• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை அரசுக்கு எதிராக இராமேஸ்வரம் மீனவர்கள் கண்டனப் போராட்டம்

இலங்கை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 27 இராமேஸ்வரம் மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று இராமேஸ்வரம் மீனவர்களினால் கண்டனப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

நெடுந்தீவு, தலைமன்னார் அருகே எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழ்நாட்டின், இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 27 மீனவர்கள் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தன.

இந்நிலையில், இவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 15 ஆம் திகதி, இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். மேலும், இலங்கை கடற்படையினரின் இந்தச் செயற்பாட்டை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

இதற்கிணங்க, இன்று இராமேஸ்வரம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய மத்திய அரசாங்கத்தை கண்டித்து இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

2018 ஆம் ஆண்டுமுதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட விசைப்படகுகளை மீட்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply