• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துரோகத்தால் துன்பத்தில் துவண்ட சாவித்திரி

சினிமா

சாவித்திரி கதாநாயகியாக நடித்த கடைசி படம் ‘பிராப்தம்.’ இந்தப் படத்தில் நீ நடிக்காதே. உனக்கு பதிலாக வேறு ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி, அவரைப்போடு என்று நல்ல முறையில் சாவித்திரிக்கு அறிவுரை கூறியிருக்கிறார் ஜெமினிகணேசன்.

1970-களின் ஆரம்பத்தில் படம் தயாரிக்கவும், இயக்கவும் முடிவு செய்த சமயம், எல்லா தயாரிப்பாளர் களையும் போல் பணத்தை வெளியிலிருந்து யாரிடமும் வாங்கவில்லை. தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டே படம் எடுத்தார். ஆனால் அடுத்தடுத்த தயாரிப்புகளில் வருமானவரி சோதனை, படத்தயாரிப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை, பைனான்சியர்களின் கெடு பிடிகள்,, உதவி செய்கிறோம் என்று கூறிய சிநேகிதிகள் அந்த நேரம் பார்த்து காணாமல் போனது என அடுத்தடுத்து ஏற்பட்ட துன்பங்கள் சாவித்திரியை அசைத்து விட்டது. 

கவலையை மறக்க மதுவின் துணையை அதிகம் நாடினாா். வீட்டிலுள்ள நகைகள் திருட்டு போயின. கடன் வாங்கிய பணத்தை யாரும் திருப்பிக் கொடுக்கவில்லை. சாவித்திரிக்கு ஆரம்ப காலங்களில் உதவி செய்தவர்களே, அவருக்கு துரோகத்தையும் செய்தனர். அவர் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக நடக்கவில்லை. படத் தயாரிப்பின் மூலமாக பல நஷ்டங்களும், கஷ்டங்களும், அவமானங்களும் அவருக்கு கிடைத்தது.

1956-ம் ஆண்டு அபிராமிபுரத்தில் 1,500 ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்தவர், புகழும், பணமும் கிடைத்த பிறகு, தி.நகரில் உள்ள அபிபுல்லாத் தெருவில் கனவு மாளிகையைக் கட்டினார். அந்தக் கனவு மாளிகையும் அவரை விட்டுப் போனது.

சோதனையான காலக்கட்டத்தின் உச்சத்தில், அபிபுல்லா வீட்டைக் காலி செய்து விட்டு, அதன் அருகிலேயே இருந்த தன்னுடைய சிறிய வீட்டிற்கு குடியேறினார். பெரிய வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் ஜெமினியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். சாவித்திரி குடியேறிய வீட்டின் ஜன்னலை திறந்தால், அவர் வசித்த மாளிகை தெரியும். அவுரங்கசீப் தன் தந்தை ஷாஜகானை வீட்டுக் காவலில் வைத்த போது, அங்கிருந்தே தான் கட்டிய தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டிருப்பாராம் ஷாஜகான். அதுபோல ஜன்னல் வழியாக தன்னுடைய கனவு மாளிகையை வெகு நேரம் பார்ப்பாராம் சாவித்திரி.. 

1970-ம் ஆண்டுகளின் இறுதியில் உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டிருந்தார் சாவித்திரி. அந்த நேரம் மிகப் பிரபலமான படத்தயாரிப்பாளராக இருந்த ஒரு வருக்கு, பண உதவி கேட்டு இரண்டு மூன்று முறை போன் செய்தார். அவருடைய உதவியாளர் தான் எடுத்து பேசியிருக்கிறார். அவரிடம், “எனக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும். மருத்துவச் செலவிற்கு தான் கேட்கிறேன். மறக்காமல் உங்களுடைய "பாஸ்" வந்தால் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இரண்டு மூன்று நாட்களாகியும் அவரிடமிருந்து பணமோ, எந்தவித பதிலோ வரவில்லை. அப்போது ஏவி.எம். ஸ்டூடியோவில் நடித்துக் கொண்டிருந்த சாவித்திரி, இதுபற்றி உடன் நடிக்கும் நடிகை சுஜாதாவிடம் சொல்லியிருக்கிறார். “இந்தா பாரு சுஜாதா! 1955-ம் ஆண்டுகளில் இந்த தயாரிப்பாளர் என்னுடைய வீட்டிற்கு வருவார். டிரைவர் இல்லாவிட்டால் அவரே என்னுடைய காரையோ, எனது கணவர் காரையோ ஓட்டுவார். எங்கள் இருவருக்கும் ஒரு குடும்ப நண்பராக இருந்தார். 1965-ம் ஆண்டு வாக்கில், ‘நான் படத் தயாரிப்பாளராக ஆசைப்படு கிறேன். எனக்கு கொஞ்சம் பணம் உதவி செய்யுங்கள்’ என்று கேட்டதால், நான் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். ஆனால் இன்று, நான் அவரிடம் பத்தாயிரம் ரூபாய் தான் கேட்கிறேன். அதுவும் மருத்துவ செலவுக்கு என்று போன் செய்தும் அவரிடம்இருந்து எந்த பதிலும் வரவில்லை” என்று கூறி கண் கலங்கியிருக்கிறார்.

சுஜாதா அந்த தயாரிப்பாளரை சந்தித்து, நடந்த விஷயத்தைக் கூறியும், “எனக்கு எந்த செய்தியும் வரவில்லை” என்று சொன்னதுடன், உதவி செய்வதற்கான அறிகுறியும் தெரியாததால் சுஜாதா திரும்பி வந்து விட்டார். பிறகு ஷோபன் பாபு உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்த தயாரிப்பாளர் நல்ல செல்வாக்கு உள்ளவர். தன் படத்தில் நடிப்பவர்களுக்கு முறையாக பணம் கொடுப்பார். எல்லாரையும் நன்றாக கவனிப்பார். பலருக்கு உதவியும் செய்திருக்கிறார். ஆனால் சாவித்திரி விஷயத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்பது தான் புரியவில்லை.

யோசனை சொல்வதற்கு ஆயிரம் பேர்கள் முன் வருவார்கள். ஆனால் உதவி செய்வதற்கு ஒருவர்கூட முன் வரமாட்டார்கள். இதுதான் மனிதர்களின் உண்மையான முகம்.

சாவித்திரிக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. அதனால் கடைசி நாட்களில் படப்பிடிப்புக்கு தன்னுடைய மகனுடன் செல்ல திட்டமிட்டார். படப் பிடிப்பு பெங்களூருவில், அங்கு சாளுக்கிய ஓட்டலில் தங்கினார். காலை உணவை சாப்பிட மறந்து விட்டதால், மயங்கி விழுந்தார். ஓட்டல் நிர்வாகம் நடிகை சரோஜாதேவியை தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னது.

அந்த சமயம் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவைத் தொடர்பு கொண்ட சரோஜாதேவி, சாவித்திரிக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்யுமாறு கோரிக்கை வைத்தார். 1959-ம் ஆண்டு போல ‘கைராசி’ படப்பிடிப்பில் சரோஜாதேவியோடு முரண்பட்டு சண்டைக்குப்போன சாவித்திரிக்கு, கடைசியாக உதவி செய்தவரே சரோஜாதேவிதான். நடிகை ஜமுனாவும் நிறைய உதவிகளைச் செய்தார்.

சரோஜாதேவி எடுத்துக் கொண்ட முயற்சியால், சாவித்திரி தனி விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டார். வீடு, மருத்துவமனை என மாறி மாறி தங்கி சிகிச்சை பெற்றார். இருப்பினும் 1981-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி மரணமடைந்தார். ஜெமினி தன் மனைவி சாவித்திரியின் உடலை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டுக்கு கொண்டுபோய் வைத்தார். எந்த வீட்டிற்கு கொட்டும் மழையில் இரவில் ஓடிவந்து அடைக்கலம் கேட்டாரோ, அங்கிருந்து அவரது கடைசிப் பயணம் இருக்க வேண்டும் என்று ஜெமினி விரும்பினார்.

மனைவி என்ற அங்கீகாரத்தோடு ஜெமினியின் சொந்த வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் நடந்தது சாவித்திரிக்கு மட்டுமே. ‘எல்லோரையும் காப்பாற்றிய ஒருவன், கடைசி காலத்தில் தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள முடியாதவனாகி விடுவான்’ என்று ‘பீட்டர் பிரின்பிள்’ என்ற புத்தகம் சொல்கிறது. அது சாவித்திரிக்கு பொருந்திப் போனது.

மிகவும் மனித நேயமுள்ள சாவித்திரியின் குணத்தை, சிலர் வேறு கோணத்தில் கடுமையாக விமர்சிப்பதும் உண்டு. தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம், மன நிலையைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல், தன்னுடைய சொந்த விருப்பு, வெறுப்பு, இன்பங்கள், தேவை களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார். அதற்கு கிடைத்த விடைதான், அவருடைய வாழ்க்கையின் இறுதிக் காலமும், முடிவும் என்று சொல்பவர்களும் உண்டு.

ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல. அவன் இறந்த பிறகும் எத்தனை ஆண்டுகள் வாழுகிறான் என்பது தான் முக்கியம். அந்த வகையில் இன்றைக்கும் சாவித்திரியை நினைவு கூருகிறோம்; எழுதுகிறோம்
.
தினத்தந்தி

Leave a Reply