• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்ட ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை தொடர்ந்து நடத்த ரஷியாவுக்கு ஆயுதம், வெடிப்பொருட்கள் தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவுடன் நட்பை வளர்த்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் ரஷியாவின் ராணுவ மந்திரி செர்கெய் ஷோய்கு வடகொரியா சென்றிருந்தார். கடந்த மாதம் வடகொரியா அதிபர் கிம் ஜான் உன் ரஷியா சென்றிருந்தார். அப்போது புதினை சந்தித்து பேசினார்.

மேலும், ஆயுத தொழிற்சாலைகள், போர் விமானங்களை ஆய்வு செய்தார் கிம் ஜாங் உன். இதனால் ரஷியா ராணுவ தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு வழங்க இருப்பதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்தன.

இருநாடுகளுக்கும் இடையில் ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைன் போரில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவ், வடகொரியா சென்றுள்ளார். இருநாடுகளுக்கு இடையிலான ராஜாங்க ரீதியிலான நட்பில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, வடகொரியா ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்டெய்னரில் ராணுவ பொருட்களை ரஷியாவுக்கு வடகொரியா வழங்கியுள்ளது என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷியா அதிபர் புதினை தங்கள் நாட்டிற்கு அழைத்துள்ளார். இதை புதினும் ஏற்றுள்ளார். ஆனால், தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த வாரத்தின் தொடக்கத்தில்தான் புதின் சீனா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply