• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கே போகும் ரயில்பாஞ்சாலி பாட்டியான கதை !

சினிமா

1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் மூலம் சினிமாவில் அறிமுகமான ராதிகா அதன்பிறகு பல தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்து 1 தேசிய திரைப்பட விருது (தயாரிப்பாளராக ), 6 பிலிம்பேர் விருதுகள் 3 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 1 சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் 1 நந்தி ஆந்திரா விருதுகளை வெல்லும் அளவுக்கு திரைப்பட உலகின் பல உச்சங்களை தொட்டவர் .

நடிகவேள் எம் ஆர் ராதா மகள் என்பதை தவிர எந்த நாடக பயிற்சியோ பின்னணியோ இல்லாமல் வளர்ந்து வந்தவர் ராதிகா . 1977ல் இயக்குனர் பாரதிராஜா தன் இல்லத்திற்கு வந்து தன்னுடைய படத்தில் நடிக்க சொல்லி கேட்டபோது ராதிகா வயது 15 தான் . நடிப்பின் அரிச்சுவடியே தெரியாதவர் தாயின் உற்சாக ஆதரவில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் . அதுவும் படம் ஓடாவிட்டால் லண்டன் திரும்பி விடலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது .

ஆனால் அந்த படம் சக்கை போடு போட இவருக்கு தொடர்ந்து படங்கள் ஒப்பந்தம் ஆயின . முதல் படம் என்பதாலும் இயக்குனர் பாரதிராஜா மேற்பார்வையில் இருந்ததாலும் இவருக்கு பிரச்னை இருக்கவில்லை .அதற்க்கு பின் வந்த படங்கள் இவருடைய நடிப்பின் பலகீனங்களை வெளிப்படுத்தியதாகவே அமைந்தது . மீண்டும் பாரதிராஜாவின் இயக்கத்தில் நிறம் மாறாத பூக்கள் படத்தில் நடித்த பின்தான் இவரை திரையுலகம் நம்பியது .

அந்த கால கட்டத்தில் எல்லா புதுமுகங்களுக்கும் இருக்கும் நிறை குறைகள் இவருக்கும் இருந்தது ஆனாலும் தொடர்ந்து ஒவ்வொரு படங்களில் அவற்றையெல்லாம் சரி செய்து .மிக சிறந்த நடிகையாக்க தன்னை பரிமளித்துக்கொண்டது இவரின் விடா முயற்சியும் உழைப்பு தான் .

எப்போதும் போல் வெற்றி ஜோடி "திரையுல செண்டிமெண்ட் தலைதூக்க இவரையும் சுதாகரையும் ஜோடியாக போட்டு பல படங்கள் தயாராயின . நடிகர் சுதாகருக்கு எப்படியோ , ஆனால் ராதிகாவின் திரைஉலக வளர்ச்சிக்கு இத்தகைய படங்கள் முட்டுக்கட்டை போட்டது . பாக்கியராஜ் அவர்களுடன் இன்று போய் நாளை வா , பாமா ருக்மணி போன்ற படங்கள் இவருக்கு பெரிய பெயரை பெற்று தராவிட்டாலும் தீங்கு தரவில்லை .

1982 ஆம் ஆண்டு வாக்கில் ஆரம்பித்து ரங்கா , மூன்று முகம் ஆகிய ரஜினியுடன் நடித்த படங்கள் வெகுஜன நடிகை அந்தஸ்தை தர ஆரம்பித்தது . அதற்க்கு பிறகு இவரின் நடிப்பு திறமையும் மெருகு ஏற தொடங்கி இருந்தது .

அதே பாக்யராஜுடன் பின்னர் நடித்த தாவணி கனவுகள் மற்றும் ரஜினியுடன் நடித்த நல்லவனுக்கு நல்லவன் படத்தை பார்த்தால் இந்த உண்மை விளங்கும் . சுய பயிற்சியின் மூலமும் நடிக்க வந்த பிறகு கற்று கொண்ட விதையும் அவர்க்கு நிரம்ப கை கொடுத்தது .

இக்கால கட்டத்தில் வெகுகாலம் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமலே இருந்தது . ( ஆரம்பத்தில் சுதாகரை உயர்த்தி கமலை பற்றிய இவர் பேச்சு தான் காரணம் என்று அப்போதைய சினிமா பத்திரிகைகள் கிசுகிசு'த்தன.) எண்பதுகளின் இறுதியில் கமல்ஹாசன் அவர்களுடனும் நடித்து அக்குறையை போக்கினார் . தெலுங்கு படமான ஸ்வாதி முத்தியம் " இணைந்து நடித்தது என்பதை விட இந்த திரைக்காவியத்தில் நடிப்பதற்க்குத்தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள் என்ற நம்மை எண்ண வைக்கும் .

நல்ல நடிகை என்ற பெயரும் எடுத்தாகிவிட்டது . விஜயகாந்தின் அறிமுகம் கிடைத்த காலத்தில் தொடர்ந்து அவர் படங்களில் நடித்தார் .விஜயகாந்த் என்றால் ராதிகா தான் கதாநாயகி என்று ரசிகர்கள் கருதும் அளவுக்கு படங்கள் தொடர்ந்தன . சில படங்கள் வெற்றியும் பெற்றன .

திரைப்படத்தில் அவருடைய கொஞ்சு தமிழ் ரொம்ப பேமஸ் .. அதையும் தொடர்ந்து அவர் திரை வாழ்வில் கலைஞர் வசனத்தில் தெள்ள தெளிவாக பேசி அந்த பேச்சையும் உடைத்தெறிந்தார் ராதிகா .

மீண்டும் ஒரு காதல் கதை (1985) என்ற தலைப்பிலான திரைப்படத்தையும் அவர் தயாரித்துள்ளார். இக்கால கட்டத்தில் நடிகை பிரதாப் போத்தனை காதல் திருமண செய்து கொண்டார் . அது ஓரிரு வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை .

அதன் பின்னர் சராசரி வேடங்கள் தொடர்ந்து வந்தது . மந்தமான அவர் திரைப்பயணத்தில் ஜீன்ஸ் படம் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணியது . இந்த கதாபாத்திரத்தின் மூலம் ராதிகா எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிப்பார் என்று அனைத்து திரைப்பட தயாரிப்பாளர்க்கும் உறுதி செய்தார் .

சினிமாவில் வெற்றி பெற்ற பிறகு, ராதிகா வித்தியாசமாக புதுமையாக ஏதாவது செய்ய விரும்பி, சின்ன திரையில் நடிக்க முடிவு செய்தார், ஏன்.. இந்த வேண்டாத வேலை இவருக்கு என்று அனைவரும் கருதிய வேளையில் , 1994 இல் ராடான் மீடியாவொர்க் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். ஆனாலும் பல

ஆரம்ப இடையூறுகளுக்குப் பிறகு ராடான் மீடியாவொர்க்ஸ் (ஐ) லிமிடெட் நிறுவனமாக விரிவுபடுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர் . சித்தி , அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, வாணி ராணி, தாமரை மற்றும் சித்தி 2 போன்ற தொடர்களை இந்த நிறுவனம் தயாரித்தது .

ராபர்ட் ராயனை இரண்டாவது திருமண செய்த பிறகு ராதிகா 2001ல் நடிகர் சரத்குமாரை மணந்தார். அவர்கள் திருமணத்திற்கு முன்பே நண்பர்களாக பழகியதோடு , நம்ம அண்ணாச்சி (1994) மற்றும் சூர்யவம்சம் (1997) ஆகிய இரண்டு படங்களில் வெற்றி ஜோடியாக நடித்திருந்தனர் .இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உண்டு.

ராபர்ட் மகள் ராயனே ஹார்டிக்கு 2016 இல் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனை மணமுடித்து வைத்த ராதிகா 2018 ல் ராயனே ஒரு மகனைப் பெற்றபோது ராதிகா பாட்டியானார். இந்த பாட்டிக்கு இப்போது வயது ஸ்வீட் 61 . இதுதான் கிழக்கே போகும் ரயில் " பாஞ்சாலி பாட்டியான கதை !

ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ்

Leave a Reply