• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிம் ஜாங் உன் - விளாடிமிர் புதின் விரைவில் சந்திப்பு - கவலையில் அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய அதிபரை வரும் நாட்களில் அங்கு சென்று சந்திக்க போவதாக ரஷியாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.

ஆனாலும், இரு நாட்டு எல்லைகளுக்கு இடையில் கிம் ஜாங் உன் பயணம் செய்யும் அவரது பிரத்யேக பச்சை நிற ரெயில் காணப்பட்டதாகவும், அவர் ரஷியா நோக்கி பயணிக்கிறார் என்றும் தென் கொரிய மற்றும் ஜப்பான் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய ஒரு சந்திப்பு ரஷியாவின் விலாடிவோஸ்டாக் நகரில் நிகழக்கூடும் என கடந்த வாரமே அமெரிக்காவின் உளவுப்பிரிவு, தகவல் ஒன்றை வெளியிட்டது. கடந்த 2019-ல் புதின் முதன்முறையாக இங்குதான் வட கொரிய அதிபரை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உக்ரைன் உடனான போரில் ரஷியாவின் ராணுவ தளவாட மற்றும் ஆயுத கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. வட கொரியாவிடம் ரஷிய வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பீரங்கி குண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் உள்ளது. எனவே, அந்நாட்டிடம் இருந்து இவற்றை பெற புதின் ஆர்வமாக உள்ளார். இதன் மூலம் போர் ஒரு முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்லும் என்பதால் பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்காவிற்கு அழுத்தம் தர முடியும் என அவர் நம்புவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பதிலாக எரிசக்தி, உணவு தானியம் மற்றும் அதி நவீன ஆயுத தொழில்நுட்பம் ஆகியவற்றை ரஷியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள வட கொரிய அதிபர் கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது. ரஷியாவிற்கு உதவி செய்து, உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட தனது பிம்பத்தை மாற்றி, அமெரிக்காவிற்கு எதிரான வலிமையுள்ள ஒரு நாடாக காட்டி கொள்ளவும் வட கொரியா முயன்று வருகிறது. இத்தகைய ராணுவ தொழில்நுட்பத்தை பெறுவதால், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை தாக்கும் வல்லமை வட கொரியாவிற்கு அதிகரிக்கும் என்று அந்நாடுகள் அஞ்சுகின்றன. கடந்த ஜூலை மாதம், வட கொரியா ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவை தாக்கும் சக்தி படைத்த ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் அடங்கிய கண்காட்சி ஒன்றினை காண ரஷிய ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply