• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமல் எனும் வித்தகர்!

இலங்கை

எழுபதுகளின் தொடக்கத்தில் ஒருநாள், கொழும்பு சென்றிருந்தபோது இலங்கை வானொலியில் அப்போது செய்தி வாசிப்பாளராகவும், வேறுசில நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவுமிருந்த வீ. சுந்தரலிங்கத்தை (தாடி) சந்திப்பதற்காக வானொலி நிலைய வரவேற்பு கூடத்தில் அறிவித்துவிட்டு காத்திருக்கையில், “சுந்தரலிங்கம் ‘எயரில்’ இருக்கிறார், சற்று தாமதமாகும்’’ என்று என்னிடம் அங்குவந்து கூறி, தன்னை அறிமுகம் செய்துகொண்டவர் விமல் சொக்கநாதன்.

‘அவர் ‘எயரில்’ இருக்கிறார்’ என்ற இந்த தகவலை வரவேற்பு கூடத்தில், அவர்கள் மூலமாகவே எனக்கு தெரிவித்திருக்கமுடியும். ஆனால் அவ்வாறன்றி, தனது சகா ஒருவரைக் காண வந்தவரிடம் விமல் காண்பித்த அந்த இங்கிதம் பெரிது. அது, என்னில் பதிந்தது.

82இல் இங்கிலாந்து வந்தபோது, இலங்கை வானொலியின் மற்றைய வீ. சுந்தரலிங்கம் (அப்போலோ), பிபிசி தமிழோசைக்கு பொறுப்பாகவிருந்தார். பிபிசி சங்கர் (சங்கரமூர்த்தி) அப்போது மருத்துவ விடுமுறையில் சென்றிருந்தார்.

பிபிசி தமிழோசையின் தினசரி செய்தி வாசிப்பில் சுந்தா என்னையும் இணைத்துக்கொண்டார். ஆங்கிலத்தில் அவர் தேர்ந்துதரும் பிபிசி செய்தியாளர்களின் செய்தி அறிக்கைகளை தமிழில் நாமே மொழிபெயர்த்து, நாமே அதனை ஒலிபரப்பில் வாசிப்போம். ஆனந்தி சூரியப்பிரகாசன், விமல் சொக்கநாதன் ஆகியோருடன் இன்னும் ஓரிருவர் கலந்துகொள்வார்கள்.

அரைமணிநேர ஒலிபரப்புத்தான். செய்திகள் பதினைந்து நிமிடங்கள்வரை இடம்பெறும். எனின், தரப்படும் செய்தி அறிக்கையை அது சொல்லும் விதத்தில், அது சொல்வதை, பிறழ்வின்றி அளவான ஒரு நேரத்துள் சாரப்படுத்தியும் வெளிக்கொணரும் ஒரு வித்தைதான் அது. பொதுவாக ஒருமணி நேரத்துக்கு முன்னதாக இது தொடங்கும்.  

விமல் இந்த வித்தையில் ஒரு தீரர். தெளிவாக புரிந்து, தெளிவாக - அழகாக வெளிப்படுத்துவார். சொற் பிரயோகங்களில் ஒரு கண்ணியம். அவர் வாசிக்கும் எழுத்துப் பிரதியின் இத் தன்மைகள், அவரின் குரலில், அவரின் வாசிப்பிலும் துலங்கும். இலக்கணமான ஒருவர் - ஒரு சாமர்த்தியசாலி.

நத்தார் பண்டிகை காலங்களில் `தமிழோசை'யில் சங்கர் தயாரித்தளிக்கும் சேக்ஸ்பியரின் குறு நாடகங்கள் அக்காலங்களில் பேசப்படுபவை. விமலும் அப் பேசுபொருளுக்கு உரித்தானவர். ஒரு முறை நானும் பங்குபற்றியிருந்தேன்.

‘லண்டன் முரசு’ மாத சஞ்சிகையாக லண்டனிலிருந்து வெளிவந்தது. லண்டனிலிருந்து முதல் தமிழ் பத்திரிகையாக ‘தமிழன்’ பத்திரிகையை நண்பர்கள் இராஜகோபால், குகநாதன் ஆகியோருடன், நானும் இணைந்து தொடங்கினோம். முதற்பிரதி அச்சாகி வெளிவந்ததும் கொழும்பில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு தீர்வு தொடங்கிவிட்டது என்ற எண்ணத்தில், பத்திரிகையை தொடர்ந்து வெளியிடும் எண்ணம் கைவிடப்பட்டது. ஆனால், பின்னரும் தொடர்ந்த பிரச்னையில், இராஜகோபாலும் நானும் அதனை மீளத் தொடங்கினோம். ‘நாங்கள் தமிழர்கள்தானே’, ஒரு சில மாதங்களில் ‘தமிழன்’ பத்திரிகையிலிருந்து விலக நேர்ந்தது.

லண்டனிலிருந்து ‘தமிழோசை’ என்றொரு பத்திரிகையையும் வெளிக்கொணரவேண்டும் என்ற ஓர் ஆசையில், தனியார் வர்த்தகர் ஒருவர் அணுகி, வற்புறுத்தலுடன் சமாதானப்படுத்தியபோது, பிபிசி தமிழோசையின் பிதாமகர் சோ. சிவபாதசுந்தரமும் லண்டனில் இருந்தார். அவரும் விரும்பியதில், ‘தமிழோசை’ பத்திரிகை தொடங்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ‘ஈழகேசரி’ பெற்றதான ஒரு மதிப்பை `தமிழோசை' பெற்றது. அப்போது, ஒலிபரப்பாளரான விமல் சொக்கநாதனை ஒரு பத்திரிகையாளனாக ‘தமிழோசை’ முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. உலக விவகாரங்களை விமல் வாராவாரம் எழுதினார்.

லண்டனிலிருந்து ‘நாழிகை’ சஞ்சிகை வெளிவந்தபோது, ‘தமிழில் ஒரு ரைம்’ என்று ‘தினமணி’ குறிப்பிட்டது. விமல் சொக்கநாதன் ‘நாழிகை’யின் துணை ஆசிரிய குழுவில் ஒருவராகவிருந்தார்.

காத்திரமான விவகாரங்களை வாசகனுக்கு தெளிவாகவும், எளிதாகவும், ஆவலாகவும் அளிக்கும் சொல் ஆளுமையும், நடையும், அந்த ஆற்றலும் விமலுடையவை.

விமல் பின்னர் பரவலாக பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதினார். தன்னுடைய எழுத்தில் ஒரு ஜனரஞ்சக கவர்ச்சியை காண்பிப்பதிலும் முனைந்தார்.

பின்னர், ‘நாழிகை’யில் விமல் எழுதவில்லை.

ஜனரஞ்சகம் நல்லது. அது எல்லோருக்கும் வாகானதல்ல. ஆனால், அதில் அந்த ‘ஜிகினா’ வேலைப்பாடுகள் விமலுக்கு அவசியம்தானா என்ற ஆதங்கம், விமலின் எழுத்தாற்றலைத் தெரிந்தவர்களுக்கு இயல்பில் விசனமாகியது.

விமல் நல்ல நிகழ்ச்சி தொகுப்பாளர், குறிப்பாக, பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் அமைவாக அப் பணியை ஆற்றுவார். பேர்ளினில் பரதநாட்டிய அரங்கேற்றம் ஒன்றுக்கு அவருடன் ஒருமுறை சென்றமை, அவர்பற்றித் தெரியாத இன்னொன்றைத் தெரிந்துகொள்ள வைத்தது. பிரசாந்தி சேகரின் பரதநாட்டிய அரங்கேற்றம். அண்மையில் காலமான நாட்டிய மேதை லக்ஷ்மி விஸ்வநாதன் பிரதம விருந்தினர். விமல் அறிவிப்பாளர். லண்டனின் ஜனநாயகம் புல்லாங்குழல். கௌரவ விருந்தினராக என்னையும் அழைத்திருந்தார்கள்.

லண்டனிலிருந்து சென்ற நாங்கள் மூவரும் ஒன்றாக தங்கியிருந்தோம். நடன ஒத்திகை முடிந்து போய், சாப்பாட்டை முடித்துக்கொண்டு, சற்று ஆரம்பித்த பேச்சுத்தான். விடிந்தது தெரியவில்லை. ஒரு மெக்கா நகைச்சுவைப் படம் ஓடி முடிந்தது!

விமலா, ஜனநாயகமா? யாருக்கு யார் சளைத்தவர்! (விமல் ஒரு வழக்கறிஞர். ஜனநாயகம், கணித ஆசான்.)

ஆக, வாழ்வில் நெருக்கமாக பயணித்தவர் விமல். பிபிசி காலத்தில், வீடொன்று வாங்கும்படி ஆனந்தி அடிக்கடி சொல்வார். வாங்கிய வீட்டின் சட்ட அலுவல்களைக் கவனித்தவர்கள் விமலும் மனைவி பத்மாவும்.

செய்தித் துறை அவர் வாழ்வாகியபோது, செய்தியாகி அவர் வாழ்வு முடிந்தது.

- மாலி
`ஈழநாடு` வாரமலர்-06.08.2023

Leave a Reply