• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

இலங்கை

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20 ஆயிரம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும் 15,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்று விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக கால்வாய்களை சுத்தம் செய்யக் கூட நிதி ஒதுக்க முடியாத நிலை காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, உலக வங்கியுடன் கலந்துரையாடி, நிதி அமைச்சின் ஆதரவுடன் இரண்டு திட்டங்களுக்கு 10,000 மில்லியன் ரூபா ஒதுக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதில் கால்வாய்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்கு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

கடன் அடிப்படையில் இந்த நிதி பெற்றுக்கொள்ளப்படுவதால் நீண்ட கால பயன்பாட்டைக்கொண்ட பணிகளுக்கு இதனை செலவிட அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மகாவலி வலயத்தில் வசிக்கும் ஒரு சிலருக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக காணி உறுதிகள் இருக்கவில்லை.

எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக காணி உறுதிகளை வழங்கும் பணியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
 

Leave a Reply