• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் - ஜனாதிபதி ரணில் ஆலோசனை

இலங்கை

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூன்றாவது “பெல்ட் அண்ட் ரோட்” சர்வதேச மாநாட்டிற்கு இணையாக சீன சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உலகின் 80 வீத உள்ளூர் தாவரங்களும், 50 வீத பவளப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களும் வெப்ப வலயத்திற்குள்ளேயே காணப்படுகின்றன.

அதனை அடிப்படையாக கொண்டு காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியை இலங்கை ஆரம்பித்துள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக மூன்று முக்கிய விடயங்களை அடைந்துகொள்ள நாம் எதிர்பார்த்துள்ளோம்.

முதலாவதாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு இணைப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பிலான ஆய்வு என்பவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக தெரிவுகளை பகிர்ந்துகொள்வதையும், மூன்றாவதாக செயன்முறைக் கல்வியையும் எதிர்பார்க்கிறோம்.

புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸ் அளவிற்கு மட்டுப்படுத்திற்கொள்வதற்கு அவசியமான தெரிவு, ஆய்வுகளின் ஊடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ளல். காலநிலை அனர்த்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் இந்த பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக நாடுகள் பலவும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியே, காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான போராட்டத்திற்கு தடையாக அமைந்திருக்கிறது.

அவர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுப்பது கடினமானதும் சிக்கலானதுமான விடயமாக மாறியுள்ளது.

அதனால், உலகின் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்று திரண்டு தீர்வுகளை தேடுவதே பொருத்தமானதாக அமையும்.

2021 ஆம் ஆண்டில் “ஒன் பெல்ட் ஒன் ரோட்” உச்சிமாநாட்டிலும் இலங்கை பசுமை பட்டுப்பாதை வேலைத்திட்டத்திற்கு ஆதரவை வழங்கியது.

எதிர்காலத்திலும் ஆதரவை வழங்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply