• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி!

சினிமா

65 ஆண்டுகளாகியும் அதே அரசியல் பேசும் ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா!’

நாவலைப் படமாக்கி எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கின்றன. அதேபோல், தமிழ் சினிமா கதைகளில், வில்லனின் கதாபாத்திரம், கனகச்சிதமாகப் பொருத்தப்பட்டு, அவர்கள் வருகிற காட்சிகளெல்லாம், நாயக, நாயகியருக்கு மட்டுமின்றி, படம் பார்க்கிற நமக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும். பீதியைக் கிளப்பிவிடும். அப்படியொரு நாவல் படமாகி வெற்றி பெற்றது. அந்தப் படத்தின் வில்லன், வெகுவாக ரசிக்கப்பட்டு பேசப்பட்டார். ‘மகாதேவி’ என்கிற எம்ஜிஆர், சாவித்திரி நடித்த படத்தை யாரால்தான் மறக்கமுடியும்?

எம்ஜிஆர்., சாவித்திரி, எம்.என்.ராஜம், பி.எஸ்.வீரப்பா, ஓஏகே.தேவர், சந்திரபாபு, டி.பி.முத்துலட்சுமி, ஏ.கருணாநிதி முதலானோர் நடித்த இந்தப் படம், ஆர்.ஜி.கட்கரி என்பவரின் ‘புண்ய பிரபவ்’ எனும் நாவலைத் தழுவி சில மாற்றங்கள் செய்து, திரைப்படமாக எடுக்கப்பட்டது. பிரபல இயக்குநர் சுந்தர்ராவ் நட்கர்னி தயாரித்து இயக்கிய இந்தப் படத்துக்கு திரைக்கதை, வசனம் மற்றும் சில பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதினார்.

தமிழில் எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் வில்லன் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் ‘பஞ்ச்’ வசனங்களாக இடம்பெற்ற படம் இதுவாகத்தான் இருக்கும். பி.எஸ்.வீரப்பாவுக்கு வசனம் எழுதும் போது, கொஞ்சம் வில்லத்தனம், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் ஆவேசம், கொஞ்சம் ஜொள்ளு என்று கலந்து கட்டி கவிதைகளாக கோர்த்துக் கொடுத்திருப்பார் கண்ணதாசன். ‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்கிற வசனம், இன்றைக்கும் பிரபலம். ‘அத்தான்’ என்று எம்.என்.ராஜம், வீரப்பாவை அழைப்பார். ‘இந்த ஒற்றைவார்த்தையைக் கேட்டு இந்தக் கருணாகரன் செத்தான்’ என்பார் வீரப்பா. தெறித்துச் சிரித்தார்கள் தமிழக மக்கள்.

எம்ஜிஆர் கொள்ளை அழகுடன் காட்சி தருவார். சுறுசுறுவென நடிப்பார். அவர் சுறுசுறுப்புக்குச் சொல்லவா வேண்டும்? அவரின் தமிழ் உச்சரிப்பும் வசனம் பேசுகிற ஏற்ற இறக்கமும் நம்மை வசீகரித்துவிடும். சாவித்திரிதான் கதையின் நாயகி. இவர்தான் மகாதேவி. பிரமாதமான நடிப்பைக் கொடுத்திருப்பார். எம்.என்.ராஜம், தான் பண்பட்ட நடிகை என்பதை நிரூபித்திருப்பார். வில்லனுடன் காமெடியன் இருந்தால், அந்தக் காமெடியை பெரும்பாலும் நாம் ரசிக்கமாட்டோம்தானே. இதிலும் வீரப்பாவுடன் இருக்கும் சந்திரபாபுவை ஏனோ ரசிக்கமுடியவில்லை. ஆனால் அவரின் பாடல்கள் மட்டும் நமக்கு வெல்லக்கட்டியாக இனித்தன.

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் மெய்ம்மறந்துபோவோம்!

இப்படி, கதையும் சிறப்பு. திரைக்கதையும் அழகு. வசனங்களும் அபாரம். பாடல்களும் தேன் சுவை. பி.எஸ்.வீரப்பாவின் வெறித்தனமான ‘ஹாஹாஹாஹாஹா’ சிரிப்பு. எம்ஜிஆரின் வாள் வீச்சு என கலந்து வந்து நம்மை மயக்கினாள் ‘மகாதேவி!’ 1957ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது இந்தப்படம்.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, வைகுண்ட ஏகாதசி முதலான நாட்களில் இந்தப் படத்தை நள்ளிரவுக்காட்சியாகப் போடுவார்கள். விழாவுக்கு குடும்பத்துடன் வந்திருக்கும் கூட்டம், அப்படியே எம்ஜிஆரையும் ‘மகாதேவி’யையும் பார்த்துவிட்டு சந்தோஷமாகத் திரும்பும் என்பதையும் படம் பார்த்த நினைவுகளையும் மதுரையைச் சேர்ந்த திரை ரசிகர் கணேசன் பகிர்ந்துகொண்டார்.

படம் வெளியாகி, 66 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும், ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா’ பாடல் இன்றைக்கும் அர்த்தத்துடன் தெருவோர டீக்கடைகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. கேட்டு ரசித்தபடி, ‘ஆமாம் பட்டுகோட்டையாரே’ என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம் காமதேனு இதழில் வி. ராம்ஜி அவர்கள் எழுதியது.

Leave a Reply