• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வவுனியா தாக்குதல் சம்பவம் - பிரதான சந்தேகநபர் கைது

இலங்கை

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த கொலை மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி அகமட் ரசீம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், எதிர்வரும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2 ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடரி, கத்தி, இரும்புக்கம்பி என்பனவும் நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டே 20- 30 வயதுக்குட்பட்ட குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

பிரதான சந்தேகநபர் ஊடாக, இவர்களிடம் கொலையை மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான கூமாங்குளத்தை சேர்ந்த ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடம் வவுனியா குற்றப்புலனாய்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி அதிகாலை வவுனியா – தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்குள் பிரவேசித்த சந்தேகநபர்கள், அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வீட்டுக்கும் தீ வைத்தனர்.

இதில் குறித்த வீடு தீக்கிரையாக்கப்பட்டதில் 23 வயதுடைய பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தீக்காயங்களுக்கு உள்ளான அவரது கணவரான 35 வயதுடைய சுகந்தன் என்பவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.

மேலும், சம்பவத்தில் 2 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளும் 19 முதல் 41 வயதுக்குட்பட்ட 4 பெண்களும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் காயமடைந்த நிலையில், அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a Reply