• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

உலகில் உள்ள முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் துபாய் சர்வதேச விமான நிலையமும் ஒன்று. எப்போதும் பரபரப்பானதாக காணப்படும். பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்கான முனைமமாக செயல்பட்டு வருகிறது. விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதுமாகவும் இருக்கும்.

கொரோனா தொற்று ஏறக்குறைய முற்றிலும் முடிவடைந்ததாக கருதப்படும் நிலையில், விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் துபாய் சர்வதேச விமான நிலையத்தை, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 41.6 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது 2019-ம் ஆண்டைவிட அதிகமாகும்.

உலகளவில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் சேவையில் முன்னணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 104 நாடுகளில் உள்ள 257 இடங்களுக்கு விமான சேவை உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 27.9 மில்லியன் பயணிகள் என்ற வகையில் இருந்தது. தற்போது அதே காலக்கட்டத்தில் சுமார் 50 சதவீதம் அதிகரித்து 41.6 மில்லியன் பயணிகளாக உயர்ந்துள்ளது. விமான நிறுவனங்கள் அதிகமான இடங்களுக்கும், அதிகமான விமானங்களையும் இயக்கி வருகின்றன. 2018-ல் 89.1 மில்லியன் பயணிகள், 2019-ல் 86.3 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையம் பார்த்திருந்தது. 2022-ல் 66 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த வருடம் 85 மில்லியனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எமிரேட் நிறுவுனம் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவில் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் துபாய்க்கு வருகை தருவது அதிகரிப்பு காரணமாக 2.9 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளது.

Leave a Reply