• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வளர்ந்ததுமே யாவரும் தீவாய் போகிறோம்

இலங்கை

தந்தை மகன் உறவென்பது ஒரு வயதினை கடந்த பின்பு தாமரை இலை மேல் தண்ணீர் போல ஒட்டியும் ஒட்டாமலும் மாறிப்போய்விடும்… இயல்பு வாழ்க்கையின் பிரதிபலிப்பு தானே திரைப்படம். மகன் தாயை உருகிப் பாடுவதை போல ஆயிரம் பாடல்களை கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இயக்குனர்களின் கதைக்களங்களும் பெரும்பாலும் அப்படித்தான் கேட்கிறான. விஜய் சேதுபதி ஒரு நேர்காணலில் சொல்லிருப்பார் “எனக்கு வில்லன் என் அப்பன் தான்” என்று அது அவரின் அன்பின் வெளிப்பாடே. அப்படித்தான் இங்கு பலருக்கும் வில்லனாய் தந்தைகள் தெரிவார்கள். அவர்கள் தந்தை ஆகும் வரை அவர்களுக்கு அது ஏன் என்று விளங்குவதில்லை, உணர்ந்தாலும் ஆண்களுக்கு அதனை வெளிப்படுத்த தெரியாது என்று தான் கூற வேண்டும். அது ஓர் இனம்புரியா அன்பு அவ்வளவு தான்.
அந்த வகையில் நா.முத்துக்குமாரும் விதிவிலக்கிலை. அவரின் புத்தகங்களில் அவர் தன் தந்தையின் உறவிற்க்கு தோழமை கலந்த ஓர் பயம் என்றே குறிப்பிடுகின்றார். 
தந்தை மகன் உறவு பற்றி அவர் எழுதிய பாடல்களில் எனக்கு பிடித்த பாடல், கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் வரும் “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே” பாடல். 
மறுபடியும் ஓர் யுவன்- நா.மு இணை, வழமை போல் என்னை ஏமாற்றவில்லை.
படத்தின் கதைக்களத்தின் படி பொறுப்பில்லாது அரசியல், காதல் என ஊதாரியாய் சுற்றும் இரு இளைஞர்கள், தந்தை சொல்பேச்சுக் கேட்காது சுற்றித் திரிகின்றனர். அவர்களின் வில்லன் அவரவர் தந்தைகள் தான். 
படத்தின் உச்சக்கட்ட காட்சியில் அவர்கள் மனம் திருந்துவதாய் அமையும் கட்டத்தில் இந்த பாடல் ஒலிக்கும். படத்தின் மொத்த ஜீவனும் இந்த பாடல் தான். 
ஒவ்வெரு மகனும் தன் தந்தையிடம் சொல்ல தயங்கும் வார்த்தைகளை அன்பினை நா.முத்துக்குமார் தன் மொழிகளில் சொல்லியிருப்பார்.
“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே”
எல்லாரும் தாயின் அன்பே சிறந்து என சொல்லும் இடத்தில் தந்தையின் அன்பு தான் சிறந்தது. ஆனால் என்ன ஆண்களுக்கு அதனை வெளிப்படுதும் இடத்தில் பெண்களிடம் தோற்றுப்ப்போகின்றனர்.
“தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை”
ஓர் குடும்பத்தின் தூணாய் இருக்கும் தந்தை எந்த கஷ்டத்திலும் வலியிலும் கண் கலங்க மாட்டார்கள். அவர்களின் கண்ணீரை எல்லாம் அவர்கள் தனி அறை சுவர்களும் தளவாடிகளும் மட்டுமே கண்டிருக்கும். ஒரு மகனுக்கு தந்தையை தாண்டி ஒரு நல்ல ஆசான் இருக்க வாய்ப்பே இல்லை. வாழ்க்கை பாடம் சொல்லித்தரும் ஆசான். பாடங்கள் கசக்கலாம் ஆனால்  வாழ்க்கையில் எங்கோ நிச்சயம் பயன்படும்.
இரு காந்தங்களின் ஒத்த முனைகள் ஒன்றை ஒன்று தள்ளும். அதே போல தான் தந்தை மகன் உறவும் ஒரே உயிர் அணுவில் வந்த ஒத்த நகல்கள். வாழ்க்கை தரும் காயங்கள் வலிகள் தான் அந்த காந்ததின் கரிசனையை காட்டிச் செல்லும்.
“என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்”
“கண்டிப்பிலும் தண்டிப்பிலும்
கொதித்திடும் உன் முகம்
காய்ச்சல் வந்து படுக்கையில்
துடிப்பதும் உன் முகம்” 
அடிக்கும் கைகள் தான் அணைக்கும் என்பார்கள். எத்தனை இரவுகள் எமக்காய் விழித்திருபார்கள். தாய் வயிற்றில் சுமக்கையில் தந்தை மனதில் சுமந்திருப்பார்.
பிறந்த பின்பு மார்பில் சுமப்பார். 
தான் காணத உலகத்தை மகன் காண வேண்டுமென தோள் மேல் தூக்கிக் கொண்டு ஊர்வலம் வருவார். எம் கனவிற்க்கு கண் விழிப்பதும் வழி வகுப்பதும் தந்தை தான்.
“அம்பாரியாய் ஏற்றிக் கொண்டு
அன்று சென்ற ஊர்வலம்
தகப்பனின் அணைப்பிலே
கிடந்ததும் ஓர் சுகம்”.
வாலிபம் வரும் போது தந்தையின் அனுபவ வார்த்தைகள் வேப்பெண்ணையாய் கசக்கும், வெறுப்புக்களை சுரக்கும். அதுவரை நண்பனாய் தோன்ற தந்தை வில்லன் வேடம் போடுவார். 
தந்தை மகன் உறவில் விழும் விரிசல்கள் ஓர் தீவினை போல் தனியாய் போட்டு விடுகின்றது.
“வளர்ந்ததுமே யாவரும்
தீவாய் போகிறோம்
தந்தை அவனின் பாசத்தை
எங்கே காண்கிறோம்
நமக்கெனவே வந்த நண்பன் தந்தை”
“வளர்ந்ததுமே யாவரும்
தீவாய் போகிறோம்” என்ற ஒரு வரியே போதும் அந்த உறவின் நிலையை விபரிக்க… அதான் எப்போதும் நா.முத்துக்குமார் இயல்புலகின் கவிஞன்.

 

என் கவிகள்

Leave a Reply