• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்கும் ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா

சினிமா

இயக்குனரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா'. ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படம் புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இந்த திரைப்படம் ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்து, தயாராகி இருக்கும் வணிக ரீதியான படைப்பு என்ற பிரிவில் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளது. கின்னஸ் சாதனையை ஏற்று அறிவிக்கும் குழுவினரும் இது தொடர்பான சாதகமான பதிலை படக்குழுவினருக்கு வழங்கி இருக்கிறார்கள். இப்படம் கின்னஸ் சாதனையை நோக்கி பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.

இது தொடர்பாக ஜி. சிவாவிடம் பேசினோம். அதில் ஒரே ஒரு நபர் மட்டும் நடிக்கணும் என்ற ஐடியா எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படம் ஏற்கனவே நிறைய வந்துள்ளது. ஆனால் முழுக்க முழுக்க கமர்சியல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திரைக்கதையை ஒரே கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்ல விரும்பினேன். இந்தத் திரைப்படத்தை எத்தனை நாளில்... எந்தெந்த லொக்கேஷனில் படமாக்கினீர்கள்? 20 நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தினோம். படத்தில் பாடல் காட்சிகள் இருக்கின்றனவா?

இருக்கிறது. காதல் பாடல் ஒன்றும், சோகப்பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. ஒரே ஒரு நடிகர் நடிக்கும் படத்தை கமர்சியலாக எப்படி எடுத்துள்ளீர்கள்? ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளையும் திரைக்கதையில் இடம்பெற வைத்திருக்கிறோம். அது மட்டுமின்றி சமீப காலமாக நடந்த குற்றங்களை மையப்படுத்தியே திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது ஒளிப்பதிவாளரும், சண்டை பயிற்சி இயக்குனரும் கடும் சவாலாக இருந்திருக்குமே... அதைப்பற்றி..?

சண்டைக் காட்சிகளில் என்னை தவிர யாருமே திரையில் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சண்டை காட்சிகளில் எதிரியுடனான சண்டையின் போது நம்பகத்தன்மைக்காக எதிராளியின் முகத்தை காட்டாமல், காலணி மட்டும் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும். ஆனாலும் சண்டைக் காட்சியை படமாக்குவது ஒளிப்பதிவாளருக்கும், சண்டை பயிற்சி இயக்குனருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

படத்தின் பெயரை 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா' என எதற்காக வைத்தீர்கள்? படத்தின் தலைப்பு பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இது கமர்சியலான படம் என்பதற்காகவும் இந்த பெயரை சூட்டினோம்.

தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இந்த திரைப்படத்தில் என்னென்ன சவால்களை சந்தித்தீர்கள்? நீங்கள் நினைத்தது போல் காட்சியை சுதந்திரமாக படமாக்க முடிந்ததா? அல்லது சிலவற்றை தவற விட்டுட்டோமே..! என்ற எண்ணம் ஏற்பட்டதா? அனைத்து இயக்குனர்களுக்கும் எப்போதுமே இதை செய்திருக்கலாமோ... அதை செய்திருக்கலாமோ... என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது. ஆனால் அதையும் மீறி படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டில் நிறைவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து, எல்லாவற்றையும் தடுத்துவிடும். இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து கமர்சியல் அம்சங்களையும் இடம்பெற வைத்திருக்கிறோம். ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா படத்தின் அடுத்த பாகம் எப்போது...? இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. இது தமிழ் சினிமாவில் புது முயற்சி. இதுபோன்று நிறைய வித்தியாசமான படங்களை இயக்க விரும்புகிறேன். இந்தத் திரைப்படத்தை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருக்கிறோம். அவர்கள் கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி இருக்கிறோம். விரைவில் சாதகமான பதில் வரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா' எனும் திரைப்படத்தை ஜி சிவா கதையின் நாயகனாக நடித்து இயக்கி தயாரித்திருக்கிறார். ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சேகரன் செல்வா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை சந்துரு கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜே. பி. அரவிந்த் மேற்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திருமதி பாலா ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சாய் பாபா பிக்சர்ஸ் வழங்குகிறது. ஒரே ஒரு நடிகர் நடிப்பில் கமர்சியலாக உருவாகி இருக்கும் படம் என்பதால் 'ஓங்கி அடிச்சா ஒன்ற டண்ணு வெயிட்டு டா' திரைப்படத்திற்கு பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Leave a Reply