• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நினைத்தாலே இனிக்கும் (1979)

சினிமா

ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் பிரேமாலயா நிறுவனம் சார்பில் 1979ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று வெளியான படம் நினைத்தாலே இனிக்கும். எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியிருந்தார் கே.பாலச்சந்தர். கமல், ரஜினி, ஜெயப்பிரதா, ஜெயசுதா, கீதா, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோருடன் எஸ்.வி. சேகர் நடித்த முதல் படம் இது.

நண்பர்களுடன் இசைக்குழு நடத்தி வரும் நாயகன், எதிர்பாராத விதமாக கடத்தல் தொழிலில் ஈடுபடும், புற்றுநோயால் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் நாயகி இவர்களிடையே மலரும் காதல், நாயகி இறந்த பின் அவள் நினைவாலேயே காலத்தை கடத்தும் நாயகன் என கதை சிறிய அளவிலேயே இருந்தாலும், இந்த கதையை வைத்து கொண்டு காட்சிகளை சிங்கப்பூரில் படமாக்கியிருந்த விதமும், கதையினூடே இணைந்த சின்ன சின்ன சுவாரசியமான அம்சங்களும் தான் புதுமையான அம்சம். ஆனாலும் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. காரணம் இந்த படம் பாலச்சந்தரின் மற்ற படங்களை போல் அவரது பாணியில் அமையாமல் வெறும் பொழுது போக்கு படமாகவே எடுக்கப்பட்டிருந்தது தான் காரணம். மேலும் இந்த படம் வெளி வந்த கால கட்டத்தில் கமல் மற்றும் ரஜினி இருவரும் தனி தனி நாயகர்களாக உருவாகி வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்தனர். படத்தில் கமலின் நடனமும், ரஜினியின் சின்ன சின்ன குறும்புகளும் சொல்லிக்கொள்ளும்படி இருந்தன. நாயகியாக நடித்த ஜெயப்ரதாவின் நடிப்பும் படத்தில் அருமையாக இருந்தது.

படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் இந்த படத்தில் பரவலாக ரசிகர்களிடையே கவர்ந்த இரு அம்சங்கள் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் இசை.

ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோகநாத் கைவண்ணத்தில் சிங்கப்பூர் நாட்டில் காட்சிகள் எல்லாம் கண்ணை கவரும் வண்ணத்தில் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.

அடுத்தது படத்தின் இசை. மெல்லிசை மன்னர் இந்த படத்தில் ஒரு இசை ராஜாங்கமே நடத்தியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஒன்றுக்கொன்று போட்டி என்கிற அளவில் மிகவும் சிறப்பாக, இனிமையாக அமைந்திருந்தது. ஆகவே தான் படத்தின் விளம்பரங்களில் இது ஒரு தேனிசை மழை என விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Balan Krishnamurthy

Leave a Reply