• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரியாணியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கணவனை கொடூரமாக கொன்ற பிரித்தானிய பெண்

பிரித்தானிய பெண் ஒருவர், தன் கணவருக்கு பிடித்த பிரியாணியில் தூக்க மாத்திரைகளைக் கலந்துகொடுத்து, தன் காதலன் உதவியுடன் அவரைக் கொன்ற நிலையில், அவர் அமைத்த உணவை அவரது மகன் சாப்பிடாததால் வசமாக சிக்கினார். 2016ஆம் ஆண்டு, பிரித்தானியாவின் Derbyயைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் (Ramandeep Kaur Mann, 38), தன் கணவரான சுக்ஜீத் சிங்கிடம் இந்தியாவிலுள்ள அவரது வீட்டுக்கு விடுமுறைக்குச் செல்லலாம் என ஆசை காட்டியிருக்கிறார். அதன் பின்னாலுள்ள சதியை அறியாமல் சுக்ஜீத் சிங்கும், மனைவி பிள்ளைகளுடன் இந்தியாவுக்குச் சென்றுள்ளார்.
  
இந்தியா வந்த ரமன்தீப் கௌர் தன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்துக்கொடுத்திருக்கிறார். சுக்ஜீத் சிங்குக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்குமாம். ஆக, குடும்பத்தினர் பிரியாணியை ரசித்து சாப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்கும் தெரியாது, அந்த பிரியாணியில் ரமன்தீப் கௌர் தூக்க மாத்திரிகைகளைக் கலந்திருக்கிறார் என்பது.

அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டிருக்க, நள்ளிரவில் தன் ரகசிய காதலனான குர்பிரீத் சிங்கை வீட்டுக்கு வரவழைத்துள்ளார் ரமன்தீப் கௌர். இருவரும் சேர்ந்து சுக்ஜீத் சிங்கைக் கொன்றுவிட்டார்கள்.

ரமன்தீப் கௌர் சமைத்த பிரியாணியை அவரது 9 வயது மகனான அர்ஜூன் சாப்பிடவில்லை. ஆகவே, பெற்றோரின் படுக்கையறையில் ஏதோ சத்தம் கேட்க, அந்த சத்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த அர்ஜூன், தன் தாய் தன் தந்தையின் நெஞ்சின் மீது உட்கார்ந்து அவர் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதையும், குர்பிரீத் சிங் தன் தந்தையின் தலையில் சுத்தியலால் அடித்ததையும், பிறகு தன் தாய் கத்தியால் தன் தந்தையின் கழுத்தை அறுத்ததையும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான். அர்ஜூனுடைய சாட்சியத்தின் பேரிலேயே ரமன்தீப் கௌரும், குர்பிரீத் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த குர்பிரீத் சிங், ரமன்தீப் கௌரின் கணவரான சுக்ஜீத் சிங்கின் சிறுவயது நண்பர். துபாயில் வாழ்ந்த குர்பிரீத் சிங், தன் நண்பர் குடும்பத்தை துபாய்க்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டியிருக்கிறார். அப்போது அவருக்கும் ரமன்தீப் கௌருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

ரமன்தீப் கௌர் தன் கணவருக்குத் தெரியாமல் குர்பிரீத் சிங்குடன் உறவைத் தொடர்ந்த நிலையில், இருவரும் சேர்ந்து அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி கணவரிடம் இந்தியா செல்லலாம் என ரமன்தீப் கௌர் கேட்க, அனைவரும் இந்தியா வந்துள்ளார்கள்.

இன்னொரு விடயம், சுக்ஜீத் சிங் தன் பெயரில் 2 மில்லியன் பவுண்டுகள் காப்பீடும் எடுத்துள்ளார். ஆக, கணவனைக் கொன்று அவரது காப்பீட்டுத் தொகையையும் வாங்கிக்கொண்டு ரகசிய காதலனுடன் புது வாழ்வைத் துவக்கலாம் என திட்டமிட்டுள்ளார் ரமன்தீப் கௌர்.

ஆனால், மகன் அளித்த சாட்சியம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. கொலைக்கு பயன்படுத்திய கத்தி வீட்டுக்கு அருகில் கிடைக்க, ரமன்தீப் கௌர் கைது செய்யப்பட, புது வாழ்வுக்கான திட்டங்களுடன் துபாய் புறப்பட்ட குர்பிரீத் சிங்கை, டெல்லி விமான நிலையத்தில் பொலிசார் கைது செய்ய, இருவரும் சிறை சென்றார்கள்.

கணவரை திட்டமிட்டு கொடூரமாக கொலை செய்த ரமன்தீப் கௌருக்கு தூக்கு தண்டனையும், அவருக்கு உதவிய குர்பிரீத் சிங்குக்கு 3,000 பவுண்டுகள் அபராதத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply