• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை முற்றாக நிராகரித்தது அரசாங்கம்

இலங்கை

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

இலங்கையின் உண்மையான நிலைமையை அது பிரதிபலிக்கவில்லை என்றும் உள்நாட்டு நிலைமையை கடுமையாக திரித்து தவறாகப் புரிந்துகொண்டு அறிக்கை அமைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் பேசும் போதே ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி சுபாஷினி அருணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ள உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் தொடர்பான உறுதியான பொறிமுறைகளை முன்னெடுப்போம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம், மீள்குடியேற்றத்திற்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்றவற்றை மேற்கோள்காட்டியிருந்தார்.

மேலும் தாம் தொடர்ந்தும் நிராகரிக்கும் 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க போவதில்லை என்றும் சுபாஷினி அருணதிலக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை மக்களுக்கு பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்ட சபையின் மற்ற பொறிமுறைகளுடன் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக ஈடுபடுவோம் என்றும் அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply