• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தகடு.. தகடு..

சினிமா

எப்படியாவது சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் கோவையில் இருந்து ரங்கராஜ் சுப்பையா எனும் சத்யராஜ் கிளம்பி 45 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் துண்டு துக்கடா கேரக்டரில் நடித்த சத்யராஜ், வில்லனின் அடியாளாக, முறகு முழு நேர வில்லனாக பிரகாசிக்க ஆரம்பித்தார். சத்யராஜின் பிரத்யோகமான எள்ளல் கலந்த கொங்கு வட்டார மொழி அவரை கவனிக்க வைத்தது.  காக்கிச்சட்டையில் அவர் பேசிய "தகடு தகடு" வசனம் சத்யராஜின் அடையாளமாகிப் போனது. வில்லன்களில் ஒருவராக தலை காண்பித்து, ஹீரோக்களிடம் அடி வாங்கிக் கொண்டிருந்த சத்யராஜுக்கு, அவரது கல்லூரி கால நண்பன் மணிவண்ணன் இயக்குனரானது ஜாக்பாட் அடித்தது போலானது. மணிவண்ணன் இயக்கிய "நூறாவது நாள்" திரைப்படம் சத்யராஜின் வாழ்க்கையில் ஒளியேற்றியது என்று சொல்லலாம். மொட்டையுடன் கருப்புக் கண்ணாடி அணிந்த சத்யராஜைப் பார்த்து தியேட்டரே அலறியது. விஜய்காந்த், மோகன் என வெள்ளிவிழா நாயகர்கள் இருந்தாலும் கூட, இன்றும் "நூறாவது நாள்" என்று சொன்னால் சத்யராஜின் நினைவு தான் வரும். பிறகு மெயின் வில்லனாக நடித்த "24 மணி நேரம்" என்றொரு வெற்றிப்படமும் சத்யராஜ் கணக்கில் ஏறியது. 

ரஜினி, கமல், விஜய்காந்த் என அப்போதைய முன்னணி நடிகர்களுக்கு வில்லனானார் சத்யராஜ். பகல் நிலவு, மிஸ்டர் பாரத் படங்களில் வயதான கேரக்டரிலும் நடித்தார். சத்யராஜின் திரை வாழ்க்கையை உற்று கவனித்தால் அவருக்கு எல்லாவிதமான கெட்டப்பும் அப்படியே பொருந்தி போவதை காணலாம். இப்போது வரை அது தொடர்கிறது. முதல் வசந்தம் படத்தில் குங்குமப் பொட்டு கவுண்டராக  கலாட்டா செய்தது தான், பின்னாளில் அமைதிப்படைக்கான விதை. 

பிறகு அவர் வாழ்க்கையில் வசந்தமாக வீசியது தான் "கடலோரக் கவிதைகள்" படம். பாரதிராஜாவின் இயக்கத்தில் சின்னப்ப தாஸ் கேரக்டர் மக்கள் மனதில் பதிந்து போனது. கொடூர வில்லன் கேரக்டரில் இருந்து விடுபட்ட சத்யராஜை ஹீரோவாக ஏற்றுக் கொள்ள தொடங்கினார்கள்.  சின்னத்தம்பி பெரிய தம்பி, மக்கள் என் பக்கம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படங்களின் வெற்றி சத்யராஜை முன்னணி நாயகர்களில் ஒருவராக மாற்றியது. அபோதும் வித்தியாசமான கேரக்டர்கள் செய்வதை விடவில்லை. வேதம் புதிது படத்தில்.அவர் ஏற்று நடித்த பாலுத் தேவர் கதாபாத்திரத்துக்கு பிலிம்பேர் அவார்ட் கிடைத்த்து குறிப்பிடத்தக்கது. 

கொடூரமாக கொலை செய்து, பெண்களை ரேப் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்த ஒருவரை, ஹீரோவாக ஏற்றுக் கொண்டு அரவணைத்த மக்களின் மனது ஆய்வுக்கு உட்பட்டது. ஏனெனில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு கேரக்டரில் நடித்தால் அதையே முத்திரை குத்தி விடுவார்கள். அந்த வகையில் சத்யராஜ் அதிர்ஷ்டக்காரர் தான். 

சத்யராஜின் கேரியரில் மிக முக்கியமான படங்கள் பூவிழி வாசலிலே மற்றும் என் பொம்முகுட்டி அம்மாவுக்கு. இரண்டிலும் வழக்கத்துக்கு மாறான சத்யராஜ். அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு, ஜீவா, புதிய வானம், பிக்பாக்கெட், சின்னப்பதாஸ் என தொடர்ச்சியான  கமர்ஷியல் வெற்றிப் படங்கள் அவர் கிராஃபை மேலேற்றிக் கொண்டிருந்தது. 

90 களில் சத்யராஜ் படங்களைப் பற்றி பேசும் போது சத்யராஜ் + கவுண்டமணி இணையைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. இரண்டு பேரும்  கொங்கு தமிழில், நக்கல் நையாண்டி செய்வதில் வித்தகர்கள் என்பதால், இவர்கள் ஜோடி இருந்தாலே படம் மினிமம் கேரண்டி ஆனது. "நடிகன்" படக் காமெடி இன்று வரை எவர்கிரீன். அதன் பிறகு கவுண்டமணி இல்லாத சத்யராஜ் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பிரம்மா, புது மனிதன், ரிக்‌ஷா மாமா, தெற்குத் தெரு மச்சான், பங்காளி, திருமதி பழனிசாமி என இந்த பட வரிசையை எடுத்துக் கொண்டால், இந்த படங்களின் காமெடி தான் இன்று வரை நினைவில் இருக்கிறது. இது போல் ஒரு இணை இன்று வரை அமையவில்லை என்பது தான் உண்மை. 

இந்த சமயத்தில் தான் அவர் போலீஸாக நடித்த வால்டர் வெற்றிவேல் படம் மாபெரும் வெற்றிப் படமானது. அதில் தான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, ஹைடெசிபலில் கத்தி வசனம் பேசுவதை ஆரம்பித்தார் என்று நினைவு. அதன் பிறகு அவர் நடித்த வண்டிச் சோலை சின்ராசு, கட்டளை, தோழர் பாண்டியன், வீரப்பதக்கம் போன்ற படங்கள் வன்கொடுமை வகையைச் சார்ந்தவை. 

சத்யராஜை பற்றி பேசும் போது "அமைதிப்படை" பற்றி பேசாமல் கடந்து போகவே முடியாது. எவர்கிரீன் கிளாசிக். அந்தப் படத்தின் அரசியல் டயலாக்குகள், காட்சிகள், இன்று வரை பொருந்திப் போவது தான் அந்த படத்தின் வெற்றி. அமாவாசை கேரக்டர் சத்யராஜுக்கு லைப் டைம் அச்சீவ்மெண்ட். அந்த வகையில் இயக்குனர் மணிவண்ணனுக்கு தன் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டவர் சத்யராஜ். 

சத்யராஜ், கவணடர் கூட்டணியில் மணிவண்ணனும் சேர்ந்து கொள்ள, நக்கலும், நையாண்டியும் உச்சத்துக்குப் போனது. மூவர் இணையில் தாய்மாமன், மாமன் மகள் படங்கள் ஜாலி பட்டாசு... 
 "பெரியார்" மற்றும் "ஒன்பது ரூபாய் நோட்டு" படங்கள் சத்யராஜுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தன.   2000களுக்கு பிறகும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் அடம்பிடித்ததன் விளைவு பட எண்ணிக்கைகள் மட்டுமே ஏறின. சொல்லிக் கொள்ளும்படியான படங்களே குறைந்து போயின. ஹீரோ நிலையிலிருந்து இறங்கி வர மறுத்ததால் "தவமாய் தவமிருந்து" போன்ற பல பட வாய்ப்புகளை மறுத்திருக்கிறார் சத்யராஜ். பின்னாளில் அவர் வருத்தப்பட்டதும் நடந்தது. 

 

2012-ல் நண்பன் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிதும் ரசிக்கப்பட்டது. அப்போது ஆரம்பித்த செகண்ட் இன்னிங்ஸ் இன்று வரை டாப் கியரில் போய்க் கொண்டிருக்கிறது. இந்தி, தெலுங்கு என வரிசை கட்டி படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். பாகுபலியின் வெற்றி அவரை பான் இந்தியா நடிகராக மாற்றியிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. 
ஹீரோ, ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிப்பதே போதும் என்று நினைக்கிறார் போல. ஆனால் சத்யராஜுக்குள் இன்றும் ஒரு கொடூரமான வில்லன் உறங்கிக் கொண்டிருக்கிறான். அந்த வில்லன் கேரக்டரை எழுப்பிவிட்டால் தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது. அவரைத் தேடி வில்லன் கதாபாத்திரங்கள் வரவில்லையா, அல்லது இமேஜ் காரணமாக வில்லன் கதாபாத்திரத்தில்.நடிக்கவில்லையா என்பது தெரியவில்லை. அவர் வில்லனாக களமிறங்கினால் இன்று இருக்கும் டொக்கு வில்லன்களை விடவும் அட்டகாசமாக பர்பாமன்ஸ் செய்வார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது... 

Mahadevan CM

Leave a Reply