• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திசை மாறிச் செல்லும் யாழ் பெண்களின் வாழ்க்கை முறை..

இலங்கை

தற்காலத்தில் திருமண வீடுகளில் நான்காம் சடங்கு என்று கூறிக் கொண்டு பல உயிர்களை வெட்டி வீழ்த்தி,
தாமும் உறவினர்களும் நன்பர்களும் பசியாற உண்பதையே பலர் வழக்கமாக கொண்டுள்ளார்கள். உன்மையில் அதுவல்ல அதன் அர்த்தம்.
திருமணமாகி சுமங்கலியான பெண் தனது வாழ்க்கை பயணத்தை எவ்வாறு தொடங்க வேண்டும் என்று நமது சைவப் பாரம்பரியம் பல விதிமுறைகளை தெளிவாக வகுத்து கொடுத்துள்ளது.
பூதாக்கலம் என்பது திருமணமாகி சுமங்கலியான பெண் தனது கணவனுடன் எவ்வாறு உணவு அருந்த வேண்டும் என்பது பற்றி மிக தெளிவாக பல விதிகளை சொல்லுகின்றது.
பல வயதான சுமங்கலி பெண்கள் எவ்வாறு உணவுகளை தயாரிப்பது அதை எவ்வாறு பரிமாறுவது என்பது பற்றி புதிதாக திருமணமாகி சுமங்கலியான பெண்ணிற்கு கற்றுக் கொடுத்து வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள்.
வாழை இலையிலே அன்னம் போட்டு அதன் பின்பு மருத்துவ குணம் உடைய பாகற்காய் போன்ற கறி வகைகளை வலப் பக்கமாகவும் ஏனைய சுவை மிக்க கறி வகைகளை இடப் பக்கமாவும் வைத்து பரிமாற வேண்டும் என்று நம் முன்னோர்கள் சுமங்கலி பெண்களிற்கு சொல்லிக் கொடுத்தார்கள்.
உடலிற்கு நன்மை செய்யக் கூடிய மருத்துவ குணம் உடைய உணவுகளை தனது கணவன் இலகுவில் எடுத்து உண்ணும் பழக்கத்தை இதன் மூலம் சொல்லிக் கொடுத்தார்கள்.
திருமணமான பல வயதான சுமங்கலி பெண்கள் முதல் முதலில் திருமணமாகி செல்லுகின்ற பெண்ணிற்கு உணவு தயாரிப்பது தொடக்கம் அதை பரிமாறுவது வரை பல விதிகளை தெளிவாக சொல்லி கொடுப்பார்கள்.
திருமணம் நடைபெற்று நான்கு நாட்கள் சடங்கு நடைபெற்றது. நான்காம் சடங்கோடுதான் அவர்களை தனிக் குடித்தனத்திற்கு அனுப்பினார்கள் நம் முன்னோர்கள்.
அந்த நான்கு நாட்களுக்குள் அந்த புதிய சுமங்கலிப் பெண் அறிய வேண்டிய தனது கடமைகள் பற்றியும் விதிகள் பற்றியும் பல வயதான சுமங்கலிப் பெண்கள் மிகப் பக்குவமாக சொல்லிக் கொடுப்பார்க்ள்.
மங்களகரமான நமது திருமண முறைகள் எல்லாம் தற்காலத்தில் நாகரிகம் என்ற போர்வையில் திசை மாறி நான்காம் சடங்கு என்றால் பல உயிர்களை வெட்டி வீழ்த்தி உறவுகளுக்கு விருந்து வைப்பது என்று தற்காலத்தில் மாறி விட்டது.
இதற்கு அறியாமைதான் காரணம்.

சுமங்கலியான பெண் தனது வாழ்க்கை பயணத்தை மங்களத்தோடு ஆரம்பித்து வாழ்விற்கான பல வழிமுறைகளை சொல்லி கொடுத்த எமது பாரம்பரியங்கள் எல்லாம் தற்காலத்தில் சிதைவடைந்து சென்று விட்டன.
எங்களுடைய சைத் திருமணங்களின் சடங்குகள் வெற்றிலையில் இருந்து தொடக்குகின்றது. வெற்றிலை என்பது மகாலட்சுமி ஆகும். திருமண நிச்சயதார்த்தத்தின் போது இரு வீட்டார்களும் வெற்றிலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வார்கள்.
நாங்கள் இதயத்தாலே எமது உள்ளத்தாலே இந்த மங்களத்தின் அடையாளமாக உள்ள வெற்றிலையாலே நாங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து ஒரு குடும்பமாக வாழ்வோம் என்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகின்றது.
இதே வெற்றிலையினைதான் அர்ச்சனைக்கு பயன்படுத்துகின்றோம். நாங்கள் உள்ளத்தாலே அன்னையே உன்னை வழிபடுகின்றோம் என்று உணர்த்துவதற்காக வெற்றிலையினை பயன்படுத்துகின்றோம்.
வெற்றிலையுடன் உள்ள பாக்கு சிவனும் சக்தியும் சேர்ந்தது. பாக்கு ஏதற்கு மங்களப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றது என்றால் அதிலே சிவனுடை சக்தியும் அம்பாளுடைய சக்தியும் உள்ளது.
ஒவ்வொரு நாளும் அர்ச்சனையிலே வெற்றிலையும் பாக்கும் வைக்கப்படுகின்றது வெற்றிலையும் பாக்கும் மங்களப் பொருட்கள் என்பதுடன் சிவனையும் சக்தியையும் பிரிக்க முடியாது என்ற தத்துவத்தினையும் இது நமக்கு சொல்லி தருகின்றது.
சைவத் தமிழ் திருமணங்களிலே பெண்ணுடைய கழுத்திலே தாலி ஏறுகின்ற பொழுது எந்தவொரு அபசகுணச் சத்தங்களும் கேட்க கூடாது என்பதற்காக கெட்டி மேளம் ஒலிக்க தாலி கட்டப்படுகின்றது.
ஒரு பெண்ணிற்கு சுமங்கலி என்ற உயர்ந்த அந்தஸ்தினை தரும் வேளையான தாலி கட்டும் நேரத்தில் எல்லோரும் கை எடுத்து கும்பிட வேண்டும். நமது பண்பாட்டிலே திருமச் சடங்கிலே திருமுறை பாடிய முறை எம்மிடத்திலே முன்பு இருந்தது.
தற்காலத்திலும் இந்தியாவிலே காரைக்குடியிலே இந்த முறை முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றது.
மண்ணின் நல்ல வண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின் நல்லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின் நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே
என தாலி கட்டப்படும் நேரத்திலே இந்த தேவாரத்தினை பாட வேண்டும். இந்த முறை நமது பண்பாட்டிலே முன்பு இருந்த ஒன்றுதான்.
யாழ்ப்பாணத்திலே தற்காலத்தில் திருமணங்களிலே கை எடுத்து கும்பிடுபவர்களை காண முடியவில்லை. மண மக்களின் பெற்றோர்கள்தான் பாவம் தமது பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் கை எடுத்து கும்பிடுகின்றார்கள் ஏனையவர்கள் இதை செய்வதே இல்லை.
ஒரு அபசகுணமும் இல்லாமல் தாலி கட்ட வேண்டும் என்ற எமது பண்பாட்டிலே தற்போது தாலி கட்டும் போது வீடியோ புகைப்படம் எடுப்பவர்கள் பொறுங்கோ பொறுங்கோ என்று சொல்லுகின்றார்கள். அந்தப் பக்கம் திரும்புங்கோ இந்தப் பக்கம் பாருங்கோ என்று கட்டளை இடுகின்றார்கள்.
மங்களகரமாக தாலி ஒரு பெண்ணின் கழுத்திலே ஏற வேண்டும் என்றே அக்கினி வளர்த்து பல சடங்குகள் செய்து திருமணத்தை ஏற்பாடு செய்யும் போது தாலி ஏறும் நேரத்தில் பல அப சகுணக் காரியங்களை படத்திற்காக நம்மவர்கள் செய்கின்றார்கள்.
ஆயிரம் காலத்து பயிராக இருக்கப் போகின்ற இந்த சுமங்கலி வாழ்வு எவ்வித குறைவின்றி இருக்க வேண்டும் என்பதற்காக பல சடங்குளை புரோகிதர்களை அழைத்து செய்யும் போது படம் வீடியோவிற்காக பலர் இன்று திசை மாறி நடக்கின்றார்கள்.
ஒரு பெண்ணிற்கு மங்களமான வாழ்வு கிடைக்கும் போது மங்களத்தின் அடையாளமாகிய குங்குமம் நெற்றியிலே வைக்கப்படுகின்றது. நெற்றியின் உச்சியிலே போடப்படுகின்ற குங்குமம் பார்வதியின் அடையாளம் ஆகும்.
பார்வதி தேவி நித்திய கல்யாணி, நித்திய சுமங்கலி ஆவாள். ஆனால் இந்த குங்கும பொட்டுகளை பல பெண்கள் தற்காலத்திலே குறுக்கி கொண்டே வருகின்றார்கள்.
அம்பாளை தேடி வருகின்ற மிகவும் வயதானவர்களை பார்த்தால் மிகவும் அழகாக பெரிய குங்கும பொட்டுடன் வருகின்றார்கள் ஆனால் இளம் பெண்கள் குங்கும பொட்டு நெற்றியிலே உள்ளதா என்று தெரியாத அளவிற்கு வருகின்றார்கள்.
குங்குமம் என்பது அம்பாளின் அடையாளமான மங்களப் பொருள் ஆகும். தேவர்கள் சாட்சியாக, தெய்வங்கள் சாட்சியாக, அக்கினி சாட்சியாக, அருந்ததி சாட்சியாக, பசு சாட்சியாக சுமங்கலிப் பெண் முதன் முதலில் தனது நெற்றியிலே குங்கும பொட்டினை வைக்கின்றாள்.
இது மிக மிக பெறுமதியானது.தற்காலத்தில் பல பெண்களிற்கு இதன் பெறுமதி தெரிவதில்லை சில பெண்கள் திருமணமான பின்பு நாகரிகம் என்று பொட்டு இல்லாமல் அமாவாசை நெற்றியுடன் திரிகின்றார்கள்.
அமாவாசை என்பது இருட்டு குங்குமம் என்பது பெளர்ணமி ஆகும். இன்று மங்களமான தெய்வ அம்சம் பொருந்திய குங்கும பொட்டின் பெறுமதியினை பல பெண்கள் அறியாமல் திரிகின்றார்கள்.
குங்குமம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களை வலிமைப்படுத்துகின்ற சக்தியும் கூட இதை தயவு செய்து பெண்கள் உணர்ந்து நடவுங்கள்.
திருமணங்களிலே எந்தவொரு அப சகுணங்களும் நடந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு காரியங்களையும் விதிகளிற்கு அமைய நம் முன்னோர்கள் செய்து முடித்தார்கள்.
மண மக்களை வாழ்த்துகின்ற போது கூட மங்களமான வார்த்தை கொண்டு வாழ்த்த வேண்டும்.
தற்காலத்திலே வீடுகளிலும் மண்டபங்களிலும் இதயங்களை வரைந்து அதற்கு குறுக்காக அம்புகளை வரைந்து திருமண வாழ்த்து தயாரிகின்றார்கள்.
அம்பு என்பது யுத்த களத்திலே பயன்படுத்தப்படுகின்ற ஒரு ஆயதம் ஆகும். மகிழ்சிகரமான மங்களகரமான நிகழ்வுகளிற்கு யுத்த களத்திலே உயிர்களை கொல்ல பயன்படுத்தும் ஆயுதமான அம்பினை வரைந்து நாகரிகம் என்ற பெயரிலே அப சகுண காரியங்களை செய்கின்றார்கள்.
திருமணங்களிலே என்னென்ன காரியங்களை செய்யலாம் எவற்றை செய்ய கூடாது என்ற சடங்குகள் சம்பிரதாயங்களை நம் பெரியவர்கள் வகுத்து வைத்தார்கள். அதையெல்லாம் தற்காலத்தில் நாகரிகம் என்ற பெயரில் மறந்து வாழ்வது பெரும் மன வேதனையான ஒன்றாக உள்ளது.
ஒரு சுமங்கலிப் பெண்னின் வாழ்வை மிக பக்குவமாக இறை வழிபாடுகளுடன் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக நம் பெரியவர்கள் பல சடங்குகளை சொல்லி வைத்தார்கள்.
ஒரு பெண் சுமங்கலியான பின்னாலே ஆடவன் குணித்து சுமங்கலி பெண்ணின் கால்களை தொட்டு பெண்ணின் பாதத்தினை தூக்கி அம்மி கல்லிலே வைத்து அம்மியுடைய வலிமை போல இந்தப் பெண்ணின் மனத் துணிவு வலிமை பெற வேண்டும் என்று ஆடவன் பிரார்த்திப்பதாக நமது பெரியவர்கள் சடங்குகளை வகுத்தார்கள்.
அதன் பின் சுமங்கலி பெண் தனது நாயகனுடன் அக்கியினை ஐந்து தடவைகள் சுற்றி வருகின்றாள். இதற்கு பஞ்ச யக்ஞம் என்று பெயர் வைத்தார்கள்.
இன்று தொடக்கம் கணவன் மனைவி ஆகிய நாங்கள் எமது வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களிற்கு உணவளிப்போம் என்றும் வீட்டிற்கு வருகை தரும் முனிவர்கள், துறவிகள் போன்றவர்களிற்கு உணவளிப்போம் என்றும்,
எமது முதாதையர்களை நினைத்து அவர்களிற்கு செய்ய வேண்டிய கடமைகள நாங்கள் தவறாமல் செய்வோம் என்றும், ஒவ்வொரு நாளும் அமரத்துவம் அடைந்தவர்களை நினைத்து உணவினை படைப்போம் என்றும் மிருகங்கள் பறவைகளிற்கும் வீட்டில் உள்ள பசு போன்ற உயிர்களிற்கும் உணவு கொடுப்போம் என்றும்,
அக்கினியினை ஐந்து தடவைகள் சுற்றி வந்து ஐந்து சத்தியங்களை எடுக்கின்றார்கள்.
ஆனால் தற்காலத்தில் பல திருமணங்களிலே இதன் அர்த்தம் தெரியமால் வெறும் படப் பிடிப்பிற்காக வெறும் பொழுது போக்காக அக்கினியினை சுற்றி வருகின்றார்கள்.
நெருப்பு அதாவது அக்கினி என்பது மிகவும் பலம் பொருந்திய இயற்கை தெய்வம் ஆகும் அதன் மீது தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம், மானுஷ்ய யக்ஞம், பிரம்ம யக்ஞம் என்ற ஐந்து சத்தியங்களை சுமங்கலி பெண் தனது கணவனுடன் எடுக்கின்றாள்.
சுமங்கலி பெண்கள் தங்களை போல ஏனைய பெண்களும் சுமங்கலியாக குறைவின்றி வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கண்ணகி பொட்டிழந்து, பூவிழந்து எல்லாம் இழந்து ஒரு அன்னிய நாட்டிலே போய் நிற்கின்றாள். ஆதரவற்று கண்ணகி நிற்கும் போது அவள் முன் தோன்றிய அக்கினி தேவதை நாங்கள் என்ன செய்ய வேண்டும் என கேட்கின்றது.
மதுரையிலே என்னுடைய கணவனின் இறப்பிற்கு காரணமான பல தீயவர்கள் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றாள் கண்ணகி. உடனே அக்கினி தேவதை நான் மதுரையை எரிக்கட்டுமா என்று கேட்டது.
அதற்கு கண்ணகி பத்தினிப் பெண்கள் மங்களத்துடனும் குங்குமத்துடனும் இருக்கும் பெண்களிற்கு இடைஞ்சல் செய்யாதே, ஆலயங்களிலே பூசைகள் செய்து அனைத்து உயிர்களும் குறைவின்றி வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கும் பூசகர்களிற்கு ஒன்றும் செய்யாதே,
குழந்தைகளை ஒன்றும் செய்யாதே, வயதான மூத்தேர்கள், உடல் ஊனமுற்றவர்களை ஒன்றும் செய்யாதே, தீயவர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அவர்களை தேடிச் சென்று தண்டனை வழங்கு என்று சொன்னாள் கண்ணகி.
பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு, தீத் திறத்தார் பக்கமே சேர்க என்றாள் கண்ணகி.
எங்களுடைய பெண்கள் எவ்வாறு உயர்த் உள்ளத்தோடு வாழ்ந்தார்கள் என்பதற்கு கண்ணகி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளாள்.
கண்ணகி என்ற பெண் அம்பாள் என்ற தெய்வ நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம், தான் கொடிய துன்பங்களை அனுபவித்தாலும் சுமங்கலி பெண்களை ஒன்றும் செய்து விடாதே என்ற அந்த உயர்ந்த குணம் அவளை தெய்வ நிலைக்கு உயர்த்தி செல்கின்றது.
கண்ணகி நீதி தேவதை மட்டுமல்ல தற்கால பெண்கள் அவளிடம் இருந்து நிறைய விடையங்களை கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதனாலே எந்தவொரு பெண்ணிற்கும் துன்பம் வரக் கூடாது தன்னைப் போலவே ஏனைய பெண்களும் சுமங்கலியாக வாழ வேண்டும் என்று சிந்திப்பவளே உன்மையான பெண் ஆவாள்.
தனக்கு மட்டும் வாழ்வு வந்தால் போதும் என்று எண்ணாமல் தன்னைப் போலவே மற்றப் பெண்களும் சுமங்கலியாக வாழ வேண்டும் என்று எண்ணுவதே உயர்நத குணம் ஆகும்.
பண்புள்ள பத்திப் பெண்கள் என்பவள் தனக்கு மட்டுமல்ல மற்ற பெண்களும் நல்ல வாழ்வு பெற வேண்டும் என எண்ணத்துடன் நடப்பாள் என்று கூறி,
எல்லாம் வல்ல தெல்லிப்பளை துர்க்கை அம்பாளின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டி எனது உரையினை முடித்துக் கொள்கின்றேன்

 

நன்றி
ஆறு.திருமுருகன்,
தலைவர்,
துர்க்கா தேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பளை.

Leave a Reply