• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறக்கவே முடியாத ஜாக்ஸன் துரை சி.ஆர்.பார்த்திபன்

சினிமா

தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களில் தனியிடம் பிடித்த படங்களின் பட்டியலில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு தனியிடம் உண்டு. கட்டபொம்மனாக நடித்த சிவாஜியை எப்படி மறக்கமுடியாதோ அதேபோல் ஜாக்ஸன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபனையும் மறக்கவே முடியாது. படம் வெளியாகி 60 ஆண்டுகளைக் கடந்துவிட்டன. 90 வயதைக் கடந்த நிலையில் இருந்த ’ஜாக்ஸன் துரை’ சி.ஆர்.பார்த்திபன், 

நடிகர் சி.ஆர்.பார்த்திபன் மனம் திறந்து பேட்டி அளித்தார். 90 வயதிலும் உற்சாகமாகவும் உத்வேகத்துடனும் நினைவாற்றலுடனும் அவர் பேசியதை, பேட்டி அளித்ததை மறக்கவே முடியாது

சொந்த ஊர் வேலூர். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரி படிப்பதற்காக சென்னைக்கு வந்தார். சென்னை லயோலாவில் சேர்ந்தார். பி.ஏ.எகனாமிக்ஸ் படித்தார். சிறுவயதில், பள்ளியில் நாடகங்களில் நடித்தவர், கல்லூரியில் நடந்த நாடகங்களிலும் நடித்தார். இவற்றுக்கெல்லாம் சிவாஜியின் நடிப்பும் வசனங்களும்தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தன என்று பார்த்திபனே தெரிவித்துள்ளார்.

’’படித்துப் பட்டம் பெற்றேன். தலைமைச் செயலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். சென்னையின் எல்லாப் பகுதிகளிலும் நாடகம் போட்டிருக்கிறோம். பல நாடகங்களில் பல வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த நாடகத்தில்.. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகமும் ஒன்று.

ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு அப்ளை செய்தேன். குமாஸ்தா வேலையோ வேறு ஏதேனும் ஒரு வேலையோ கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று காத்திருந்தேன். அழைப்பு வந்தது. ஆனால், என்னை அவர்கள் நடிகராகப் பார்த்தார்கள். ’எவ்வளவு சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அப்போது தலைமைச் செயலகத்தில் 82 ரூபாய் சம்பளம் எனக்கு. சொன்னேன். ‘150 ரூபா சம்பளம் தரோம்’ என்றார்கள். நான் யோசித்தேன். உடனே அவர்கள், ‘200 ரூபாய் தரோம்’ என்றார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ... ‘300 ரூபாய்’ என்றார்கள். சரியென்று சொல்லிவிட்டேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார். .இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படம் இந்திப்படம்.

இந்தப் படத்துக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ‘புதுமைப்பித்தன்’ படத்தில் நடித்தேன். இதில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு அண்ணனாக, நாடககோஷ்டித் தலைவனாக நடித்தேன். பாலையா அண்ணன், சந்திரபாபு எல்லாரும் நடிச்சோம். டி.ஆர்.ராஜகுமாரி கூட நடிக்கவே முடியாது. அதன் பிறகு ‘இரும்புத்திரை’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ என தொடர்ந்து நடித்தேன். இவை எல்லாமே ஜெமினி கம்பெனிப் படங்கள். ‘அன்னையின் ஆணை’ மாதிரி வெளிப்படங்களிலும் நடித்தேன். கலைஞர், எம்ஜிஆர் எல்லோரும் பின்னாளில் முதல்வரானார்கள். அதேபோல், என் டி ஆருடனும் நடித்திருக்கிறேன்.

ஜெயலலிதாவுடனும் ‘மூன்றெழுத்து’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்தி, தமிழ், தெலுங்கு என 120 படங்களில் நடித்திருக்கிறேன். எதுவும் தெரியவில்லை எனக்கு. தண்ணீர் மாதிரி, நானும் அதுபாட்டுக்கு, அதன்போக்கில் போனேன். அதிர்ஷ்டம் எனக்குக் கைகொடுத்தது என்றுதான் 

சொல்லவேண்டும்.

என் வாழ்வில், எனக்கு வசனங்கள் நன்றாகக் கொடுத்து, முக எக்ஸ்பிரஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என் நடிப்பை வெளிக்காட்டிய மிக முக்கியமான, ஒரே படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ’புதுமைப்பித்தன்’ படத்தையும் சொல்லலாம். சின்னப் பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில், ‘பணமா பாசமா’, ‘பாலசந்தர் சார் படங்கள்’, ஸ்ரீதரின் ‘சுமைதாங்கி’ என பல படங்களைச் சொல்லலாம்

ஜெமினிகணேசனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அவரைப் பிடிக்கும். நான் பி.ஏ., ஜெமினி கணேசன் பி.எஸ்.சி. அவர் படங்களில் அவருக்கு நண்பனாக பல படங்களில் நடித்திருக்கிறேன்’’ என்று தெரிவித்த பார்த்திபன், ராஜாஜிக்கு அவர்கள் ஒருவகையில் சொந்தம். அதாவது நாங்களெல்லாம் ஒரே வம்சம். ‘சக்கரவர்த்தி’ வம்சம். என் இன்ஷியலில் இருக்கும் ‘சி’ சக்ரவர்த்தியைக் குறிக்கும். அவருடைய ‘திக்கற்ற பார்வதி’யில் நடித்தேன். படத்துக்கு விருதெல்லாம் கிடைத்தது.

இவையெல்லாம் என் உழைப்பால் கிடைத்தது என்று நான் சொல்லமாட்டேன். அதிர்ஷ்டம். அப்படி அமைந்தது எனக்கு. அப்படி நல்ல காட்சிகளும் கிடைத்து, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் அடைந்து, வெளிநாட்டில் விருதெல்லாம் கிடைத்து, நன்றாகவும் ஓடி, மிகப்பெரிய வெற்றி அடைந்ததால்தான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்த என்னை மறக்காமல் இருக்கிறார்கள் ரசிகர்கள்’’ என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார். .

கிட்டத்தட்ட 120 படங்களில் நடித்திருக்கிறார். ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என ஐந்து முதல்வர்களுடன் தொடர்பில் இருந்த நடிகராகத் திகழ்ந்தார். ’கோழி கூவுது’ முதலான படங்களில் நடித்தார். ‘அண்ணே அண்ணே’ பாடலில் இவர் நடித்தது இன்னும் இவரை பிரபலப்படுத்தியது.

கடந்த வருடம் 90 வயதை எட்டிய நிலையிலும் உற்சாகமாகவும் பழைய நினைவுகளை மறக்காமலும் சிரிக்கச் சிரிக்கப் பேசிய சி.ஆர்.பார்த்திபன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று 25.1.2021ம் தேதி காலமானார்.

’என்னை ‘ஜாக்ஸன் துரை’ என்று பலரும் அழைக்கிறார்கள். அதைத்தான் நானும் விரும்புகிறேன்’ என்று சி.ஆர்.பார்த்திபன் தெரிவித்தார்.

சரித்திரத்திலும் ரசிக மனங்களிலும் ‘ஜாக்ஸன் துரை’ எப்போதும் இருப்பார்.

நன்றி: இந்து தமிழ்.

Leave a Reply