• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆரும் நம்பியாரும் 

சினிமா

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’. படத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்

எம்.ஜி.ஆர்., வாழ்க்கையே வெறுத்துப்போய் அந்த அறையில் உள்ள தூக்கு மேடையில் தூக்கிட்டுக்கொள்ள முயல்வதாக ஒரு காட்சி.

எம்.ஜி.ஆர். தூக்கில் தொங்குகிறார். காட்சி அமைப்பின்படி அவரது உடலின் கனம் தாங்காமல் உத்தரம் உடைந்து விழவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருந்தாலும் அப்படி விழுவதற்குள் விநாடி நேரம் எம்.ஜி.ஆரின் உடல் அந்தரத்தில் தொங்குகிறது.

கழுத்தில் மாட்டப்பட்டிருந்த கயிறு குரல்வளையை மேல்நோக்கி இழுக்க.. உடலின் கனம் கீழ் நோக்கி இழுக்க.. சுருக்குக் கயிற்றால் இழுக்கப்பட்ட கழுத்து வலது புறமாகத் திரும்புகிறது.

எம்.ஜி.ஆரின் உச்சந்தலையில் ரத்தம் ‘சுர்’ரென்று ஏறுகிறது. நெஞ்சிலோ வலி. இன்னும் சில விநாடிகள் அந்த நிலை நீடித்திருந்தால்... எம்.ஜி.ஆரின் இந்த ஜீவ மரணப் போராட்டத்திற்கிடையே உத்தரம் உடைந்துவிட்டது. தலை குனிந்து முன்புறம் சாய்ந்தபடி விழுந்த அவரது முதுகில்,  மேலே இருந்து உத்தரத்தின் கட்டைகள் உடைந்து விழுந்தன. பரபரப்புடன் படப்பிடிப்புக் குழுவினர் ஓடிவந்தனர்.

அப்போதும் தனது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காட்சியில் நடிப்பதற்குத் தகுதியற்றவன் என்று தன்னை யாரும் சொல்லிவிடக் கூடாதே.. பல்வேறு தடைகளையும் போராட்டங்களையும் தாண்டிக் கிடைத்த கதாநாயகன் வாய்ப்பு கைநழுவக் கூடாதே.. என்றுதான் எம்.ஜி.ஆரின் சிந்தனை ஓடியது. அந்த நேரத்தில் களைப்போடும் கவலையோடும் இருந்த அவரது முகத்தருகே வருகிறது தண்ணீர் நிரம்பிய கோப்பை. தண்ணீர் குடித்து எம்.ஜி.ஆர். ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக நீண்ட அந்தக் கரத்துக்கு சொந்தக்காரர் ‘வில்லன் திலகம்’ எம்.என்.நம்பியார்!

‘ராஜகுமாரி’ படத்தில் தொடங்கிய எம்.ஜி.ஆர். - நம்பியார் நட்பு கடைசி வரை பிரிக்க முடியாத உறவாக இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆஸ்தான வில்லன் நம்பியார்தான். எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’படத்திலும் நம்பியார்தான் வில்லன்.

நண்பர்களாக இருந்தாலும் திரையில் இருவரும் ஆக்ரோஷமாக மோதுவார்கள். திரையில் நிஜக் கத்தியுடன் சண்டையிடுவார்கள். வாள் சண்டை பொறி பறக்கும். ‘சர்வாதிகாரி’ படத்துக்காக சண்டையிட்டபோது  எம்.ஜி.ஆரின் கத்தி, நம்பியாரின் கட்டை விரலில் புகுந்து வெளிவந்தது.

அதேபோல, ‘அரசிளங்குமரி’ படத்தில் நம்பியார் வீசிய வாள் எம்.ஜி.ஆரின் இடது புருவத்தைப் பதம் பார்த்தது. இன்னும் இரண்டு அங்குலம் கீழே பட்டிருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும். கடைசிவரை எம்.ஜி.ஆரின் இடது புருவத்தில் அந்தத் தழும்பு இருந்தது. ஆனாலும், இதெல்லாம் தொழிலில் நடக்கும் தவறுகள் என்ற புரிதலும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட மனப்பாங்கும் இருவரிடமும் இருந்ததற்குக் காரணம், அவர்களிடம் நிலவிய ஆழமான  நட்பு! படப்பிடிப்பின்போது பலர் முன்னிலையில், எம்.ஜி.ஆரை

‘ராமச்சந்திரா...’ என்று நம்பியார் அழைக்கும் அளவுக்கு நட்பின் நெருக்கம். அந்த உரிமையை நண்பர் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். வழங்கியிருந்தார்.

Prashantha Kumar

Leave a Reply