• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு தலை ராகம் திரைப்படத்தின் இறுதி காட்சிகள் 

சினிமா

"ஒரு தலை ராகம்" திரைப்படத்தின் இறுதி காட்சிகள்  ரயிலிலேயே படமாக்கப்பட்டு இருக்கும். அது நம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் ஓடிய ரயில்தான் எடுக்கப்பட்டது என்பது நாம் அறிந்ததே. 

இந்த திரைப்படம் எடுத்த 1979 - 80 காலகட்டத்தில் மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதையில் தினமும் ஒரே ஒரு ரயில் மட்டும் சென்று வந்திருக்கிறது . காலையில் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும் வண்டி தரங்கம்பாடி சென்று அங்கேயே பகல் முழுக்க கிடந்து விட்டு மாலையில் அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வந்திருக்கிறது. பகல் முழுக்க தரங்கம்பாடியில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயிலில் தான் "ஒரு தலை ராகம்" படத்தில் வரும் பெரும்பாலான ரயில் சம்பந்தமான கட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. 

அந்த வகையில் கிளைமாக்ஸ் காட்சிகள் கூட தரங்கம்பாடி பகுதியில் தான் எடுக்கப்பட்டு இருக்கிறது. பட காட்சிகள் ஓடிக்கொண்டு இருக்கும் நிஜ ரயில் பெட்டியின் உட்பகுதியில் எடுக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜன்னல்களில் தெரியும் நீர்நிலைகள் நிறைந்த அந்த அழகான வெளிப்புற காட்சிகள் அனைவரது மனதிலும் பதியும் வண்ணம் இருக்கும்.

"ஒழுகைமங்கலம் - பொறையார் - தரங்கம்பாடி" இந்த பாதையில் ரயிலை திரும்ப திரும்ப ஓடவிட்டு காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். 

ரயில் பெட்டியின் தென் திசையில் கேமராவை வைத்து, வடக்கு பகுதியில் ஜன்னலை ஒட்டி நடிகர்களை அமர வைத்து படம் பிடித்து இருக்கிறார்கள். ஜன்னல்கள் வழியே ரயில் பாதையின் வடக்கு பகுதியில் உள்ள நீர் நிலைகள் நிறைந்த அந்த பசுமையான, அழகான பகுதிகள் தெரியும் வண்ணம் படமாக்கி இருப்பார்கள். 

இதில் நடிகர் சந்திரசேகர் மற்றும் நாயகன் சங்கர் இவர்கள் உரையாடிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் பொறையார் - தரங்கம்பாடி இடையேவும், நாயகி நாயகனுடன் பேசிக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் ஒழுகைமங்கலம் - பொறையார் இடையேவும் படமாக்கி இருக்கிறார்கள் . 

ஒழுகைமங்கலம் முதல் தரங்கம்பாடி வரை வடக்கு பகுதியில் ரயில் பாதைக்கு அருகிலேயே  ஆறு ஓடுகிறது. இது ஒழுகைமங்கலம் பகுதியில் குறுகலாகவும் தரங்கம்பாடி பகுதிக்கு போக போக அகலமாகிக்கொண்டே வந்து தரங்கம்பாடி ரயில் நிலைய பகுதியில் நல்ல அகலத்தில் இருக்கும். ஆற்றில் உள்ள நீர், பச்சை பசேலென்று இருக்கும் ஆற்று படுகைகள் இவை இந்த திரைப்படத்தில் அற்புதமாக பதிவாகி இருக்கும்.

இந்த பதிவில் முதலில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் "ஒரு தலை ராகம்" படத்தில் கிளைமாக்ஸ் கட்சியில் ரயில் ஜன்னல்கள் வழியே தெரியும் இந்த ஆற்று படுகை காட்சிகள் அடங்கிய தொகுப்பை காணலாம். 

படத்தில் நடிகர், நடிகைகளை தவிர்த்துவிட்டு  ரயில் பெட்டி மற்றும் அதன் ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளை மட்டும் கவனிக்கவும். அந்தப் பகுதி எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது என்பது புரியும். இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள மற்ற படங்கள் சமீபத்தில் அதே பகுதியில் எடுக்கப்பட்டவை. 

அந்தப் பகுதி தற்போது எப்படி இருக்கிறது என்பதை இந்த படங்களில் காணலாம். இந்த படங்களில் ரயில் பாதை இருந்த இடங்கள் மட்டும் சிவப்பு அம்பு குறிகள் மூலம் காட்டப்பட்டு இருக்கும்.

கிட்டத்தட்ட 42 ஆண்டுகள் ஆகிய பின்னரும் அந்த பகுதிகள் இன்னமும் அதே அழகுடன் தான் இருக்கின்றன. ஆற்றின் கரைகளை பலப்படுத்தி உயர்த்தும் பிரம்மாண்ட வேலைகள் நடந்து வருகின்றன. ஆறு முழுக்க நீருடன் பார்க்க அழகாக தற்போது காட்சியளிக்கிறது. என்ன ஒரு குறை என்றால் தற்போது அந்த ரயில் மட்டும் அங்கு இல்லை. கண்டிப்பாக விரைவில் ஓடும். நம்பிக்கை இருக்கிறது.

இந்த கிளைமாக்ஸ் காட்சிகள் ஒழுகைமங்கலம் - தரங்கம்பாடி இடையே பலமுறை முன்னும் பின்னுமாக ரயிலை பல முறை இயக்கி எடுக்கப்பட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. ரயில் பெட்டியில் கூடுதல் லைட்டுகள் பொருத்தி காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. மேலும் நாயகன் -  நாயகி இருக்கும் ரயில் பெட்டி இருக்கைகள் மற்றும் நாயகன் அவர் நண்பர் ( சந்திரசேகர்) இருக்கும் ரயில் பெட்டி இருக்கைகள் இரண்டும் பார்க்க ஒன்று போல இருந்தாலும் அவை வேறு வேறு இருக்கைகள் என்பது கூர்ந்து பார்த்தால் தெரியவரும். இதிலிருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் ஒரே நாளில் எடுக்கப்படவில்லை என்பது நன்றாக தெரியவரும். தினமும் ஒரே ரயில் சென்று வந்திருந்தால் காட்சிகளை அதே பெட்டியில், அதே இருக்கையில் வைத்து எடுத்து இருப்பார்கள். ஆனால் மாற்றி எடுத்து இருக்கிறார்கள் என்றால் இதிலிருந்து ஒவ்வொரு நாளும் வேறு வேறு ரயில் பெட்டிகள் ( rake) இந்த ரயிலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்பது புலனாகிறது. அப்பொழுதே நம் தரங்கம்பாடி ரயில் rake sharing முறையில் இயக்கப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. அநேகமாக மயிலாடுதுறை - காரைக்கால் ரயிலுடன் RSA ( Rake sharing Arrangement) தொடர்பில் இருந்திருக்கலாம் என்றே தோன்
றுகிறது. (இதுபற்றி ஏதேனும் கூடுதல் விவரம் தெரிந்தால் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.) நன்றி.

இந்த மயிலாடுதுறை - தரங்கம்பாடி பாதை மூடப்பட்டு 36 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாதையை இன்னமும் மக்கள் மறக்காது இருக்க பெரிய காரணமாக இருப்பது இந்த "ஒருதலை ராகம்" திரைப்படம் தான். புதிதாக ரயில் பாதை போட்டு ரயில் ஓட துவங்கினாலும், அந்த கால ரயிலின் நினைவுகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த வகையில் " ஒருதலை ராகம்", " தணியாத தாகம்" போன்ற படங்கள் அந்த கால தரங்கம்பாடி ரயிலை பற்றி தற்போதுள்ள இளைய தலைமுறையினர் கூட அறிந்துகொள்ளும் வகையில் ஒரு வரலாற்று பதிவாகவே இருக்கின்றன என்பதே உண்மை........

Sampatth Kumar  

Leave a Reply