• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே.....

சினிமா

அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் "அம்பிகாபதி"(1957) என்ற படத்தை தயாரிக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அளவில்லாத ஆனந்தம் அடைந்தார் கவியரசர் கண்ணதாசன். 
அத்திரைப்படத்தில் அவர் எழுதிய ஒரு பாடல்...
பாடல் எழுதும் முன் கவியரசருக்கு நினைவுக்கு வந்தது மகாகவி பாரதியார் எழுதிய ‘காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே, கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே’ என்ற பாடல்.
அந்த பாட்டையே அகத்தூண்டுதலாக எடுத்துக் கொண்டு பாடல் எழுத ஆரம்பித்தார் கவியரசர். அந்த பாடல்தான், ‘கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே, காவியமோ ஓவியமோ கன்னி இளமானே’ பாடல்.
பாடல் முழுக்க ஏகப்பட்ட நகாசு வேலைகள். ‘வண்ணமுக வெண்ணிலவில் கன்னி இளமானே, வண்டு வந்ததெப்படியோ கன்னி இள மானே?’ என்று ஓரிடத்தில் கேள்வி.

‘பல்வரிசை முல்லையென்றால் கன்னி இளமானே, பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே’ என்று ஒரு சின்ன கேலி.
‘சின்ன இடை மின்னலெல்லாம் கன்னி இளமானே, தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே’ என்று ஓர் ஐயம்.
அந்தப் பாடலின் மிகமிகச்சிறப்பான வரி, ‘கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே, காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே’ என்ற வரி.
பாடலை பாடி நடிக்க இருந்தவர் நடிகை P. பானுமதி என்று கேள்விப்பட்டதால், இன்னொரு நகாசு வேலையையும் கவியரசர் அந்தப் பாடலில் செய்திருந்தார்.
அந்தப் பாடலின் இறுதியில் ‘பானுமதி மாறி வரும் வானகத்து மீனே, பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே’ என பானுமதியின் பெயர் வருமாறு கவியரசர் பார்த்துக் கொண்டார்.
இந்தப் பாடலை பாடல் பதிவேற்ற அறையில் பாடும்போது பானுமதி அவர்களின் முகத்தில் கண்டிப்பாக புன்னகை மலர்ந்திருக்கும். படமாக்கப்பட்ட பாடல் காட்சியிலும் அவர் புன்னகை பூத்திருப்பது தெரியும்.
பானுமதி என்றால் சூரியநிலா என்று அர்த்தம். ‘கதிரும், நிலவும் மாறிமாறி வரும் வானத்தில் அந்த விண்மீன் கூட உன்னை பார்ப்பதற்காக தேடுகிறது’ என்று இதை அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
உண்மையில் அந்த கம்பர் மகன் அம்பிகாபதியே வந்து அவரது காதலி அமராவதியை பார்த்து பாடியிருந்தால் கூட இந்த அளவுக்கு அழகாக  பாடியிருப்பாரா என்று தெரியவில்லை. அதுதான் கவியரசரின் கவிநயம்!

- மோகன ரூபன்
 

Leave a Reply