• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அபூர்வராகங்கள் 

சினிமா

தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத கதை. கதை புதுமையானது வித்தியாசமானது. எதார்த்தத்தை மீறிய ஒரு கதையை அதன் தன்மை மாறாமல் இயல்பாக அழகாக கூறி இருப்பார் கே. பாலச்சந்தர்.

அந்த படத்தை இப்போது பார்க்கும் போதும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்த தவறுவதில்லை.

விக்கிரமாதித்தனிடம் வேதாளம் போடும் பல விடுகதைகளில் ஒரு கதை இது. அந்த விடுகதையின் விடை என்ன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக , ஆழமான வசனங்களுடனும் காட்சிகள் மூலமும் மெய்மறக்க வைத்து இருப்பார் கே.பாலச்சந்தர். பலரை மெய்மறக்க வைத்த அந்த "அபூர்வ ராகங்கள்" குறித்த ஓர் 
பார்வை.

மரபு மீறிய ஒரு கதையை படமாக்கும் துணிச்சல் கே.பாலச்சந்தரின் எண்ணத்தில் உதித்ததும், அதன் நிறம் மாறாமல் படமாக்கியதும் தான் இப்படம் வெற்றி பெற காரணம். ஒரு அப்பாவும் மகனும், அம்மாவும் மகளும் முறையை ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது தான் இந்த படத்தின் மையக்கரு. இதைக் கேட்டவுடனே முகம் சுளித்து இது எல்லாம் ஒரு கதையா, என பல விமர்சனங்கள் வந்தன. அப்படி விமர்சனம் செய்தவர்களையும் கைத்தட்ட வைத்தது தான் இந்த படத்தின் பிளஸ்.

அப்பாவாக மேஜர் சுந்தர்ராஜன், மகனாக கமல், ஆங்காங்கே தனது முறுக்கேறிய தேகத்திற்கு தகுந்தார் போல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சேற்றை வாரி இறைத்துவிட்டுப்போகும் கார் காரனைப் கெட்டவார்த்தை பேசி மாத்துவாங்கும் இடமாகட்டும், ஜன கன மன பாடும் போது ஒழுங்காக நிற்காதவனை அடித்து, பாடியது ஜன கன மன, ஜாலிலோ ஜிம்கானா இல்லை என்று தனது மூர்க்கத்தனமாக கோவத்தை வெளிப்படுத்திய இடத்திலும் கமலில் நடிப்பு மெருகேற்றி இருக்கும்.

கொள்கையில் முரண்பட்டு அப்பா மேஜர் சுந்தர்ராஜனிடம் முரண்டு பிடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவருக்கு ஸ்ரீவித்யா தஞ்சம் தருகிறார். தஞ்சம் தந்தவரின் மனதில் தஞ்சம் அடைய துடிக்கும் இளைஞனான இடத்தில் அவரின் இளமை பேசி இருக்கும். ஸ்ரீவித்யா எப்போதுமே அழகு பதுமையாகத் தான் இருப்பார். அவரின் அழகுடன் இளமையை சேர்ந்து பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது. கமல்,ஸ்ரீவித்யா இருவருக்கும் இடையே துளிர் விடும் காதலை இத்தனை நயமாக அழகாக தாளத்தோடு ஒப்பிட்டு 'ஆதி தாளம்‘ பாலை வனத்தில் எங்கோ பசுமை படரத் தொடங்கிய அதன் ஆரம்பமோ இந்த தாளம் என பின் வரும் குரலுக்கு ஒரு சபாஷ் போட்டு கட்டுரையே எழுதலாம்.

அதிசய ராகம் ... அபூர்வ ராகம் என்று ஸ்ரீவித்யாவின் மீது கொண்ட காதலை நளினமாக கூறி தன் உள்ளத்தில் இருக்கும் அந்த பெண் நீ ‘ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி மறும் புறம் பார்த்தால் காவிரி மாதவி முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி முழுவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி" என்று பாட்டின் மூலம் தன் உள்ளத்தின் ஆசையை போட்டு உடைப்பது, வித்தியாசமான சிந்தனை தான். கமலின் காதலை புரிந்த ஸ்ரீவித்யா தன் கணவர் பற்றியும், தன் மகள் பற்றியும் கூறிய பின்பும் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் தன் காதல் உடல் மீதானது அல்ல உள்ளத்தில் உதயமான காதல் என பேசும் வசனங்கள் இன்றும் நின்று பேசுகிறது .

ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன மகள் ஜெயசுதா மேஜர் சந்தர் ராஜனிடம் சரணடைந்து, ஒரு கட்டத்தில் அவரின் மீது காதல் பூந்து இருவரும் திருமணம் செய்ய தீர்மானிக்கிறார். மேஜர் ஜெயசுதாவின் அம்மாவை சந்தித்து பேச வர, ஸ்ரீவித்யாவின் ஓடிப்போன கணவன் ரஜினிகாந்த் திரும்பி வர கதையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட். இந்த படத்தின் ஹைலைட் வசனமே உன் மகள் உனக்கு மாமியார், என் மகன் எனக்கு மாமனார் புரட்சி, புதுமை இந்த புரட்சியை நாம் தான் செய்யனும் என, தனக்கே உரித்தன சிம்மக் குரலில் அட்டகாசப்படுத்தி இருப்பார் மேஜர். இறுதியில் ஒரு கேள்வியின் நாயகனே என்ற பாடலின் மூலமே அனைத்தையும் கூறி அப்பா மகன், அம்மா மகள் ஒன்று சேர்கிறார்கள். மரபு மீறிய காதல் ஒன்று சேர வில்லை.

எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் இசையில் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள் அனைத்து பசுமரத்தாணி போல என்றும் இளமை கொஞ்சும். வாணி ஜெயராம் அவர்களின் மெல்லியக்குரலில் ‘ஏழு சுரங்களுக்குள்‘ எனும் பாடல் வெற்றி பெற்று அவருக்கு தேசிய விருதினை பெற்றுத்தந்தது. மேலும் சிறந்த படம், சிறந்த பின்னணி என மொத்தம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுத்தந்தது. அதிசய ராகம், கை கொட்டி சிரிப்பார்கள், கேள்வியின் நாயகனே, என அனைத்து பாடல்களும் ஒவ்வொரு பொக்கிஷமே .

இரு காதலுக்கும் தனிமை தான் காதலுக்கு அடித்தளம் என்பதை அழகாக கூறி, இது பெரிய தெய்வீகக்காதல் என்று கூறாமல் தலையில் அழகாக ஒரு கொட்டுவைத்த விதம் தான் சூப்பர். ஸ்ரீவித்யா நடிப்பு, பாட்டு, கமலின் தாளம், கோவம், ரஜினி கம்பேக் சீன், ஜெயசுதாவின் நாக்கை துறுத்தும் நடிப்பு, மேஜர் சுந்தர்ராஜனின் ஆங்கில வசனத்திற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் இப்படத்தை பார்க்கலாம். இந்த பொக்கிஷமான இப்படம்புதுமை விரும்பிகளான 2கே கிட்ஸ்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

Renato Francisco

Leave a Reply