• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல மலையாள நடிகர் குந்தரா ஜானி காலமானார்

சினிமா

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் குந்தரா ஜானி (வயது 71). கொல்லம் பகுதியில் வசித்து வந்த இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள நடிகர் குந்தரா ஜானி கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்த அவர் ஒருவருடம் இணைக்கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். பின்பு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தபோது நண்பரின் தந்தை மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

1979-ம் ஆண்டு நித்யவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 23 ஆகும். ஆனால் அந்த படத்தில் அவர் 55 வயது கேரக்டரில் நடித்திருந்தார். பல படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்து சென்னையில் ஒரு வருடம் ஓடிய புகழ் பெற்ற துப்பறியும் திரைப்படமான 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு' திரைப்படத்தில் டிரைவர் வாசு வேடத்தில் கலக்கியிருந்தவர் ஜானி. மேலும் மோகன்லால் உள்ளிட்ட பல பிரபல மலையாள நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2022-ம் ஆண்டு மேப்படியான் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் சத்யராஜ் கதாநாயகனாக நடித்த 'வாழ்க்கை சக்கரம்' மற்றும் 'நடிகன்' திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா கொல்லத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 
 

Leave a Reply