• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாகர சங்கமம்

சினிமா

1983ம் ஆண்டு ஜுன் 3ம் தேதி ’சலங்கை ஒலி’ வெளியானது. முதலில் ’சாகர சங்கமம்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி, தமிழில் டப் செய்து வெளியிடப்பட்டது. 
அன்று படம் பார்த்து வெளியே வந்தவர்கள்
கனத்த இதயத்துடன், பாக்கெட்டில் இருந்து ஆண்கள் கைக்குட்டையையும் பெண்கள் சேலைத்தலைப்பையும் கொண்டு, கண்களைத் துடைத்தபடி, இறுகிய முகத்துடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தார்கள்.
இப்போது ’சலங்கை ஒலி’ பார்த்தாலும், பாலு எனும் கலைஞன் எதிரே வந்து நிற்பான். கனத்த இதயத்துடன், நீர் நனையும் கண்களுடனும் இறுகிய முகத்துடனும் நாம் இருப்போம்.
’சங்கராபரணம்’ தந்த கே.விஸ்வநாத்தின் இன்னுமொரு பிரமாண்டப் படைப்பு. கமல் எனும் கலைஞனின் மகுடத்தில், இன்னுமொரு மயிற்பீலி. இளையராஜா எனும் இசையரசனின் ராஜாபாட்டைகளில் தனியிடம் பிடித்த படம். கவிப்பேரரசு எனும் ரசனைக் கவிஞனின் ஒவ்வொரு வரிகளிலும் பரதமும் காதலும் நட்பும் தோல்வியும் தெறித்து விழச் செய்யும் விதமான படைப்பு. ஜெயப்ரதா எனும் பேரழகும் பெரு நடிப்பும் கொண்ட உன்னத நடிகையின் முக்கியப் படங்களில் உயிர்ப்பானதொரு படம்... ’சலங்கை ஒலி’!
சைக்கிள் ரிக்‌ஷாக்காரருக்கு உதவியாக இறங்கிக்கொண்டு, தள்ளிக்கொண்டே வரும் போது, டைட்டில் முடியும். கதை, திரைக்கதை, டைரக்‌ஷன் கே.விஸ்வநாத் என்று கார்டு போடுவார்கள்.
அங்கிருந்து தொடங்கும் கமல், கே.விஸ்வநாத் கூட்டணியின் அதகள ஆட்டம்.
சரத்பாபு, கமலின் நண்பன். சரத்பாபுவின் மனைவியோ கமலுக்கு அம்மா மாதிரி. பரதத்தில் சகலமும் கற்றுத் தேர்ந்து பெரிய ஆளாக வரவேண்டும் எனும் ஆசை கமலுக்கு. ஆனால் நேரமும் காலமும் காசும்பணமும் வாய்க்கவேண்டுமே! அவரின் அம்மா சமையல் வேலை. ரயில்வே ஸ்டேஷனில், அம்மாவைப் பார்க்க கமலும் சரத்பாபுவும் வருவார்கள். ரயில் கிளம்பும்போது அம்மா செலவுக்குக் காசு தருவார். ரயில் கிளம்பிவிடும். ‘வயசான அம்மாகிட்ட காசு வாங்குறியே. வெக்கமா இல்ல. நாம சம்பாதிச்சு அவங்களுக்குக் கொடுக்கணும்டா’ என்பார் சரத்பாபு. உடனே ஓஓஓஓஒடிப்போய், அம்மாவிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘அடுத்த மாசம் பணம் அனுப்பறேம்மா. உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கோ’ என்று சொல்லிவிட்டு நிற்பார். தான் சொன்னதைக் கேட்ட நண்பனை நெகிழ்வுடன் அணைத்துக்கொண்டு நடப்பார் சரத்பாபு. ‘அம்மாகிட்ட பணம் அனுப்பறேன்னு சொல்லிட்டேன். எதாவது வேலை வாங்கிக் கொடுடா’ என்பார் கமல். அங்கே நாம் மெர்ஜாகிவிடுவோம்.
போட்டோ ஸ்டூடியோக்கார பையனின் அலும்பு செம. கமலை விதம்விதமாக போட்டோ எடுக்கிறேன் என்று, முதுகு, ஒற்றைக் கால், கன்னம் சொரியும் போது என்றெல்லாம் எடுத்து அசிங்கப்படுத்த, அதே காட்சிகளை கமலுக்குத் தெரியாமல் ஜெயப்பிரதா எடுத்திருப்பார். அந்தக் காட்சி, காமெடிக்கு காமெடி. ரசனைக்கு ரசனை. அந்தப் பையன் தான், ‘தசாவதாரம்’ படத்தில் கமலின் நண்பனாக நடித்தார். ‘உன்னைப் போல் ஒருவன்’ என்று கமலை வைத்தும் அஜித்தை வைத்து ‘பில்லா 2’வும் எடுத்து சக்ரி டோலட்டி என்பது கொசுறுத் தகவல்.

கல்யாண மண்டபத்தின் சமையற்கட்டில் அம்மா முதன்முதலாகப் பார்க்கிற வகையில் ஆடுகிற ஆட்டம், நம்மைக் கலங்கடித்துவிடும். கமலுக்கும் ஜெயப்ரதாவுக்குமான பழக்கம், நட்பாகி, அங்கே சொல்லாத காதலாய் ஒளிந்துகொண்டிருக்க, சலங்கையின் ஒலியுடன் காதலும் ஜதி சொல்லிக்கொண்டே இருக்கும்.
சினிமாக்காரரிடம் அழைத்துச் செல்ல, அங்கே கீதாவுடன் கெட்ட ஆட்டம் போடும்போது, கமலின் ரியாக்‌ஷன்... அப்ளாஸ் அள்ளும். அதன் பிறகு அந்த ஆவேசத்தை நடனமாடித் தீர்த்துக்கொள்வார். அந்த இடம் கமல் தன் நடிப்பாலும் நடனத்தாலும் மிரட்டிவிடுவார்.
கதக் கற்றுக்கொள்ள குருவிடம் சொல்லச் சொல்லி ஒரு பெண்ணிடம், பணமில்லை, காசில்லை, வேலையில்லை, வேலை செய்து, பணிவிடை செய்து கழித்துக்கொள்கிறேன். கற்றுக்கொடுங்கள் என்பதை அபிநயத்திலேயே சொல்வார் கமல். அவரின் நடனமும் நடிப்பும் அங்கே கொடிகட்டிப் பறக்கும்.
ஜெயப்பிரதாவின் மகளாக பின்னணிப் பாடகி எஸ்.பி.ஷைலஜா. தப்பாக எழுதிவிட்டார் என்று கமல் மீது கோபப்பட, அங்கே, கமல் ‘பஞ்சபூதங்களும்’ என்பதற்கு ஒவ்வொருவிதமாக ஆடிக்காட்டுவார். அப்படி கால்தூக்கி ஆடும்போது, காபி டவராக்கள் பறந்துசென்று, ஷைலஜாவின் காலடியில் விழுந்து ஒரு ஆட்டம் ஆடி ஓயுமே... அது நம்மூர் கே.பாலசந்தர் டச் போல, கே.விஸ்வநாத் டச்.
டெல்லியில் மிகப்பெரிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய விழா. அந்த அழைப்பிதழைப் பார்த்தே மிரண்டுபோவார் கமல். ஒவ்வொரு பக்கமாகத் திருப்புவார். அவர்களைப் பற்றி விவரிப்பார். பிரமிப்பார். சிலாகிப்பார். கொண்டாடுவார். அப்படியே ஒருபக்கம் திருப்ப... அங்கே, கமலின் புகைப்படம். அவரைப் பற்றிய குறிப்புகள். ‘இவரும் பெரிய ஆளுதான் பாலுசார். ஒருநாள் பெரிய ஆளா வருவாரு’ என்று ஜெயப்ரதா சொல்ல, அழுது, உருகி, நெகிழ்ந்து, நெக்குருகி நன்றி சொல்லத் தவித்து மருகுவாரே... கலைஞன் கமல் கோட்டையை எழுப்பி, கொடி நாட்டி, கம்பீரமாய் உயர்ந்து நிற்பார். அவ்வளவு நேர்த்தியான, யதார்த்த நடிப்பு!
டெல்லி விழா. முன்னதாக கமலின் ஆட்ட ரிகர்சலும் ஆட்டம் முடிந்து ஆட்டோகிராப் கேட்டு சுற்றிக்கொள்ளும் கூட்டமும் என கற்பனைக் காட்சி. சிரிக்கவும் வைக்கும்; வலிக்கவும் செய்யும்.
அம்மாவின் மரணம். அம்மாவுக்கு முன் சலங்கை கட்டிக்கொண்டு ஆடும் காட்சியில் கமலின் முக எக்ஸ்பிரஷன்கள், காலத்துக்கும் மறக்காது.
ஒருவழியாக, சரத்பாபுவை அவர் காதலியுடன் சேர்த்துவைத்து, முதலிரவுக்கு அனுப்பிவிட்டு, கமலும் ஜெயப்ரதாவும் இருக்க, பாட்டு ஒலிக்கும். மெளனமான நேரம். காதலும் ஏக்கமுமாக கமல் பார்க்க, ஜெயப்ரதா வேறு எங்கோ பார்த்துவிட்டு பார்ப்பார். உடனே கமல், வேறு எங்கோ பார்ப்பார். அதேபோல், கமலையே பார்த்துக்கொண்டிருப்பார் ஜெயப்ரதா. கமல் பார்க்கும்போது சட்டென்று வேறு எங்கோ பார்ப்பார். அந்தப் பாட்டு மொத்தத்திலும் கவிதை ராஜாங்கம் பண்ணும். ராஜாவும் ராஜாங்கம் பண்ணியிருப்பார். கூடவே, ஜெயப்ரதாவின் புடவைகள் அழகு காட்டும், படம் மொத்தத்தையும் நிவாஸின் கேமிரா , நமக்கு ஒற்றிக்கொள்வது போல், அள்ளியள்ளி வழங்கியிருக்கும்!
’ஓம் நமசிவாய’, ’வான் போலே வண்ணம் கொண்டு’, ’நாத விநோதங்கள்’, ’மெளனமான நேரம்’, ’தகிட ததுமி தகிட ததுமி’, ’வேதம் அணுவிலும் ஒரு நாதம்’ என்று எல்லாப் பாடல்களுமே மனதை வருடும். வாட்டும். அள்ளும். அசைத்துப்போடும். அதேபோல், படத்தின் பின்னணி முழுக்கவே இளையராஜா, முழுக்கவனம் செலுத்தி, பிஜிஎம்மில் எப்பவும் நான் ராஜா என்று நிரூபித்திருப்பார்.
அதேபோல், கதாபாத்திரத்தின் தன்மையையும் கதையையும் உணர்ந்ததுடன் லிப் மூவ்மெண்ட்ஸ்க்கு தகுந்தது போலவும் வசனம் எழுதியிருப்பார் பஞ்சு அருணாசலம்.
ஜெயப்பிரதாவுக்கு ஏற்கெனவே கல்யாணமாகியிருப்பதையும் பிரிந்திருப்பதையும் சொல்லும் இடம் கவிதை. ரணப்படுத்திவிடும். பிறகு மனம் திருந்தி திரும்பி வரும்போது கமலே சேர்த்துவைப்பார். ஒருபக்கம், கலையும் இல்லை; இன்னொரு பக்கம் காதலும் இல்லை. நொறுங்கிப் போகிற காட்சிகளில் பாலுவாகவே வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன்.
கடைசிக் காட்சியில் ஷைலஜாவின் ஆட்டத்துக்கு கைத்தட்டல் கிடைக்கும். முன்னதாக, குருவாக கமல் அறிமுகப்படுத்தப்படுவார். கற்றுத்தரும்போது, கமலின் கையை காலால் மிதித்துவிடுவார். அது நினைவுக்கு வந்து பதறும் காட்சியில் நம்மை வசமாக்கிக் கொள்வார் இயக்குநர் கே.விஸ்வநாத். பூர்ணோதயாவின் ஏடித.நாகேஸ்வர ராவ் தயாரித்திருப்பார்.
சலங்கை ஒலி, கே.விஸ்வாத்துக்காக பார்க்கலாம். இளையராஜாவுக்காக பார்க்கலாம். வைரமுத்துவின் வரிகளுக்காகப் பார்க்கலாம். ஜெயப்ரதாவுக்காகப் பார்க்கலாம். கமலுக்காக பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
படத்தின் முடிவில், பாலு என்கிற கமல், இறந்துவிடுவார். சக்கரநாற்காலியில் இறந்துவிட்ட கமலை, மேடையில் இருந்து, அரங்கில் இருந்து, வெளியே தள்ளிக்கொண்டு சரத்பாபு நடக்க, கொட்டியெடுக்கும் மழை. அப்போது ஓடிவந்து கமலுக்கு, பாலு எனும் கலைஞனுக்கு குடை பிடிப்பார் ஜெயப்ரதா. பின்னணியில் நடன சங்கதிகள், தாளக்கட்டுகள், ஜதிகள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
END என்று ஸ்கிரீனில் வரும். அடுத்து END எழுத்துக்கு மேலே, NO என்று வரும். பிறகு, NO END எழுத்துக்களுக்குக் கீழே FOR ANY ART என்று டைட்டில் வரும். அதாவது
NO
END
FOR ANY
ART
என்கிற டைட்டிலுடன் முடியும்.
இது ரீமேக் சீசன். அந்தப் படம் இந்தப் படம் என்று ரீமேக்குகிறார்கள். அப்படி யார் முயன்றாலும் ரீமேக் பண்ணவே முடியாத படம்... சலங்கை ஒலி! இந்தக் கூட்டணியின் சலங்கை ஒலிக்கு நிகரே இல்லை. இருக்கப்போவதும் இல்லை!
கலைஞன் சாகாவரம் பெற்றவன். ’சலங்கை ஒலி’யும் அப்படித்தான்!
நன்றி ...
தமிழ் ஹிந்து.

 

Leave a Reply