• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நிலவில் வலம் வரும் ரோவரின் அடுத்தகட்ட பணி...

இந்தியா

நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, 'சந்திரயான்' விண்கலம் மூலம் முயற்சிகளைத் தொடங்கியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது முதல்முயற்சியாக, 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் ரூ.365 கோடியில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அது 2009-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. 11 அறிவியல் கருவிகளைத் தாங்கி சென்ற சந்திரயான்-1, நிலவில் தண்ணீா் இருப்பதை உறுதி செய்தது.

ரூ.604 கோடி செலவில் உருவான சந்திரயான்-2 விண்கலம், எல்.வி.எம். ராக்கெட் மூலம் 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. செப்டம்பர் 6-ந்தேதி நிலவின் மீது அதை இறக்கும் முயற்சியின்போது, தோல்வியடைந்தது. சந்திரயான்-2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக, தொழில் நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்ட, தானியங்கும் திறன் கொண்ட லேண்டா், ரோவருடன் ரூ. 615 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14-ந் தேதி எல்.வி.எம். மாக்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம், 18 நாட்கள் நிலவைச் சுற்றி வந்தது. கடந்த 7-ந் தேதி லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டது. லேண்டா் சாதனத்தின் மென் தரையிறக்கம், நேற்று (புதன்கிழமை) மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் 26 கிலோ எடையுள்ள ரோவர் சாதனத்தை உருவாக்கி உள்ளனர். லேண்டருக்குள் வைக்கப்பட்டிருந்த ரோவர் சாதனம் சிறிய சாய்வு தளம் வழியாக வெளியே வருவதற்கு விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்திருந்தனர். லேண்டர் தரை இறங்கியதும் நிலவின் மேற்பரப்பில் இருந்து தூசிகள் கிளம்பின. அந்த தூசிகள் தணிந்த பிறகுதான் லேண்டரை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். பூமியில் உள்ளது போன்று நிலவில் ஏற்படும் தூசிகள் உடனே விலகாது. ஈர்ப்பு சக்தி காரணமாக சில மணி நேரங்களுக்கு பிறகுதான் மாறும். அந்த வகையில் நேற்று மாலை 6.03 மணிக்கு தரை இறங்கியதும் ஏற்பட்ட தூசி விலகுவதற்கு சுமார் 3 மணி நேரம் ஆனது.

ரோவரில் உள்ள மிக நுணுக்கமான கருவிகள் தூசியால் பழுதடைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. லேண்டர் வெற்றிகரமாக தரை இறங்கிய நிலையில் 3 மணி நேரம் கழித்து ரோவரை வெளியேற்றும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு லேண்டருக்குள் இருந்து சாய்வு தள பாதை மூலம் ரோவர் வெளியேறியது. 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் சாதனம் வெளியில் வந்ததும், சிறிது தூரம் தானாக இயங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் இந்தியா தனது கருவி மூலம் நடைபயணத்தை தொடங்கி விட்டது. ரோவர் சாதனம் லேசர் கதிர்களை பாய்ச்சி ஆய்வு செய்துவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கியது.

முதலில் செ.மீ. செ.மீட்டராக அது நகர்ந்தது. பிறகு அது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆய்வு பணிகளை மேற்கொள்ள தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி ரோவர் சாதனம் தானாக இயங்கி மேலும் சில மீட்டருக்கு நகர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. ரோவர் சாதனத்தில் 2 அதிநவீன கருவிகள் இருக்கின்றன. ஏபிஎக்ஸ் எஸ் எனப்படும் கருவியானது முதலில் செயல்பட தொடங்கியது. இந்த கருவிகள் மூலம் நிலவின் மேற்பரப்பில் உள்ள ரசாயன சேர்க்கைகள் ஆய்வு செய்யப்படும். நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் எந்த அளவு உள்ளது என்பதையும் இந்த கருவி அளவிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவிக்கும். ரோவரில் லிப்ஸ் என்ற கருவியும் இருக்கிறது. இது நிலவில் மெக்னீசியம், அலுமினியம், இரும்பு, சிலிகான், பொட்டாசியம், கால்சியம், டைட்டானியம், லித்தியம், ஹைட்ரஜன் போன்ற கனிமங்கள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதை ஆய்வு செய்து தகவல் தெரிவிக்கும். நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் கூறுகள் இருப்பதை சந்திரயான்-1 திட்டம் வாயிலாக இஸ்ரோ உறுதி செய்தது. இது தொடர்பாக அமெரிக்கா நடத்திய ஆய்வுகளிலும், நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் பனிக்கட்டிகள் பெரும் அளவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தண்ணீர் பனிக்கட்டிகள் வாயிலாக, நிலவில் இருந்த எரிமலைகள் குறித்தும், விண்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் இந்த பூமிக்கு வழங்கியவை குறித்தும், பூமியில் பெருங்கடல் உருவானது பற்றியும் விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகிறது. மேலும் ஹைட்ரஜன் தயாரிக்கவும், நிலவில் ஆக்சிஜன் உருவாக்கவும், நிலவில் சுரங்கப் பணிகள், செவ்வாய் கிரகத்திற்கான பயணம் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த தென் துருவ ஆய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டுள்ள லேண்டர் சாதனமும் தன்னிச்சையாக சில ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக லேண்டரில் 5 நவீன கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ரம்பா, சேஸ்ட், இல்சா எனப்படும் அந்த கருவிகள் நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்ப மாறுபாடுகள் பற்றி ஆய்வு செய்யும். நிலவில் உள்ள மேடு, பள்ளங்களை லேண்டர் கண்காணித்து படம் பிடித்து தகவல்கள் தரும். அதுமட்டுமின்றி நிலவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதையும் லேண்டரில் உள்ள கருவிகள் மதிப்பீடு செய்யும். மேலும் நிலவில் விரிசல்கள் இருந்தால் அவை எப்படி ஏற்பட்டன. அவற்றுக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதையும் லேண்டர் சாதனத்தில் உள்ள கருவிகள் ஆய்வு செய்து தகவல்களை தரும். மொத்தத்தில் உலக விண்வெளி ஆய்வில் பல புதிய தகவல்களை லேண்டரும், ரோவரும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 சாதனங்களும் அடுத்த 13 நாட்களுக்கு தொடர்ந்து ஆய்வுகளை செய்யும். ஆயிரக்கணக்கான புகைப்படங்களுடன் தகவல்களையும் இந்த சாதனங்கள் வழங்க உள்ளன. 14 நாட்களுக்கு பிறகு இந்த இரு சாதனங்களும் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்பிட்டரும், சந்திரயான்-3 உந்துவிசை கலனும் தொடர்ந்து மேலும் சில ஆண்டுகளுக்கு சந்திரனை சுற்றி வரும். இவற்றின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-4 திட்டத்தை கையில் எடுக்க உள்ளனர்.

Leave a Reply