• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பகல் வேஷம் போடும் கபடவேடதாரிகள் நம்மில் பலருண்டு

சினிமா

சொந்த வாழ்க்கையில்  ஒரு மாதிரியாகவும், பொது வாழ்வில் வேறொரு மாதிரியாகவும் பொய் முகத்தை வைத்துக் கொண்டு பகல் வேஷம் போடும் கபடவேடதாரிகள் நம்மில் பலருண்டு. அதிலும் அரிதாரம் பூசும் நடிகர்களிடத்திலும், அவதாரப், புருஷர்களாக காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகளிடத்திலும் இந்த குணம் நிறையவே உண்டு. இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை மனதில் வைத்துத்தான் “இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம்” என்று பாடல் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். (பிறகு சென்சார் இவ்வரிகளுக்கு அனுமதி மறுத்தபோது “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்” என்று மாறிப்போனது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவரது உன்னத குணம் போற்றுதலுக்குரியது. குணத்தில் குன்றாகத் திகழ்ந்தவர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத வண்ணம்’  என்பார்களே அதுபோன்ற ஒரு நாகரிகத்தைப் பேணிக்காத்தவர். ரவீந்தரின் எழுத்துகள் வாயிலாக இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்களை நாம் அறியும்போது நம்மையும் அறியாமல் அந்த மாமனிதர் மீது நமக்கு ஓர் அளப்பரிய மரியாதை உண்டாகி விடுகிறது.madurai 1பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் படநிறுவனம் தொடங்கி அனைத்து மொழிகளிலும் 57 படங்கள் தயாரித்து இயக்கியவர் பி.ஆர்.பந்துலு. இவர் சிவாஜியை வைத்து தயாரித்த “கப்பலோட்டிய தமிழன்”, “கர்ணன்”, “வீரபாண்டிய கட்டபொம்மன்” போன்ற படங்கள் சரித்திர சாதனை நிகழ்த்தியது. அதேபோன்று எம்.ஜி.ஆரை வைத்து அவர் தயாரித்த படங்கள் “ஆயிரத்தில் ஒருவன்”, “ரகசிய போலீஸ்-115”, “நாடோடி”, “தேடி வந்த மாப்பிள்ளை” போன்ற படங்கள் நன்றாக ஓடின. ஜெயலலிதாவை கன்னடத்தில் தான் இயக்கிய “சின்னாட கோம்பே” என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. (அவரை படவுலகுக்கு அறிமுகம் செய்தவர் ஸ்ரீதர் என பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்)

பி.ஆர்.பந்துலு தாயாரித்து இயக்கிக் கொண்டிருந்த படமான “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” துவக்க நாளின்போது நடைபெற்ற ஒரு உருக்கமான நிகழ்வை ரவீந்தர் வருணிக்கிறார். எம்.ஜி.ஆரிடம் காணப்பட்ட மனிதாபிமானத்தையும், அவர் எத்தகைய தாராள மனம் படைத்தவர், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவர் என்பதையும் நிரூபணமாக்கும் சம்பவம் இது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஒப்பனை அறையில் இருந்தபோது பந்துலு உள்ளே வருகிறார். பொதுவாகவே பந்துலு வந்தாலே எம்.ஜி.ஆர் எழுந்து நின்று மரியாதை அளிப்பது  வழக்கம்.  காரணம் எம்.ஜி.ஆரை விட அவர் ஏழு வயது மூத்தவர். அன்றும் அவ்வாறே அவர் எழுந்து நிற்க, பந்துலு அவரை அமரச்சொல்லி சைகை காட்டுகிறார். “தம்பி, உங்களை வைச்சு இப்ப படம் எடுக்கிறேன். இதுவரை  நஷ்டமேதும் இல்லாம மூணு, நாலு படம் எடுத்துட்டேன். இது என் இலட்சியப் படம். இந்த படத்தோட வெற்றியையும் நான் பார்த்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதுக்கு நீங்க தான் ஒத்துழைப்புத் தரணும்” என்று உருக்கமாகக் கூறினார். உணர்ச்சி வசப்பட்ட மக்கள் திலகம், ஒப்பனை நாற்காலியிலிருந்து இறங்கி வந்து பந்துலுவை அப்படியே அணைத்துக் கட்டிப் பிடித்துக்கொண்டார். “அண்ணே இந்த மாதிரி அவச்சொல் எல்லாம் உங்க வாயாலே வரவேக்கூடாது.” “என்னமோ தம்பி. நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்னு என் உள்மனசு சொல்லுது” என்றார் பந்துலு “அப்படிச் சொல்லாதீங்கண்ணே. நீங்க நீண்டகாலம் வாழணும் , எத்தனை படம் வேணும்னாலும் எடுங்க . என்னால முடிஞ்ச உதவியை செய்றேன் . இந்தப் படத்துக்கு எத்தனை நாள் கால்ஷீட் தேவைப்படும்? எப்பப்ப வேணும்னு சொல்லிட்டா நான் மத்த எல்லா படத்தையும்  இப்ப இருக்குற கட்சி வேலைகளையும் நிறுத்திட்டு இத மொதல்ல முடிச்சு  தர்றேன்” என்கிறார்  மக்கள் திலகம் “இது என் கடைசி படமாக இருந்தாலும் இருக்கும். இது நல்லா பிரமாண்டமா இருக்கணும்.” ‘யாருக்கு இது கடைசிப் படம்னு அவனல்ல  தீர்மானிக்கணும். நீங்க போய் ஷாட் வைங்க , இதோ வந்துட்டேன் ” என்று அவரைத் தேற்றுகிறார் மக்கள் திலகம். (இருவருக்கும் அதுதான் கடைசிப் படம் என காலம் நிர்ணயத்திருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை) பந்துலு சொன்னது போலவே அவர் வாக்கும் பலித்தும் போகிறது. ஆம். படத்தை முடிக்க பணம் புரட்டப் போன பந்துலு பெங்களூரிலேயே காலமாகிப் போகிறார். அவரது மறைவுக்கு பின்னர் சித்ரா கிருஷ்ணசாமியை அழைத்த மக்கள் திலகம் ” பந்துலு சாருக்கு நீங்க நெருங்கிய நண்பர் , இந்தப் படத்தை நான் எப்படியாவது முடித்தே ஆகணும் , அவர் எப்படி எல்லாம் எடுக்க நினைத்தாரோ அப்படி எடுக்க நினைக்கறேன் . அதை முடிக்க ஒரு தயாரிப்பாளரை நீங்களே கொண்டு வாங்க ” என்கிறார் “அந்தப் படத்துக்கு மட்டுமல்ல, பந்துலு சாருக்கும் என் காணிக்கையை அவுங்க பேசிய சம்பளத்தில் பாதி.  பந்துலு சார் டைரக்ட் செய்ய இருந்தாங்க . இப்ப அவர் இல்லே . அதனாலே டைரக்ஷன் வேலையை நானே பார்த்துக்கறேன்.  எனக்கு ஒண்ணும் வேணாம்” என்றும் சொல்கிறார் மக்கள் திலகம் . படத்தை செலவில்லாமல் சென்னையிலேயே எடுக்கலாம் என்று சொன்ன போது “வேணாங்க , ஜெய்ப்பூர் பந்துலு சார் தாய் வீடு . அந்த ஊரை நம்ம நாட்டுக்கு தெரிய வைச்சவங்க அவுங்க . அங்கேயே போய் எடுக்கலாம் ” என்கிறார் மக்கள் திலகம். அங்கேயே காட்சிகளும் படமாக்கப் பட்டது. இத்தனைக்கும் அப்பொழுது 1976 தேர்தல் களம். அரசியல் பரபரப்பு வேற.  அதற்கிடையிலும் ஓய்வேயில்லாமல் பெரியவர் பந்துலு அவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இடையுறாது உழைத்து தன் நன்றிக்கடனை பூர்த்தி செய்கிறார் மக்கள் திலகம் . படமும் முடிந்தது , தேர்தலும் முடிந்தது . டப்பிங் வேலை  மட்டும் முடியாமல் இருந்தது . கட்சியின் வெற்றிக்கு பிறகு மக்கள் திலகம் முதல்வராக தேர்வு செய்யப் பட்டு பதவி ஏற்க வேண்டும் , நாடே எதிர்பார்த்து இருந்த சூழலில் , பதவியேற்பை சில நாட்கள் தள்ளிப் போட்டார் மக்கள் திலகம் . “மதுரையை  மீட்ட சுந்தர பாண்டியன்” உட்பட மூன்று படங்களின் டப்பிங் வேலையை முடித்துக் கொடுத்தார் … பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னர் , “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” டப்பிங் வேலை முடிந்தது , மைக்கை தொட்டு முத்தமிட்டார் மக்கள் திலகம் , இரவு 11 மணிக்கு வாகினி டப்பிங் தியேட்டருக்கு வெளியே வந்தார் மக்கள் திலகம் நிலத்தை தொட்டு முத்தமிட்டார்.  பணியை முடித்த பெருமிதத்தில் நிம்மதியடைந்தார். ரவீந்தர் எடுத்துரைக்கும்மேற்கண்ட  இச்சம்பவத்தின் மூலம் எம்.ஜி.ஆர். என்ற உன்னத மனிதரின் உயர்ந்த குணத்தை அறிந்து மனம் நெகிழ்ந்து போகிறோம் நாம். .m.g.r, indraரவீந்தரின் “பொன்மனச் செம்மல்” நூலில் காணப்படும் சில சுவையான செய்திகள் ஒவ்வொன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அப்படிப்பட்ட ஒரு செய்தி திருமதி  காந்தி அவர்களைப் பற்றியது. எம்.ஜி.ஆர். என்ற தனியொரு மனிதருக்காக அவர் சட்டத்தையே மாற்றியமைத்தார் என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா? இதோ ரவீந்தரின் வார்த்தைகளிலேயே அதனை பார்ப்போம். 1979-ஆம் ஆண்டு பொன்மனச் செம்மலின் ஆட்சியைக்  கலைத்த இந்திரா காந்தி அம்மையார், எம்.ஜி.ஆ ருக்காக  ரிசர்வ் வங்கியின் சட்டத்தையே  மாற்றி அமைத்தார் என்றால், அது செம்மல் ஒருவருக்கே சாத்தியப்படும் … நடப்புக்கு ஒரு உதாரணம் சொல்லுவார்கள். நெல்லுக்குல்தான் அரிசி.அது பிரிந்து விட்டால் ஒட்டாது. அப்படிதான் நட்பும் என்று. அதையும் முறியடித்தார் செம்மல். இரண்டாவது முறை மக்களால் அரியணையில் அமர்ந்த பிறகு அன்னை இந்திரா, செம்மல் மீது மக்கள் வைத்திருக்கும் மதிப்பை உணர்ந்தார். மோதல் இருந்த போதும் சஞ்சய் காந்தி இறந்த பொழுது, இரங்கல் தெரிவிக்க சென்ற செம்மலின் உன்னத குணத்தை அறிந்தார். தமிழகம் தன் நட்பில் இல்லையென்றால் தென்னகமே தன்னாட்சிக்குள் இருக்கத் தகுதியில்லை என நினைத்து, செம்மலுக்கு ஒரு தாயானார். தாய் தோழியானார் . செம்மல் சொல்லையும் கேட்டார்.

1984 ம் ஆண்டு செம்மல் வாதநோயால் பாதிக்க பட்டு இருந்தபொழுது, அன்னை இந்திரா செம்மலின் உடல் நிலை அறிந்து பறந்து வந்தார். ஒரு நாட்டுப் பிரதமர் உடனே பறந்து வந்து பார்த்தது பெரிய விஷயம். செம்மலின் அருகே செல்ல மருத்துவர்கள் தடை விதித்திருந்ததால், அவர் இருக்கும் கருப்புக் கண்ணாடி அறையில், சிறு வெள்ளைக் கண்ணாடி வழியாக பார்த்தார்.  பார்த்துவிட்டு அன்னை கேட்ட முதல் கேள்வி “இவர் எம்.ஜி.ஆரா?” என்பதுதான். திருமதி ஜானகி அம்மாளுக்கு இந்திரா ஆறுதல் சொன்னார். அமெரிக்கா போக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். மேலும் “ரிசர்வ் வங்கியின் அன்னிய செலவாணி சட்டம் தளர்த்தப்படும், எவ்வளவு செலவானாலும் இந்த உன்னத உயிர் பிழைக்கட்டும் அவரது தர்மமே அவரைக் காக்கும், உங்கள் பிரார்த்தனையும், என் பிராத்தனையும், வெளியே நிற்கும் லட்சோப லட்சம் மக்களின் பிராத்தனையும் அதில் ஒன்றாவது பலிக்காமலா போகும்” என்று ஜானகியம்மாவை கட்டிப் பிடித்து கண்களைத் துடைத்தார் அன்னை. அதன் பிறகு செம்மல் பிரச்சாரத்துக்கு செல்லாமலே முதல்வர் ஆனது தனி வரலாறு …. இந்திரா காந்திக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடைபெற்ற மோதல்கள் மட்டுமே அறிந்து வைத்திருக்கின்ற நம்மை அவர்களிடையே இருந்த இதுபோன்ற நல்லுறவு, பெருந்தன்மை போன்றவற்றை ரவீந்தரின் எழுத்துக்கள் மூலமாகவே நாம் அறிய முடிகின்றது. தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை குணத்தில் குன்றாக விளங்கிய,  தலைசிறந்த ஒரு மாமனிதரோடு தன் நாட்களைக் கழித்தவர் ரவீந்தர்.  தன் சொந்த வாழ்வில் தனக்கேற்பட்ட அனுபவத்தை உணர்ச்சி பெருக்கால் சுவைபட இவ்வாறு வடிக்கிறார் ரவீந்தர்.
எனக்கு 1958-ஆம் ஆண்டில் திருமணம் நிச்சயமாகியிருந்தது .  ‘நாடோடி மன்னன்’  வெளி வரும் வரை  சற்று பொறுத்திரும்.  பிரமாதமாகச் செய்யலாம்  என்றார் . படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றதும் , மக்கள் திலகத்தின் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணி என்னை அழைத்து , “என்னைய்யா ஆச்சு உன் கல்யாணம் எப்ப வைச்சுக்கலாம்? ”  என்று கேட்டார். அதற்கு நான், “தேதி குறிப்பிட்டு விட்டார்கள் , அதற்காகவே வந்தேன் ” என்று சொன்னதும் ” சந்தோசம்,  எவ்வளவு வேண்டும் என்று கேட்டார் ” நான் “பதினாறு ரூபாய் வேண்டும்” என்று சொன்னேன் .பெரியவரும்,  சின்னவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் … பின்னர் பெரியவர் தயங்கித் தயங்கிச் சொன்னார் “ரவீந்தர், நாடோடி மன்னனில் புகழ் கிடைச்சிது , பணம் கிடைக்கலே , ஏதாவது  குறைச்சு தரலாமா ?” என்று கேட்டார் நான் புரிந்துக் கொண்டு “பதினாறாயிரம் கேக்கலே, வெறும் பதினாறு ரூபாய் தான்” என்றுச் சொன்னேன். கலகலவென்று சிரித்து “என்னைய்யா பதினாறு ரூபாய் கல்யாணம்? ஒரு பிளேட்டு பிரியாணிக்கு கூட ஆகாதே? ” என்று கேட்டார். “எங்கள் தாலி ஒரு கிராம் எடையில் இருக்கும் , இப்ப அதோட விலை பதினாறு ரூபாய் , அதுக்கு மட்டும் கொடுத்தா போதும், மத்தப்படி  உங்க தயவுல என் கிட்ட இருக்குற பணம் போதும் ” என்றேன் . “அப்படியா இரும் கொண்டாறேன் ” என்று உள்ளே சென்று நான் கேட்ட பணத்தை கொண்டு வந்து பெரியவரே என்னிடம் தந்து இதை செம்மல் கொடுக்கச் சொன்னார் என்று கொடுத்து விட்டுப் போய் விட, நான் அங்கேயே காத்திருந்தேன்.  உள்ளே சென்ற செம்மல் திரும்பவும் வந்தார், என்னைப் பார்த்து,  “ஏன், ரவீந்தர், இன்னும் வேணுமா ? உமக்காக பத்தாயிரம் எடுத்து வச்சிருக்கேன், தர்றேன் ” என்றார். நான் உடனே , “அதுக்கில்லே அண்ணா , அந்தப் பணத்தை உங்க கையால கொடுப்பீங்கன்னு நினைச்சேன் ” என்றேன் .. “அட முட்டாளே , என் அண்ணன் பிள்ளைக் குட்டிக் காரர் , எனக்கு அது இல்லை , அதனால் தான் அவர் கையால் கொடுக்கச் சொன்னேன் ” என்றார் … இதைக் கேட்ட நான் அழுதுவிட்டேன். செம்மலும் கண் கலங்கி விட்டார் . என்னை அணைத்து ” நல்லா இரும்” என்று வாழ்த்தினார் . இன்று நான் 6 ஆறுபிள்ளைகளுக்கு தந்தை.
எத்தனையோ குழந்தைகளின் நல்வாழ்வுக்கு உழைத்த ஒரு மாமனிதர் தனக்கு குழந்தை இல்லையே என்று அடிக்கடி நினைத்து மனம் வருந்தியதை எண்ணிப் பார்க்கும்போது நமக்கும் கண்கலங்கி விடுகிறது.
குழந்தைகளுடன் எம்,.ஜி,ஆர்.
குழந்தைகளுடன் எம்.ஜி.ஆர்.
தனக்கு குழந்தை இல்லாத பாக்கியத்தை ஏங்கி “அடுத்த பிறவின்னு ஒண்ணு இருந்தா, அதுலேயாவது, நான் பெரிய புள்ளைக்குட்டிக்காரனாகவும், சிறந்த கல்விமானாகவும் இருக்கணும்!” என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டதாக வசனகர்த்தாஆரூர் தாஸ் குறிப்பிடுகிறார். இன்னொரு முறை “என் அண்ணனுக்கு அத்தனை குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு எனக்கு ஒரே ஒரு குழந்தையைக்கூட குடுக்க மனசு வரலே பாத்திங்களா? என் உடம்புல ஓடுற அதே ரத்தந்தானே அவர் உடம்புலேயும் ஓடுது! பின்னே ஏன் இப்படி? என மனம் புழுங்கியிருக்க்றார். ரவீந்தர் குறிப்பிடும் மற்றொரு சுவையான சம்பவம் எம்.ஜி.ஆரின் பண்பட்ட குணத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது.டெய்லர்சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார். அவர் ஒருசமயம் மக்கள் திலகத்தை காண இந்தியா வந்தார். கண்டார். “காணாதது தான் தெய்வம் , நீங்கள் கண்கண்ட தெய்வம் . தெய்வம்னா காணிக்கை செலுத்தனும் … நானும் ஒரு காணிக்கை கொண்டு வந்திருக்கிறேன் . ஒரு சூட்” என்று கொடுத்தார் “அளவு எது ? நாயுடு கொடுத்தாரா?” என்று கேட்டார் மக்கள் திலகம் .”இல்லை , ஒரு உத்தேசம் தான் . என் மனக்கணக்கால் பார்த்து வெட்டி தச்சேன் ” என்று போடச் சொன்னார் , அத்தோடு ரூ20,000 பணம் கொடுத்தார் . “எதற்கு?” என்று மக்கள் திலகம் கேட்க “உங்க பெயரில் உங்களை கேட்காம கடை நடத்தறேன்,  நூத்துக்கு ஒரு டாலர் வீதம், உங்க பங்குக்கு சேர்ந்த பணம். இதுவும் என் காணிக்கை” என்றார் அந்த சிங்கப்பூர் டெய்லர் … மக்கள் திலகம் அந்த பணம் இருந்த தட்டை தொட்டு முத்தமிட்டு, தனது பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் எடுத்து அதே தட்டில் இருந்த 20,000 ரூபாய்க்கு மேல் வைத்து” என் பேர்ல நடத்தி தோல்வியடையாமல் வெற்றியடைஞ்ச உங்க உழைப்புக்கு நான் தர்ற வெகுமதி … எடுத்துக்குங்க ” என்றார் . இதுபோன்று எம்.ஜி.ஆர். வாழ்வில் நடந்த சின்னச் சின்ன நிகழ்வுகள், அவர் ஒவ்வொருவரிடமும் நடந்துக் கொண்ட விதம் அவரது தாயாள குணம், இவையாவையும்ஒன்றுவிடாமல் எழுத்து வடிவத்தில் பதிவு செய்து  நம்மை வியப்பிலாழ்த்துகிறார் ரவீந்தர்.

– அப்துல் கையூம்
 

Leave a Reply