• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? - சஜித் கேள்வி

இலங்கை

”ஈஸ்டர் ஞாயிறு  பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பொதுஜன பெரமுன முறையான விசாரணைகளை நடத்தியிருந்தால், சர்வதேச விசாரணையை நாம் கோரியிருக்க வேண்டியத் தேவை ஏற்பட்டிருக்காது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை தெரிந்துக் கொள்ள வேண்டியத் தேவை உள்ளது. இதன் பின்னணியின் உள்ளவர்களை நாம் சட்டத்தின் முன்பாக நிறுத்த வேண்டும்.

2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தலின்போது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உண்மைகள் கண்டறியப்படும் என மொட்டுக் கட்சியினர் மக்களிடம் வாக்குறுதி அளித்தார்கள். இதற்காக மக்களின் ஆணையும் அவர்களுக்கு கிடைத்தது. மக்களின் ஆணை கிடைத்து தற்போது வருடங்கள் கடந்து விட்டன.
ஆனால், இவர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள விசாரணைகள் என்ன? இவர்கள் உரிய விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தியிருந்தால், இன்று சபையில் இதுதொடர்பாக நாம் பேசியிருக்க மாட்டோம். எமது நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு, சர்வதேசத்தின் ஆலோசனையும் தேவைப்பட்டிருக்காது.

அத்தோடு, சர்வதேச செய்திச் சேவையொன்று இதுதொடர்பாக ஆவனப்படம் வெளியிட்டிருக்குமா?- இல்லை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முறையான விசாரணைகளை மேற்கொள்ளாத காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் ஷானி அபேசேகர, முறையான விசாரணையொன்றை அன்று மேற்கொண்டிருந்தார்.

ஆனால், அதற்கும் இந்த அரசாங்கம் தடங்கல் ஏற்படுத்தியது. எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் எனில் முடிந்தால் மீண்டும் அவரிடம் விசாரணைகளை ஒப்படையுங்கள். அதைவிடுத்து, இதுதொடர்பாக பேசிக் கொண்டு மட்டுமே இருந்தால், மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது ” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply