ்ந்தவர். கணக்கியளாளராக பணியாற்றிய இவர் நடிப்புத் துறை மீதான ஈர்ப்பினால் கலைத்துறையில் முழு ஆர்வத்தோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனது நகைச்சுவை நடிப்பினாலும் குணாதிசயத்தாலும் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
2023 ஆம் ஆண்டு சிவஜோதி ஞாபகார்த்த விருது – ” நகைச்சுவை தென்றல்” என்ற பட்டத்தை காலஞ் சென்ற றமேஷ் வேதாவுக்கு வழங்குவதற்கு தீர்மானித்திருந்ததாக “லிட்டில் எயிட்டின்” நிர்வாக இயக்குநர் ஹம்சகௌரி தெரிவித்திருந்தார்.
விருது வழங்கும் விழா நவம்பர் 18 இல் நடைபெற இருந்த நிலையில் சடுதியாக றமேஷ் வேதாவின் மரணச் செய்தியை கேட்டு தான் அதிர்ச்சியும் மிகுந்த கவலையும் அடைந்ததாக தெரிவிக்கும் ஹம்சகௌரி லிட்டில் எயிட்டின் சார்பாக றமேஷ் வேதாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்தார்.
ஒரு நல்ல மனிதரை, நல்ல கலைஞரை மற்றும் நல்ல நண்பரை தான் இழந்து தவிப்பதாக இவர் நடித்த படங்களையும் நாடகங்களையும் இயக்கிய கலைத் தம்பதியினர் றஜிதா மற்றும் பிரதீபன் அவர்களும் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்கள்.
என்றும் ஆர்வம் குன்றாத றமேஷ் வேதா எமது திரைகுழுமத்திற்கு மிகப்பெரும் பலமாகவும் ஊக்கியாகவும் இருந்தவர். அவருடைய மறைவு அவருடைய குடும்பத்தினருக்கு மட்டுமல்ல எமக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என ஈழத்தமிழ் முன்னணி இயக்குநரான ஆர். புதியவன் தேசம்நெட்டுக்கு தெரிவித்தார்.
தேசம்நெட் மற்றும் தேசம்திரையுடன் நீண்ட காலமாக உறவைக் கொண்டிருந்தவர் றமேஷ் வேதா. இவருடைய பிள்ளைகள் சிறுவர் தேசம் பகுதியில் எழுத்தாளர்களாகவும் இருந்தவர்கள். றமேஷ் வேதாவின் மறைவுச் செய்தி ஈழத்தமிழர்களுக்கு நகைச்சுவை உலகில் ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் தேசம் ஜெயபாலன் மேலும் தெரிவிக்கையில் இவ்வாறான நல்ல மனிதருக்கு இக் கொடியநோய் ஏற்பட்டதும் அவருடைய திடீர் மறைவும் இயற்கை இழைக்கும் அநீதியின் மீது கோபத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.
நகைச்சுவை கலைஞர் றமேஷ் வேதநாயகத்தின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினரின் பிரிவுத்துயரில் கலைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ளுகின்றனர். நகைச்சுவைகலைஞர் றமேஷ் வேதாவின் இறுதி நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Thesam Jeyabalan

Leave a Reply