• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அராலியில் மணல் கொள்ளை - ஒன்று திரண்ட மக்கள்

இலங்கை

கடல் நீர் உட்புகாத வகையில் வயல் வெளிகளை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண் மேடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மண்ணை வெட்டி எடுத்து சென்ற டிப்பர் வாகனங்களில் ஒரு வாகனத்தை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அராலி பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் உள்ள வயல் வெளிகளுக்குள் கடல் நீர் உட்புகாத வகையில் மணல் மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த மணல் மேட்டில் உள்ள மணலை நேற்றைய தினம் 5 டிப்பர் வாகனங்களில் வந்தவர்கள், மணலை அகழ்ந்து டிப்பரில் ஏற்றிக்கொண்டு இருந்த வேளை வயல் வேலைக்கு சென்றவர்கள் , அவர்களிடம் அது குறித்து கேட்ட போது , தாம் அனுமதி பெற்று , வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவித்து விட்டு தான் மணல் அகழ்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நடத்தையில் சந்தேகம் கொண்ட வயலில் வேலைக்கு சென்றவர்கள் , கிராம சேவையாளருக்கும் , ஊர் இளைஞர்களுக்கும் அறிவித்துள்ளனர்.

அதனை அடுத்து அங்கு சென்ற கிராம சேவையாளரும் , சில இளைஞர்களும் ,அவர்களிடம் அனுமதி பத்திரத்தை கோரிய போது , அதனை எடுத்து காட்டுவது போன்று பாசாங்கு செய்து , டிப்பர் வாகனங்களை இயக்கி தப்பி ஓடினர்.

அதில் ஒரு டிப்பர் வாகனத்தை இளைஞர்கள் மடக்கி பிடித்து வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடலை அண்டிய பகுதிகளில் எமது வயல் நிலங்கள் இருப்பதனால் , மழை காலங்களில் கடல் நீர் வயல்களுக்குள் உட்புகாதவாறு மணல் மேடுகள் அமைத்துள்ளோம். அதனை இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெட்டி எடுத்து சென்றால் , வயல்களுக்குள் கடல் நீர் உட்புக கூடிய அபாயம் உள்ளது.

அவ்வாறு வயல்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தால் வயல்கள் எல்லாம் பயிர் செய்ய முடியாத நிலங்களாக மாறி விடும். அது மாத்திரமன்றில் ஊரினுள் இருக்கும் நீர் நிலைகளும் உப்பு நீராக மாற கூடிய அபாயம் உள்ளது.

கடல் நீர் உட்புகாத வகையில் அமைக்கப்பட்ட மணல் மேட்டை வெட்டியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பி சென்றவர்களையும் கைது செய்யவேண்டும். என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply