• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்வு தொடங்குமிடம் நீதானே படத்தில் ஏன் நடித்தேன்? மனம் திறந்த ஸ்ருதி பெரியசாமி

சினிமா

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக நடித்துள்ள திரைப்படம் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'. இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கியுள்ள இப்படத்தை நீலிமா இசை தயாரித்துள்ளார். இப்படம் நாளை (செப்டம்பர் 28) ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.

இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் ஷார்ட் ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், படத்தின் இயக்குனர் ஜெயராஜ் பழனி, பாடலாசிரியர்கள் ஜி கே பி மற்றும் சிவா சங்கர், இசையமைப்பாளர் தர்ஷன் குமார், தயாரிப்பாளர் நீலிமா இசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி பெரியசாமி பேசியதாவது, 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படத்தின் கதையை இயக்குனர் எனக்கு விவரித்த போதே எனக்கு பிடித்திருந்தது. ஏனெனில் நான் பணியாற்றும் மாடலிங் துறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே தருணத்தில் இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் பலர் எல்.ஜி.பி.டி எனும் பிரத்யேக சமூக குழுவில் இருக்கிறார்கள். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். இந்தப் படத்தை தயாரித்த ஷார்ட் ஃபிளிக்ஸ் மற்றும் இசை பிக்சர்ஸிற்கு நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் போது அயராது பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டுகிறேன்'' என்றார்.

நடிகை நிரஞ்சனா நெய்தியார் பேசுகையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ஷகிரா மற்றும் வினோதா கதாபாத்திரங்களை இயக்குனர் ஜெயராஜ் பழனி நேர்த்தியாக கையாண்டிருந்தார். இதில் ஷகிரா கதாபாத்திரத்தில் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்று மேலும் இது போன்ற திரைப்படங்கள் வருவதற்கு உந்துதலாக இருக்க வேண்டும். மேலும் வழக்கமான சமுதாய நடைமுறையில் இருந்து வித்தியாசமாக இயங்கும் இந்த சமூகத்திற்கு முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன் என்றார்.

Leave a Reply