• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் - ஹமாஸ் படை அறிவிப்பு

பாலஸ்தீனர்களின் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்து, அடக்குமுறை செய்வதாக கூறி இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஆயுதப் படையினர் நீண்ட காலமாக சண்டையிட்டு வருகிறார்கள். கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் கடல், வான், சாலை வழியாக ஊடுருவிய ஹமாஸ் படையினர் தீவிர தாக்குதல் நடத்தினர்.

வெளிநாட்டவர் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை அவர்கள் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா தெருக்களில் குண்டு மழை பொழிந்து பெரும்பாலான கட்டிடங்களை தரை மட்டமாக்கியது. காசா நகருக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டது.

இதற்காக வடக்கு காசாவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. இஸ்ரேல் ராணுவத்தினர் தரைவழி தாக்குதல் எச்சரிக்கையால் வடக்கு காசாவில் இருந்து சுமார் 10 லட்சம் பாலஸ்தீனர்கள் கடந்த 4 நாட்களில் தெற்கு காசாவுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலையில் இஸ்ரேலின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஹமாசின் ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் அபு ஒபேதே ஒரு தொலைக்காட்சியில் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இஸ்ரேலின் தெற்கில் கடந்த 7-ந்தேதி அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு 200 பேரை பிணை கைதிகளாக பிடித்துள்ளோம். பிற இடங்களில் 50 பேரை கைது செய்துள்ளோம்.

எங்கள் மக்களுக்கு எதிராக தரை வழித் தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த அச்சுறுத்தல் எங்களை பயமுறுத்தவில்லை.

இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

குண்டு வீச்சை நிறுத்தினால்தான் வெளிநாட்டு பிணை கைதிகளை விடுவிப்போம். காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் இருந்து நாங்கள் பிடித்து வைத்த பிணை கைதிகள் 22 பேர் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு ஹமாஸ் ராணுவ செய்தி தொடர்பாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Leave a Reply