• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொட்டை என்கிற வாழ்வோமீட்டர்.

இலங்கை

"இசை ஒரு ஓடையில் நீங்கள் பார்க்கும் நீரைப் போன்றது, அந்தக் கணத்தில் நீங்கள் பார்க்கிற நீரை உங்களால் பருகி விட முடியாது, அதைப் போலவே நீங்கள் கேட்கும் இசையும், அந்தக் கணத்தில் நீங்கள் கேட்கிற இசையை உங்களால் உங்களால் உணர்ந்து விட முடியாது. அது இசையை உருவாக்குகிறவன், இசையைக் கேட்கிறவன், இந்த இருவரின் நினைவுகள் என்று பலவற்றின் கலவை".
அநேகமாக இப்படி ஒரு விளக்கத்தை வாழும் உலகில் கொடுக்கத் தகுதியான ஒரு இசைக்கலைஞன் உண்டென்றால் அது இளையராஜாவாகத்தான் இருக்க முடியும், சாட்சாத் இதைச் சொன்னது அவரேதான். கர்நாடக இசை விழாவொன்றைத் துவக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இப்படிச் சொன்னார்.
இசையை உணர்வதும், இசையைக் குடித்து உயிர் வாழ்வதுமே சிறந்த முடிவாக இருக்கும், ஆனால், ராஜாவின் இசையை மட்டும் கொஞ்சம் பகுத்தாய்வு செய்து அதன் நுட்பங்களை உணர்ந்து குடித்துப் பின் உயிர்வாழ்தலின் மகத்துவத்தை அறிவது ஒரு அற்புதமான அனுபவம். "நெருக்கமாக இருக்கிற வீட்டுக்காரர்கள்" (Nearest Neighbors) என்றொரு பதம் இசையில் உண்டு. 
கொடுக்கப்படும் இசைக்குறிப்புகளில் ஏறத்தாழ ஒரே ஓசையை உருவாக்கும் வெவ்வேறு இசைக்கருவிகளை இப்படி அழைப்பதுண்டு, ஜனரஞ்சக இசைக் கலைஞர்கள் அல்லது இசையமைப்பாளர்கள் இப்படியான இசைக் கருவிகளை ஒன்றாகவோ, ஒரு பாடலிலோ பயன்படுத்த மாட்டார்கள், ஒரு இசைக்கோர்வையில் இந்த இரண்டின் சிறப்புகளையும் பிரித்து உணர வைப்பது கடினமானது மட்டுமில்லை சவால் மிகுந்தது. 
ஒரு வயலினையும், புல்லாங்குழலையும், கிடாரையும், சாக்ஸபோனையும் நீங்கள் ஒன்றாகவோ, அருகருகிலோ ஒரு பாடலில் பயன்படுத்த முடியும், அதுதான் எளிதான நடைமுறையாகவும் இருக்கிறது. இந்த இசைக்கருவிகளை இலகுவான பக்கத்து வீட்டுக்காரர்கள் (Easy Neighbors) என்பார்கள். ஆனால், நான் பார்த்தவரை உலகின் எந்த ஒரு புகழ்பெற்ற ஜனரஞ்சக இசையமைப்பாளரும் இலகுவான பக்கத்து வீட்டுக்காரர்களை விட்டுவிட்டு, நெருக்கமான பக்கத்துக்கு வீட்டுக்காரர்களை ஒரே பாடலில் வெற்றிகரமாக இசைக்க விட்டவர் இளையராஜாதான். 
பாடலின் மெல்லிசைக் குறிப்புகள் ஒரே மாதிரியாக இருந்து, நீங்கள் மிக நெருக்கமான இரண்டு ஒலிக் கருவிகளைப் பயன்படுத்தினால், அது மனதைக் கவருவதில் இருந்து தடம் மாறி உறுத்தலிசையாகும் வாய்ப்புகளே அதிகம்.  அதே நேரம் உங்கள் குறிப்புகள் இரண்டு வெவ்வேறு கருவிகளுக்கான தனிச்சிறப்பு கொண்ட குறிப்புகளாக இருந்து அவற்றை பொருத்துவதில் உங்கள் கற்பனை வளம் மாஸ்டராக இருக்கும் பட்சத்தில் அற்புதமானதாக அந்த இசை உருவெடுக்கும்.
என்ன ரொம்பவே டெக்னிக்கலாக இருக்கிறதா? கொஞ்சம் பொறுமையாய் இருங்கள், இளையராஜாவின் ஒரு சின்ன இசைக்குறிப்பை கேட்கும் வரையோ, நான் சொல்லும் வரையோ அப்படி இருக்கலாம், "மௌனராகம்" - 1987 இல் வெளியான இசைக்காவியத்தில் நம்மில் அனைவரும் வாழ்வில் எப்போதாவது ஒருமுறை குறைந்தது மனதுக்குள்ளாவது "ஹம்" செய்திருக்கும் பாடல், "நிலாவே வா...செல்லாதே வா", பாடலை ஒருமுறை கேளுங்கள், ஒரு சின்ன ஆலாபனை முடிந்து பாடல் துவங்குவதற்கு முன்பாக ராஜா ஒரு இசையை வழங்குவார். 
சிதார் துவக்கி வைக்க பின்னணியில் கிடார் பின்னணியில் வருடுத் துவங்கி, ஒத்திசைவாக, அதே நேரத்தில் வெவ்வேறு தளங்களில் நின்று தாலாட்டும், சித்தாரும், கிட்டாரும் ஒன்றாகப் பொருத்தி இசைக்க முடியாத நெருக்கமான பக்கத்துவீட்டுக்காரர்கள். ராஜாவின் கைகளில் இருவரும் சிக்கி வேறுவழியின்றி மனதை வருடுவார்கள்.

இந்த வகையில் இன்னொரு மிகச்சிறந்த இசைக்குறிப்பு உண்டு, புகழ்பெற்ற "சொல்லத்துடிக்குது மனசு" என்கிற திரைப்படத்தில் வரும் "பூவே செம்பூவே" பாடலைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? பாடல் துவங்கும் போது மரபான இலகுவான பக்கத்துவீட்டுக்காரர்கள் இருவரை வேலை வாங்கி இருப்பார் ராஜா. 
கிடாரும், புல்லாங்குழலும் இணைந்து ஆலாபனை செய்து பாடலுக்குள் அழைத்துப் போகும், விஷயம் அங்கே இல்லை, பல்லவி முடிந்து முதல் சரணத்துக்கு இடையில் கிடைக்கிற இடைவெளியில் ராஜா ஒரு ஜுகல் பந்தி வைப்பார், வயலினின் சீற்றத்தை பின்னணியில் ஆமோதிக்கும் தபேலா இசை ஜுகல் பந்தி. 
பொறுமை, விஷயம் அங்கேயும் இல்லை, முதல் சரணம் முடிந்து இரண்டாம் சரணம் துவங்கும் முன்பான இடைவெளியில் மனதை உலுக்கும் கிடாரின் ரீங்காரத்தை பின்னணியில் ட்ரம்ஸ் கூட்டிக் கொண்டே போய்விட்டு, யாரும் எதிர்ப்பாராத தருணத்தில் கிடாருக்குப் பின்னால் சித்தார் ஒலிக்கத் துவங்கும். தங்களுக்கே உரிய ஒலிக்குறிப்புகளையும், சிறப்பையும் இழக்காமல் இந்த இரண்டு நெருக்கமான பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் உங்களுக்கு வழங்கும் பேரின்பத்தை ராஜாவைத்தவிர யார் தான் வழங்கி விட முடியும்?
கிட்டாரை எப்போதுமே பாடல்களில் தனியாகவோ, அல்லது இலகுவான பக்கத்துக்கு வீட்டுக்காரர்களோடு இணைத்தோதான் இசையமைப்பாளர்கள் பயன்படுத்துவார்கள், சின்தசைசர் எனப்படும் கீபோர்டின் இசையோடு சேர்த்து கிடாரைப் பயன்படுத்துவது இரண்டு திசைகளில் மாடுகட்டி வண்டி ஓட்ட முயற்சி செய்வதைப் போல, ஆனால், வெற்றிகரமாக பல பாடல்களில் இந்த இரண்டையும் இணைத்து மனதை வருடும் மெல்லிசையை ராஜா வழங்கி இருக்கிறார். 
புகழ்பெற்ற, "உதயகீதம்" - 1984 திரைப்படத்தில், "தேனே தென்பாண்டி மீனே...." பாடலின் முதல் சரணத்துக்கும், இரண்டாம் சரணத்துக்கமான இடைவெளியில் 2.25 நிமிடங்களில் இருந்து 2.31 வரை இசைக்கப்படும் ஒரு குறிப்பில் சின்தசைசரும், கிடாரும் இணைந்து இசைக்கப்பட்டாலும், இரண்டு இசைக்கருவிகளின் மகத்துவத்தையும் தனியாக கேட்டு உணர முடிகிற இசை அது.
இறுதியாக ஒரு பாடல், நான் மலைத்துப் போய் வேர்க்க விறுவிறுக்க ஒரு இரவின் நடுவில் எழுந்து அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் படுத்துறங்கிய பாடல், ரொம்ப இயல்பான ஒரு நாட்டுப்புறப் பாடல் தொனியில் உருவாக்கப்பட்டது, "காசி" - 2001 திரைப்படத்தின் "ரொக்கமிருக்கிற மக்கள்......" பாடல், இந்தப் பாடலின் 3.16 நிமிடத்தில் இருந்து 3.42 வரை 26 நொடிகள் மட்டுமே இசைக்கும் ஒரு குறிப்பை தவற விட்டு விடாதீர்கள். 
வயலின்கள் கம்பீரமாக ஒரு இசைவிருந்தை வழங்க பின்னணியில் கூர்மையான புல்லாங்குழலும், ஒரே ஒரு செல்லோவும் அந்த சிம்மாசனத்தைச் சுற்றிப் பறக்கிற அற்புதப் பட்டாம்பூச்சிகளைப் போல இதுவரை கேட்ட பாடல்தானா அது என்றொரு வியப்பையும், இதயத்தை நிறுத்தி விடுகிற கலவையான உணர்வையும் ஊட்டிவிட்டு மறைந்து விடும். 
தனியாக வெட்டி அந்த இசைக்குறிப்பை மட்டும் நீங்கள் யாரிடமும் போட்டுக்காட்டினால், அது ஏதோ ஒரு புகழ்பெற்ற சிம்பொனி இசையாக இருக்கும் என்று சொல்வார்கள், ஆம், அதுதான், சிம்பொனிகளுக்கும் மேலான ராஜாவின் இசை.  
இளையராஜாவின் இருப்பென்பது என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையின் பொருளை உணரக் கிடைத்திருக்கும் ஒரு "வாழ்வோமீட்டர்", இரவுகளில் அவரது பாடல்களுள் நுழைந்து இசைக்கருவிகள் செய்கிற மாயவித்தைகளை உணரத்துவங்கினால், வாழ்வின் எத்தனை பெரிய துன்பங்களும் கடந்து பெருவாழ்வு வாழ்ந்ததொரு உணர்வைத் தோற்றுவிக்கும் மாமருந்து. 
என்னுடைய எத்தனையோ துயரமும், வாழ்வின் அழுத்தமும் சூழக் கிடந்த இரவுகளை மீட்டெடுத்து வாழ்வென்பது ஒரு கிடைத்தற்கரிய அற்புத அனுபவம் என்று உணர வைத்த இசையும், அந்த இசையை எம் தாய்மொழியில் வழங்கிய அந்தக் கலைஞனும் வாழ்வாங்கு வாழ்ந்து இறும்பூதெய்ய வேண்டும்.
மொட்டை.....உங்களை அப்படித்தான் இளம் பருவத்தில் அழைத்த நினைவு, அதில் ஒரு அந்நியோன்யமும், பெருமிதமும் கலந்திருக்கிறது.

 

கை.அறிவழகன் 

Leave a Reply