• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆடி கார்த்திகை திருவிழாவும் ஏழாலை அடியார்களும் - 1970களின் நெஞ்சை விட்டகலா நினைவுகள்

இலங்கை

1970களில் ஆடி மாதத்தில் வரும் மாவைக்கந்தன் ஆலய திருவிழாக் காலம் தொடங்கினால் மாவிட்டபுரத்தின் அயலூர்கள் எல்லாமே விழாக்கோலம் காணத் தொடங்கி விடும். கோடை கால வெயிலின் வெம்மையை தணிப்பதற்காக ஒவ்வொரு ஊர்களிலும் தெருக்களில் அங்கங்கே தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்து, கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் ஏனையோருக்கும் சக்கரைத் தண்ணீர் மற்றும் மோர் கொடுத்து தாக சாந்தி செய்யும் அன்பர்கள் அந்நாட்களில் அதிகம் பேர் இருந்தார்கள். எமது ஏழாலை மேற்கு பகுதியில் "உதயணன்" மற்றும் "செல்லி" ஆகியோரின் தண்ணீர்ப் பந்தல்கள் அந்நாட்களில் பிரசித்தமானவை. அந்த தண்ணீர் பந்தல்களில் இருந்தும் எமது ஊரில் இருந்த அன்னலிங்கம் அவர்களின் "சவுண்ட்ஸ்" நிலையம்  போன்ற ஏனைய தனியார் ஒலிபரப்பு சேவை நிலையங்களிலிருந்தும் அதிகாலையிலே ஒலிபெருக்கி குழாய்கள் வழியே மதுரை சோமுவின் "கோடி மலைகளிலே கொடுக்கும் மலை .... மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலில் ஆரம்பித்து சீர்காழி கோவிந்தராஜனின் "விநாயகனே வினை தீர்ப்பவனே", "முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே", "முருகா நீயல்லால் தெய்வமில்லை" போன்ற பாடல்களும் தொடர்ந்து டி. எம். சௌந்தரராஜனின் "காவல் தருவாய் கணபதியே", "உள்ளம் உருகுதய்
யா", "அழகென்ற சொல்லுக்கு முருகா" போன்ற பாடல்களும் பெங்களூர் ரமணியம்மாளின் "வேலிருக்குது மயிலிருக்குது பழனி மலையிலே", "குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்" போன்ற பாடல்களும் தொடர்ச்சியாக ஒலித்து எங்குமே பக்திமயமான சூழலை உருவாகியிருக்கும். ஆடி மாத கார்த்திகை நட்சத்திர தினத்தன்றும் மாவைக் கந்தனின் தேர்த்திருவிழா அன்றும் அயலூர்களிருந்து ஏராளமான காவடிகள் மாவைக்கந்தன் ஆலயத்தை நோக்கி செல்லும். ஏழாலையின் பல பகுதிகளிருந்தும் அதிகமான காவடிகள் ஆடி மாத கார்த்திகை தினத்தன்று செல்வது வழக்கம்; எங்கள் ஏழாலை மேற்கு பகுதியில் மடாலயத்தில் (கருணாகர பிள்ளையார்) இருந்தும் மதியாம்பத்தனை வைரவர் மற்றும் தம்புவத்தை வைரவர் கோவில்களிருந்தும் காவடிகள் பல வருடங்கள் தொடர்ந்து சென்றதாக நினைவு இருக்கிறது. ஒரு சிலர் முதுகில் செடில் குத்தியும் வேறு சிலர் கன்னங்களில் அலகு குத்தியும் காவடி எடுத்து செல்வார்கள். மடாலயத்தில் இருந்து சென்ற காவடி ஆட்ட குழுவினரோடு அடியேனும் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக காவடி எடுத்திருந்தேன். காவடியை தோழில் சுமந்தபடி கூட நடந்தும் செல்லலாம், ஆனால் கூடவே வரும் நாதஸ்வர, தவில் இசை விற்பன்னர்களின் தாள ஜதியுடன் கூடிய இசையை கேட்டால் 
கால்கள் தாமாகவே ஆட்டம் போடத் தொடங்கி விடும். ஏழாலை மேற்கு பகுதியில் இருந்து மாவிட்டபுரம் சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் ஒவ்வொரு சந்திகளிலும், வழியில் வரும் ஆலயங்களிலும் தரித்து நின்று காவடிஆடும் குழுவினரோடு கோவிலை சென்றடைய எப்படியும் 3 இலிருந்து 4 மணித்தியாலங்கள் வரை செல்லும். 

ஆடி கார்த்திகை நட்சத்திர தினத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பலர் சாமைஅரிசி (தினை) மா, தேன் மற்றும் நெய் இவற்றை கொண்டு மாவிளக்கு செய்து சாமிக்கு படைத்து பூசை முடிந்த பின்னர் கோவிலுக்கு வந்திருந்த அனைவருக்கும் மாவிளக்கை பகிர்ந்து கொடுத்து உண்பார்கள். இன்று ஆகஸ்ட் 9, 2023, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் ஆடி கார்த்திகை திருவிழா; இன்று ஏழாலையூடாக ஒரு சில பறவைக் காவடிகள் செல்லும் காட்சியை முகநூலில் பார்க்க முடிந்தது; கூடவே பழைய நினைவுகளும் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டன.

Sivakumaran Siva Sivalingam

Leave a Reply