• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏம்ப்பா நாளைக்கு போய் லீவு கேக்கறியே! 

"ஏம்ப்பா நாளைக்கு ஆஃபீஸில முக்கியமா வேலை இருக்கு. நாளைக்குப் போய் லீவு கேக்கறியே! இன்னொரு நாளைக்கு எடுத்துக்கக் கூடாதா?"
"நாளைக்குத்தானே சார் எங்கப்பாவுக்கு நான் திதி கொடுக்கணும்? அதனாலதான் சார் நாளைக்கு லீவு கேக்கறேன்."
"என்னப்பா, இந்தக் காலத்தில போய் திதி, தவசம்னு எல்லாம் பேசிக்கிட்டு!"
"பிறப்பு, இறப்பு எல்லாம் காலத்துக்குத் தகுந்தாப்பல மாறுவது இல்லையே சார்! இறந்து போனவங்களுக்குத் திதி கொடுக்கறதும் அப்படித்தான்."

"சரி. திதி கொடுக்கறதுன்னா என்ன செய்வே?"
"ஐயரைக் கூப்பிட்டு மந்திரம் சொல்லி என் அப்பாவுக்கும் அவரோட மூதாதையர்களுக்கும் ஆகாரம் படைப்போம்."
"ஆகாரம் படைப்பியா? இறந்து போனவங்க வந்து சாப்பிடுவாங்களா?"
"இல்லை சார். அவங்களுக்குப் பிரதிநிதியா ரெண்டு மூணு ஏழைப்பட்டவங்களை உபசரித்து உக்காத்தி வச்சு, அவங்களுக்குப் படைப்போம்."
"ஓ! அது உங்க மூதாதையருக்குப் போய்ச் சேர்ந்திடுமாக்கும்?"
"நிச்சயமா சார்!"
"எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே?"
"நம்பிக்கைதான் சார்."
"நம்பிக்கை மட்டும் போதுமா? இறந்து போனவங்க வேறே ஏதோ ஒரு உலகத்திலே இருக்காங்கன்னு வச்சுக்கிட்டாலும் இங்கே யாரோ சிலர் சாப்பிடறது அவங்களுக்கு எப்படிப் போய்ச்  சேரும்?"
"எப்படின்னு தெரியாது சார். ஆனா போய்ச் சேரும்."
"ஒரு விஷயம் எப்படி நடக்கும்னு தெரியாம அது நடக்கும்னு எப்படி நம்பறது?"
"சார். நம்ம ஆஃபீஸிலேருந்து கொல்கத்தால இருக்கிற ஹெட் ஆஃபீசுக்கு ஃபேக்ஸ் அனுப்பறேன். அது எப்படி கொல்கத்தாவுக்குப் போய்ச் சேருதுன்னு எனக்குத் தெரியாது. அந்த விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா ஃபேக்ஸ் நிச்சயமாப் போயிடும்னு தெரியும். அது போலத்தான் சார் இதுவும்."
"சரிப்பா. உன்னோட நம்பிக்கையை நான் தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா இறந்து போனவங்க எங்கேயோ இருக்காங்கன்னு என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியவில்லை."
"'மண்ணை விட்டுப் போனாலும் உன்னை விட்டுப் போகவில்லை' ன்னு வாலி எழுதி எம். எஸ்.வி அருமையா இசை அமைச்ச ஒரு பாட்டு இருக்கு சார்!"
"நான் எம்.எஸ்,வியோட ரசிகன்கறதனால என்னை இப்படி மடக்கறியா? சரி. திதி முடிய எவ்வளவு நேரம் ஆகும்?"
'பன்னிரண்டு, ஒரு மணி ஆகி விடும் சார்.'
"அப்ப மத்தியானம் ஆஃபீசுக்கு வரலாம் இல்லே?"
"மன்னிச்சுக்கங்க சார். திதி முடிஞ்சதும் நான் ஒரு அநாதை இல்லத்துக்குப் போய் அங்கே இருக்கிற குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுத்து விட்டு, அவங்க சாப்பிட்டதும் அவங்களோட கொஞ்ச நேரம் பேசி விட்டு வருவேன் சார். இதெல்லாம் முடிய சாயந்திரம் ஆயிடும்."
"இது வேறயா? பெரிய ஆளுதான்ப்பா நீ. உன்னோட சம்பளத்தில இதெல்லாம் பண்ண முடியுதா?"
"இந்த உலகத்தில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் மூணு கடமை இருக்கு சார். அதைதான் நான் செஞ்சுக்கிட்டு வரேன்!"
"அது என்ன மூணு கடமை?"
"முதல் கடமை, தங்கள் வாழ்க்கையைத் துறந்து மற்றவர்களுக்காக உழைக்கிற சேவை மனப்பான்மை கொண்ட துறவிகளுக்கு, இரண்டாவது ஆதரவு அற்றவர்களுக்கு, மூன்றாவது  காலம் சென்ற நமது மூதாதையர்களுக்கு."
"நீ சொன்ன மூணு கடமைகள்ள முதல்ல வருவது துறவிகளுக்குச் செய்ய வேண்டியது. ஆனா நீ செய்யப் போற கடமைகள் ரெண்டாவதும் மூணாவதும்தானே? முதல் கடமையை நீ செய்யறதில்லையா?"
"செய்வேன் சார். நான் சொன்ன அநாதை ஆசிரமத்தை நடத்தராறே அவரு கல்யாணம் பண்ணிக்காம தன்னோட வாழ்க்கையைத் துறந்து ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்துக்கிட்டிருக்காரு. அவருக்கு நான் என்ன பெரிய உதவி செய்ய முடியும்? அவரை நேரில பார்த்து அவரோட சேவையைப் பாராட்டி விட்டு என்னால முடிஞ்ச ஒரு சின்ன தொகையை நன்கொடையாக் கொடுத்து விட்டு வருவேன். ராமர் பாலம் கட்ட அணில் மண் 'சுமந்து' போய்க் கொடுத்தது மாதிரி. முதல் கடமையை என்னால இந்த அளவுக்குத்தான் சார் செய்ய முடியும்."
"நீ ரொம்ப கிரேட் அப்பா. உன் கிட்டே நான் நிறையக் கத்துக்க வேண்டியிருக்கு. ஆமாம். நீ இதையெல்லாம் எங்கிருந்து கத்துக்கிட்டே?"
"சின்ன வயசிலேருந்து நான் தினம் படிச்சுக்கிட்டு வர ஒரு புத்தகத்திலிருந்து சார்."
"அப்படியா? அது என்ன புத்தகம்?"
*திருக்குறள்.*
குறள் 42:
*துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.*
பொருள்:
தன்னலம் இல்லாமல் பிறருக்காக உழைக்கிற துறவு மனப்பான்மை கொண்டவர்கள், ஆதரவற்றவர்கள், இந்த உலகத்தை வீட்டுப் போய் விட்ட மூதாதையர்கள் ஆகியோருக்கு இல்லற வாழ்க்கை நடத்துபவன் துணையாக நின்று உதவ வேண்டும்.

Krishanthi Krisha

Leave a Reply