• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கருப்பு வெள்ளைக் காலத்து நம்பர் ஒன் சினிமா புகைப்படக்காரர்

சினிமா

தமிழ்த் திரையுலகில் இரண்டு சிகரங்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் காதல் மன்னன் ஜெமினியும், புகழ்பெற்ற ‘ப’ வரிசைப் பட இயக்குனர் பீம்சிங்கும் இருக்கும் இந்த அபூர்வ புகைப்படத்தை எடுத்தவர் சிம்மையா. கருப்பு வெள்ளைக் காலத்து நம்பர் ஒன் சினிமா புகைப்படக்காரர். இந்தப் படம் பற்றி அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள்...

‘‘சிவாஜியும், ஜெமினியும் நடித்த  பதிபக்தி ’ ஷூட்டிங் ஏவி.எம் ஸ்டூடியோவில் நடந்தப்போ, பக்கத்து ஃப்ளோரில் எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் பிரேக்கில் இந்த படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார் 

நான் ஒன்றிரண்டு எம்.ஜி.ஆர் படங்களுக்குதான் வேலை செஞ்சிருக்கேன். சிவாஜி படங்களுக்கு பெரும்பாலும் நான்தான் போட்டோகிராபர்.

ஒருத்தரிடம் இருக்கும் திறமையை மனதாரப் பாராட்டத் தயங்காதவர் சிவாஜி. ‘எங்க ஊரு ராஜா’ படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். அவரோட இரண்டு வேடத்தையும் ஒரே போட்டோவில் கொண்டு வரணும்னு நான் நினைச்சேன். சிவாஜிகிட்ட அதைச் சொன்னேன். தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்தில் அது அவ்வளவு சுலபமில்லை. ‘உன்னால அது முடியுமா’ன்னு சந்தேகமா கேட்டார். ‘முயற்சி பண்றேன் அண்ணே’ என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு போஸ் கொடுத்தார். கேமரா லென்ஸில் அட்டையை வச்சு பாதி மறைச்சிட்டு எடுத்தேன். அவர் நின்ன இடத்துக்கும் ஃபிலிமுக்கும் ஒரு இஞ்ச் கூட நகராம மார்க் பண்ணினேன். பிறகு இன்னொரு வேஷத்தில் சிவாஜி வந்து நின்னதும், அடுத்த பாதியை எடுத்து பிரின்ட் போட்டுக் காட்டினேன். முதன்முதலாக இரட்டை வேட போட்டோவைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்.

அதே மாதிரி இன்னொரு சம்பவம்... ‘பாலும் பழமும்’ படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி படமாகிட்டிருந்தது. சிவாஜி இன்னொரு கல்யாணம் செய்திருப்பது தெரிந்ததும், முதல் மனைவியான சரோஜா தேவி விஷம் குடித்து இறக்குற மாதிரிதான் முதலில் கதை எழுதியிருந்தாங்க. ‘இது வழக்கமான க்ளைமாக்ஸா இருக்கும். பொதுச் சேவை செய்ய ஆசிரமத்துக்குப் போற மாதிரி வச்சா புதுசாவும் இருக்கும்... மனசை உறுத்தாமலும் இருக்கும்’னு நான்தான் இயக்குனர்கிட்ட சொன்னேன்.

சிவாஜிகிட்ட இதுபற்றி இயக்குனர் சொன்னப்போ, ‘இது யாரோட ஐடி யா?’ன்னு முரட்டுத் தொனியில் கேட்டார். ‘சிம்மையாதான் சொன்னார்’னு டைரக்டர் சொல்ல, எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. ‘இங்க வா’ன்னு என்னைக் கூப்பிட்டவர், ‘குட்... குட்... நல்லாயிருக்கு’ன்னு பாராட்டினார். சொன்னது யார்னு பார்க்காமல், சொல்ற விஷயம் என்னன்னு நினைச்ச அந்த குணம்தான் அவர் நடிகர்திலகமா உயர்ந்து நின்னதுக்குக் காரணம்.’’

இப்படி சிவாஜி பற்றி உயர்ந்த பண்புகளைப் பகிர்ந்துகொண்ட சிம்மையா, 50 வருடங்களாக தமிழ் சினிமாவில் போட்டோகிராபராக இருந்தவர். ஒரு காலத்தில் ஒயிட் அண்ட் ஒயிட் டிரஸ் கோடில், புல்லட்டில் கம்பீரமாக வலம் வந்தவர், இன்று அடையாளமே தெரியாமல் வதங்கிப் போயிருக்கிறார். இன்று ஓஹோவென்றிருக்கும் நடிகர்களில் பலர் இவரது வீட்டு வாசலில் சிபாரிசுக்காகக் காத்திருந்தது ஒரு காலம்.

இரண்டு கிரவுண்ட் வீட்டில் வளமுடன் இருந்த இவரை, சொந்தப் படம் எடுத்தது, குடும்பத்தில் ஏற்பட்ட இழப்புகள் என்று சில சூழ்நிலைகள் வாடகை வீட்டில் தள்ளியுள்ளது. இப்போது இயக்குனர் பி.மாதவனின் மகள் நடத்தும் ஒரு ப்ளே ஸ்கூலில் வேலை செய்கிறார் சிம்மையா. ‘‘நீங்கள் வாய்ப்பு வாங்கிக் கொடுத்த நடிகர்களிடம் உதவி கேட்கலாமே?’’ என்றால், ‘‘அவங்களையெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது’’ என பதறும் சிம்மையாவின் முகத்தில் மென் சோகம்.

குங்குமம் இதழில் அமலன் அவர்கள் எழுதியது .

Leave a Reply