• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா ஸ்காவுறோவில் மிகச் சிறப்பாக நடைபெற்ற பல்சுவைக் கலைவிழா

கனடா

கனடா உதயன் பத்திரிகையின் பல்சுவைக் கலைவிழா ஸ்காவுறோவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கனடா ஒன்ராறியோ மாநில முதியோர் நலன் பேணல் விவகார அமைச்சர் றேமண்ட் சோ, கனடா பாராளுமன்ற உறுப்பினர் சல்மா ஷாகித், ரொறொன்ரோ நகர பிரதி மேயர் ஜெனிபர், ரொறொன்ரோ நகர கவுன்ஸ்லர் ஜமால் மேயர், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், தமிழகப் பாடகர் வி.எம்.மகாலிங்கம் மற்றும் சுமார் நாநூறுக்கும் மேற்பட்ட நேசத் தமிழ் நெஞ்சங்கள் கலந்து கொண்ட கனடா உதயன் விழாவுக்கு சுவிஸ் தொழிலதிபரும், சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவரும், எழுத்தாளரும், கவிஞரும், பேச்சாளருமான கலாநிதி கல்லாறு சதீஷ் என்கிற முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா அவர்கள் பிரதம விருந்தினராக அழைக்கபட்டிருந்தார்.

பிரதம விருந்தினர் கல்லாறு சதீஷ் அவர்களுக்கு கனடிய நலவாழ்வு அமைச்சர் றேமண்ட் சோ பொன்னாடை போர்த்திக் கெளரவித்ததுடன், ஒன்ராறியோ மாநில பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி, ரொறோன்ரோ மாநகர கவுன்ஸிலர் ஜமால் மேஜர்ஸ் ஆகியோர் கனடா வருகையை வரவேற்று அவர்தம் தமிழ்ப் பணியை வாழ்த்தி உரை நிகழ்த்தியதுடன் சிறப்புச் சான்றிதழ்களும் வழங்கிக் கெளரவித்தார்கள்.

கனடிய அரசு சார் உறுப்பினர்கள் கல்லாறு சதீஷ் கனடா வந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் அவரை வாழ்த்தி வரவேற்பது தமிழுக்குக் கனடா வழங்கும் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியாகவே நோக்கப்படுகிறது.

2015 ம் ஆண்டு ஒன்ராறியோ மாநில முதலமைச்சர் கதலின் வின் சான்றிதழ் வழங்கி வரவேற்றதுடன் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனும் வரவேற்பு வழங்கியிருந்தார்.

2014ம் ஆண்டு கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானி பாராட்டியதுடன் சான்றிதழும் வழங்கி வரவேற்றார்.

பிரதம விருந்தினர் கல்லாறு சதீஷ் தனது உரையில், ”கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மெளனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மெளனித்தது, 2009 ஆண்டு மீண்டுமொரு முறை தமிழர்களின் ஆயுதங்கள் மெளனித்தன,

இப்படி ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும், வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன! உயிர்கள் விதைக்கப்பட்டன, இரத்தங்கள் வார்க்கப்பட்டன, சதைகள் வீசப்பட்டன, அத்தனையும் விரயமாயின!

எனவே தங்களின் உரிமைகளுக்காகத் தமிழர்கள் எதிர்காலத்தில் “அன்பு “என்கிற வழியை மட்டுமே கடைப்பிடிக்க வேண்டும், அதற்காகக் கல்வியிலும், பொருளாதாரத்திலும் தங்களை மேலும் வளர்த்துக்கொண்டு பேச்சு வார்த்தைகளின் மூலம் மட்டுமே தமிழர்கள் தாங்கள் இழந்த உரிமைகளை மீட்டுக்கொள்ள வேண்டும்,

திருக்குறளைப் படித்த மகாத்மா காந்தி “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” எனும் குறலின் படிதான் பிரித்தானியாவுக்கு எதிராக அகிம்சை வழி நடந்து மாபெரும் இந்திய தேசத்தை மீட்டெடுத்தார்.

அந்த மகாத்மாவின் வழி ஒன்றே இன்றைய உலகப்போக்கில் தமிழகள் உரிமைகளைப் பெற ஒரே வழி என்று நான் கருதுகிறேன்.

மனித மனங்களை வெற்றிகொள்வதன் மூலம் மட்டுமே நிரந்தரத் தீர்வை அடைய முடியும்” என்று பேசினார்.

மற்றும் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள்,மேயர்,கவுன்சிலர்,என்று பலரும் உரை நிழ்த்த நடனம்,நாட்டிய நாடகம் என இயல், இசை, விழாவாக உதயன் பல்சுவைக் கலாச்சாரவிழா இனிதே நடைபெற்றது.

புலம்பெயர் தமிழர்களின் உச்ச நட்சத்திரப் பத்திரிகையாக கனடா உதயன் மட்டுமே விளங்குகிறதென்றால் அதனை மறுப்பதற்கு எந்த மூலங்களும் இருந்து விடாது.

கடந்த 27 ஆண்டுகளாக உதயன் என்றும் அதற்கு முன்னர் 3 ஆண்டுகள் சூரியன் என்றும் முப்பதாண்டுகள் வரலாறைக் கொண்டது கனடா உதயன் பத்திரிகை.

வாரந்தோறும் அச்சுப் பத்திரிகையாகவும், நிமிடம் தோறும் இணையப் பத்திரிகையாகவும் “தித்திக்கும் தமிழ் உலகில் எத்திக்கும் கதிர் வீசும் செய்தி இதழ்” உதயன் என்று வியந்து கூறலாம்.

கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு.லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களின் சிந்தனையிலும்,தேனீயைவிடச் சிறந்த சுறு சுறுப்பிலும், அவர்தம் பாரியார் திருமதி லோகேந்திரலிங்கம் பாப்பா அவர்களின் ஆலோசனையிலும் கனடா உதயன் புலம்பெயர் தமிழர்களின் தனித்த அடையாளத்தைப் பெற்ற பத்திரிகையாகத் திகழ்வதை அவதானிக்க முடிகிறது.

கனடா உதயன் பத்திரிகை கடந்த ஞாயிறு (15.10.2023) அன்று மாலை ஸ்காவுறோ தமிழிசைக் கலாமன்றத்தில் நடாத்திய பல்சுவைக் கலைவிழா பத்திரிகையின் வெற்றியின் ஒரு அடையாளம் என்று கூறலாம்.

இந்த நிகழ்வுக்கு மட்டுமே சுமார் முப்பதற்கும் மேற்பட்ட வர்த்தகப் பிரமுகர்கள் நிதி அனுசரணை வழங்கியதுடன் அல்லாமல் விழாவுக்கு வந்தும் சிறப்பித்தனர்.

Leave a Reply