• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடையாள அட்டைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை

நாட்டில் தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த இலங்கைக்கு முற்பணமாக 450 மில்லியன் ரூபாயை இந்தியா வழங்கியுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மெதிவ், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எம்.டி. குணவர்தன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய இந்த மேற்பார்வைக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடி இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
 

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உரிய கால வரையறையின் படி அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15 வீதமான 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.

உரிய கால வரையறைக்கமைய இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், வாரத்திற்கு ஒருமுறை கூடி அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யுமாறும் சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
 

Leave a Reply