• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சீமெந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னாவெளி மக்கள் போராட்டம்

இலங்கை

பொன்னாவெளி கிராமத்தில்  ஆரம்பிக்கப்படவுள்ள சீமெந்துத்  தொழிற்சாலைக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து மக்கள் பாரிய போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராமத்தில் பிரபல சீமெந்து  நிறுவனமொன்று சீமெந்து தொழிற்சாலையொன்றை  நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக அந்நிறுவனத்தினர்  அப்பகுதியில் ஒரு ஏக்கர் காணியை முதல் கட்டமாக பெற்று ஆய்வு பணிகளை  முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலையால் தமது வளம் சுரண்டப்படுவதாகவும், எதிர்காலத்தில் நிலங்கள் உவராக மாறும் நிலையுள்ளதாகவும், சுவாசம் சார்ந்த பிரச்சனை ஏற்படும் எனவும் தெரிவித்து கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு கிராமங்களைச் சேர்ந்த 200ற்கு மேற்பட்ட மக்கள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் பொன்னாவெளி பொதுநோக்கு மண்டபத்திலிருந்து ஆரம்பித்து குறித்த நிறுவனம் ஆய்வுப்பணியை முன்னெடுத்து வரும் இடம் வரை பேரணியாக சென்றது.

ஆய்வு பணிகள் மேற்கொள்ளுகின்ற இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியாலம் வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் மத தலைவர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply